அரசு உத்தரவையும் மீறி, காயல்பட்டினம் வழித்தடத்தை அரசுப் பேருந்துகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், பொங்கலுக்குப் பிறகு பெறப்படும் இது தொடர்பான புகார்கள் வழக்குகளாகப் பதிவு செய்யப்படும் எனவும் - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியை அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் புறக்கணிப்பது தொடர்ந்து நிகழந்துவருகிறது. இது சம்பந்தமாக - உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும்போது சில தினங்களுக்கு பிரச்சனை இல்லை என்றாலும், மீண்டும் அப்பிரச்சனை சில தினங்கள் கழித்து துவங்குகிறது.
இது குறித்து - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அவர்களை மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
அப்போது - இப்பிரச்சனை குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. பதில் வழங்கிய மேலாண்மை இயக்குனர், திருநெல்வேலி போக்குவரத்து கழக பேருந்துகள் பிரச்சனை இன்றி வருவதாகவும், பிற போக்குவரத்து கழக பேருந்துகளே புறக்கணிப்பதாகவும் தெரிவித்தார். பிற போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு - இது குறித்து தாம் மீண்டும் கடிதம் எழுதுவதாக அவர் தெரிவித்தார்.
நீண்ட நாள் நிலவும் பிரச்சனை இது என்றும், அனைத்து வகையிலும் இது குறித்து தீர்வு காண முயற்சி செய்யப்பட்டுவிட்டதாகவும் அப்போது மெகா நிர்வாகிகள் அவரிடம் தெரிவித்தனர்.
பொங்கலுக்கு பிறகும் இப்பிரச்சனை தொடர்ந்தாள், பெறப்படும் புகார்கள் - நுகர்வோர் நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகளாக பதிவு செய்யப்படுவதை தவிர வேறு வழியில்லை என அவரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இதே விபரம் - மதுரை, கும்பக்கோணம் மற்றும் கோவை போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|