காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் தீர்க்கப்படாதிருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில் தூத்துக்குடியிலும், காயல்பட்டினத்திலும் – பொதுமக்கள் பார்வைக்காகப் பரவலாகச் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுதினமும் - நூற்றுக்கணக்கான மக்கள் வெளிநோயாளிகளாக (OUT PATIENTS) சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். அது போக - பிரசவங்கள் உட்பட பல்வேறு மருத்துவ சேவைகளும் உள்நோயாளிகள் (IN PATIENTS) என்ற அடிப்படையில் அங்கு வழங்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு இறுதியில் ஒரு மருத்துவர் கொண்டு இயங்கி வந்த இம்மருத்துவமனையில் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) உடைய தொடர் முயற்சியின் பயனாக, ஆறு மருத்துவர்கள் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இதற்கிடையே - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்கள் பிற மருத்துவமனைகளுக்கு DEPUTATION என்ற அடிப்படையில் அனுப்பப்படுவது, இதர ஊழியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக இருப்பது, ஆம்புலன்ஸ் வசதி இல்லாமை உட்பட பல்வேறு பிரச்சனைகளும் நிலவுகின்றன.
இது குறித்து - பல்வேறு தருணங்களில், சம்பந்தப்பட்ட சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவைகளுக்கு உறுதியான தீர்வுகள் வழங்கப்படவில்லை.
இப்பிரச்சனையை மக்கள் மத்தியிலும், மாவட்ட அளவிலான அதிகாரிகள், ஊடகங்கள் மத்தியிலும் கொண்டு செல்லும் விதமாக - கவன ஈர்ப்பு சுவரொட்டிகள், காயல்பட்டினம் மற்றும் தூத்துக்குடி நகரங்களின் பிரதான பகுதிகளில் - மெகா அமைப்பு சார்பாக - ஒட்டப்பட்டுள்ளன.
==========================
சுவரொட்டியில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்
==========================
தமிழக அரசே! சுகாதாரத்துறையே!
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில்...
டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை வெளி மருத்துவமனைகளுக்கு அனுப்பாதே!
24 மணி நேர மருத்துவ சேவையை உறுதி செய்!
மகப்பேறு (DGO) டாக்டர் உடனடியாக நியமனம் செய்!
கண் மருத்துவ சேவையை உடனடியாக துவக்கு!
பல் மருத்துவ சேவையை வாரம் முழுவதும் வழங்கு!
அனைத்து சேவைகளையும் வழங்கி தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்து!
ஊழியர்கள் காலியிடங்களை உடனடியாக நிரப்பு!
மருந்தகத்திற்கு தேவையான மருந்துகளை தடையில்லாமல் வழங்கு!
நோயாளிகள் தேவைக்கு ஆம்புலன்ஸ் வழங்கு!
30 வருட XRAY கருவியை மாற்றி, நவீன கருவி வழங்கு!
காலந்தாழ்த்தாமல் டயாலிசிஸ் பிரிவை துவக்கு!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளைப் பொதுமக்கள் பார்த்த காட்சிகள்:-
|