காயல்பட்டினத்தில் இரண்டாம் குடிநீர் திட்ட ஒப்பந்தம் முன்னனுபவமற்றவருக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அவலங்களைக் கருத்திற்கொண்டு, அதை ரத்து செய்து, புதிய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிடுமாறு தமிழக அரசிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் விநியோகம் முறையாக இல்லை.
50,000 மக்கள் வாழும் இவ்வூரில் சுமார் 10,000 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த 10,000 குடிநீர் இணைப்புகளுக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது.
ஏட்டில் இவ்வாறு இருந்தாலும், நடைமுறையில் கீழ்க்காணும் பிரச்சனைகள் பல மாதங்களாக உள்ளன; இது குறித்து - காயல்பட்டினம் நகராட்சியில் பலமுறை தெரிவிக்கப்பட்டு தீர்வுகள் காணப்படவில்லை.
(1) எப்போது குடிநீர் வழங்கப்படும் என்ற கால அட்டவணை பொதுமக்களுக்கு முற்கூட்டியே தெரிவிக்கப்படுவதில்லை. அனுதினமும் எப்போது குடிநீர் வரும் என பொது மக்கள் ஏங்கிய வண்ணமே உள்ளனர்.
(2) இத்தகவலை - செய்திக்குறிப்பு, SMS, WHATSAPP, உள்ளூர் தொலைக்காட்சி போன்ற எந்த எளிதான வழிகளிலும் தெரிவித்திட காயல்பட்டினம் நகராட்சி முனையவில்லை.
(3) ஒரு தனியார் அமைப்புடன் இணைந்து - தெருக்களில் தகவல் பலகை நிறுவப்போவதாக நகராட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் - தகவல் பெறுவது சாத்தியமற்றது. எப்போது குடிநீர் வரும் என நகரின் ஆண்களும், பெண்களும் அனுதினமும் சாலைகளுக்கு வந்து, தகவல் பலகையை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அந்த தனியார் அமைப்புக்கு விளம்பரம் கொடுக்கவேண்டும் என்ற சுயலாபம் நோக்கில் நகராட்சி இதனை செய்வதாக தெரிகிறது.
(4) அறிவிக்கப்பட்ட தேதிகளிலும் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. விசாரித்தால் - பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்ற பதில் - அடிக்கடி வழங்கப்படுகிறது.
(5) சில நாட்களில், அறிவிக்கப்பட்ட ஒரு பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு, மறு பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை.
(6) இதற்கு முக்கிய காரணம் - குறிப்பிட்ட சில நபர்களை (ஒரே பகுதி / ஒரே குடும்பம்) - ஒப்பந்ததாரர் பணியமர்த்தியிருப்பது ஆகும். அந்த நபர்கள் - தங்கள் பகுதியில் / குடும்பத்தில் ஏதும் விழா / நிகழ்வு என்றால், விடுமுறை எடுத்துவிடுகிறார்கள். இதனால் - குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.
(7) பொன்னங்குறிச்சியில் இருந்து வழங்கப்படும் குடிநீர், - காயல்பட்டினம் நகரில் உள்ள குடிநீர் தொட்டிகளில் ஏற்றப்படும்போது - பலமுறை தொட்டி நிரம்பி, குடிநீர் வீண் விரையம் ஆகிறது. இந்த சம்பவம் - பலமுறை, நகராட்சி வளாகம், பேருந்து நிலையம் வளாகம் மற்றும் ரெட் ஸ்டார் சங்க வளாகம் ஆகியற்றில் உள்ள தொட்டிகளில் நிகழ்ந்துள்ளன.
(8) உள்ளூரில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் போது - விநியோக குழாய்களில் கசிவு ஏற்பட்டு, தெருக்களில் எல்லாம் குடிநீர் ஓடுவது, அனுதினமும் காணப்படும் காட்சி.
(9) பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் அநேக நாட்களில் துர்நாற்றத்துடனும், கலங்கிய நிலையிலும் உள்ளது
(10) இப்பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் - குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளை - தகுதி, முன் அனுபவம் போன்ற அடிப்படையில் வழங்காமல், சுய லாப நோக்கில் காயல்பட்டினம் நகராட்சி வழங்கியிருப்பதே.
(11) பொன்னங்குறிச்சி தலைமை குடிநீர் ஏற்றம் பணிகளும், உள்ளூர் குடிநீர் விநியோகம் பணிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக - மாதவன் என்ற நபருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் அவருக்கு எந்த முன் அனுபவமும் இல்லை. கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளிலும், தகுதியான நிறுவனத்திற்கு வழங்கும் விதத்தில், முன் அனுபவம் விதிமுறைகள் இணைக்கப்படவும் இல்லை.
(12) 1.5 ஆண்டுகளில் முடிக்கப்பட்டிருக்கவேண்டிய 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் குடிநீர் திட்டம், ஏறத்தாழ 7 ஆண்டுகள் ஆகியும் முடிவு பெறவில்லை. வேடிக்கை என்னவென்றால் - முதலமைச்சர் அவர்கள் இந்த திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து விட்டார்!
எனவே - நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக செய்து முடிக்கவும், எந்த முன் அனுபவம் இல்லாத நபருக்கு வழங்கப்பட்ட - தலைமை நீரேற்றம் மற்றும் உள்ளூர் விநியோக ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்து முறையான முன் அனுபவம் நிபந்தனைகளை இணைத்து மறு ஒப்பந்தப்புள்ளி கோரிடவும், அல்லது TWAD நிறுவனத்திற்கு பராமரிப்பு பணிகளை வழங்கிடவும் வேண்டி - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர், நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|