இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட (தென்பகுதி) செயற்குழுக் கூட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே. ஸாலிஹ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் களப்பணி குறித்து கலந்தாலோசிப்பதற்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தென்பகுதி ஊழியர் செயற்குழுக் கூட்டம் 05.03.2024. செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில், காயல்பட்டினத்தில் உள்ள அதன் தலைமை அலுவலகமான தியாகி பீ.எச்.எம். முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் என்.டீ. அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ். அபூ சாலிஹ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் கூட்ட அறிமுக உரையாற்றினார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்கள் முழு வீச்சில் களமிறங்கி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் நவாஸ் கனி அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைக்கு அனைவரும் பகுதி பகுதியாகச் சென்று வர வேண்டும் என்றும், அவருடைய தேர்தல் செலவினங்களுக்காக நம்மால் இயன்ற பங்களிப்பை தாராளமாக வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர் பேசினார்.
மாவட்ட, ப்ரைமரிகளின் நிர்வாகிகளான வாவு எம்.எம். ஷம்சுத்தீன், எம்.கே. முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, ஏரல் ஷாஹுல் ஹமீத், ஜே. முஹம்மத் முஹ்யித்தீன், அம்பா ஜாஃபர், குரும்பூர் ஜாஹிர், கஸ்ஸாலி ஸஹாபுத்தீன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
தேர்தல் பரப்புரையின்போது கட்சியின் அடையாளம் தாங்கி தனித்துவத்துடன் களமிறங்கிப் பணியாற்ற வேண்டும்...
கூட்டணிக் கட்சியினருடன் நல்ல சுமுகமான, நெருக்கமான உறவை வைத்துக் கொள்ள வேண்டும்...
மாவட்டத் தலைவரும், செயலாளரும் காட்டும் வழியில் வழுவாமல் நின்று, அவர்கள் நியமிக்கும் பொறுப்பாளர்களின் கீழ் இணைந்து களப்பணி ஆற்ற வேண்டும்...
தேர்தல் களத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக் கு கூட்டணியில் உரிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும்...
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதால், அவரது வெற்றிக்காக முழு வீச்சில் களப்பணியாற்றி, சமுதாயத்தின் ஒட்டுமொத்த வாக்குகளையும் பெற்றுத் தர வேண்டும்...
என்பன போன்ற கருத்துகள் கூட்டத்தில் பகிரப்பட்டன.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய தூத்துக்குடி மாவட்ட தலைவர் பீ. மீராசா மறைக்காயர் நிறைவுரையாற்றினார்.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிடும் நவாஸ் கனி அவர்களின் தேர்தல் செலவினங்களுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாகக் கொடுக்க வேண்டும் என்றும், அதன் துவக்கமாக தன் சார்பில் 2 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் அவர் அறிவித்தார். நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி கண்ணுங்கருத்துமாகக் களப்பணியாற்ற வேண்டும் என்று அவர் அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
காயல்பட்டினம் நகர பொருளாளர் கே.எம்.டீ. சுலைமான் நன்றி கூற, தகவல் தொழில்நுட்ப அணி தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் ஹாஃபிள் எஸ்.கே. சாலிஹ் துஆ பிரார்த்தனை செய்ய, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் காயல்பட்டினம், ஏரல், குரும்பூர், பேட்மாநகரம், வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர் உள்ளிட்ட - மாவட்டத்தின் தென்பகுதி ப்ரைமரிகளில் இருந்து நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|