காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் போதிய மின் விளக்கு வசதிகள் இல்லாததால் பயணியர் அவதிப்படுவதைப் படங்களுடன் சுட்டிக்காட்டி - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் தென்னக ரெயில்வேயிடம் ஏற்கனவே கோரப்பட்டிருந்தது. மீண்டும் நேரில் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, ஒரு வாரத்திற்குள் கூடுதல் விளக்கு வசதிகள் வழங்கப்படும் என தென்னக ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் ரயில் நிலையம் நடைமேடையில் வெளிச்சம் போதிய அளவில் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் - நவம்பர் 23 அன்று மெகா அமைப்பு சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உடனடியாக அந்த புகாரினை - அமைச்சகம், தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தின் ELECTRICAL பிரிவுக்கு அனுப்பிவைத்தது. அதனை தொடர்ந்து - அன்றைய தினமே, அப்பிரிவின் பொறுப்பு அதிகாரி, மெகா அமைப்பு நிர்வாகிகளை தொடர்புக்கொண்டு - விபரங்களை கேட்டறிந்தார். அன்றைய தினமே - காயல்பட்டினம் ரயில் நிலையம் புகைப்படங்கள் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து - டிசம்பர் 14 அன்று - திருநெல்வேலியில் உள்ள துறை சார்ந்த அதிகாரி (SSE - Electrical) திரு மாணிக்கம் - நேரடியாக காயல்பட்டினம் ரயில்வே நிலையம் வருகை புரிந்து - பார்வையிட்டார். அப்போது - மெகா நிர்வாகிகள் அவருடன் இருந்தனர்.
அவ்வேளையில் சில தினங்களில் - கூடுதல் விளக்குகள் நிறுவுவதாக அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும் - இரு வாரங்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து - இன்று மெகா நிர்வாகிகள் திரு மாணிக்கம் அவர்களை தொடர்புக்கொண்டனர்.
சில ஊழியர்கள் நீண்ட விடுமுறையில் இருப்பதால் காலதாமதம் ஆவதாக கூறிய அவர், இந்த வாரத்திற்குள் பணிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|