காயல்பட்டினத்தில் தெருநாய்களால் பொதுமக்கள் சந்திக்கும் அவதிகளைக் கருத்திற்கொண்டு, நகராட்சியிடம் நிரந்தரத் தீர்வு கோரி, 18.10.2019. அன்று, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு சார்பில் நகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு சில கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டதாகவும், நிரந்தரத் தீர்வு காணாவிடில் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவ்வமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் தெரு நாய்களினால் தொல்லை அதிகமாக உள்ளது குறித்து - பலமுறை நகராட்சியிடம் முறையிடப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி, அரசின் கவனத்தை ஈர்க்க - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) ஏற்பாட்டில் - ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டு, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண - தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தீர்மான நகல் - நகராட்சி ஆணையர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் உடனடியாக வழங்கப்பட்டது.
மேலும் - அந்த தீர்மானங்கள்படி, 30 தினங்களுக்குள் - நிரந்தர தீர்வு காணப்படவில்லையென்றால் - போராட்டம் விரிவாக்கப்படும் என்றும் - சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மக்களின் கோரிக்கை அதிகாரிகள் முன்பு எடுத்துவைக்கப்பட்டு மூன்று மாதம் நிறைவடைந்துள்ளது. நிரந்தர தீர்வு காண நகராட்சி எவ்வித நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவில்லை. இன்றளவும் - நகர் மக்கள் - தெரு நாய்களினால் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் - குறிப்பாக பிரதான சாலைகள், பேருந்து நிலையம் வளாகம் போன்றவற்றில் - ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகள் - பொதுமக்களுக்கும், வாகன போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் காணப்படுகின்றன.
இது குறித்து - பலமுறை காயல்பட்டினம் நகராட்சிக்கு எடுத்துரைக்கப்பட்டும், கண்துடைப்பு நடவடிக்கையாக அறிக்கை மட்டும், செய்தி தாள்களில் வெளியிடப்பட்டது. வேறெந்த நடவடிக்கையும் காயல்பட்டினம் நகராட்சி மேற்கொள்ளவில்லை.
இதனால் - விபத்துகள் ஏற்படும் ஆபத்தும், பொது மக்களுக்கு இன்னபிற பிரச்சனைகளும் ஏற்படும் சூழல் உள்ளது.
இவ்விரு பிரச்சனைகளுக்கும், மேலும் காலம் தாழ்த்தாமல் - துரிதமாக காயல்பட்டினம் நகராட்சி நடவடிக்கை எடுக்க கோரி - மீண்டும் நினைவூட்டல் கடிதங்கள், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகம், மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர், சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர், திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு - இன்று - வழங்கப்பட்டுள்ளது.
இவ்விரு பிரச்சனைகளுக்கும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், ஜனவரி மாதம் - மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்க விரிவான தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|