மே 23 சனிக்கிழமையன்று – ஹிஜ்ரீ 1441ஆம் ஆண்டின் நோன்புப் பெருநாள் என ஹிஜ்ரீ கமிட்டி அறிவித்துள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் தகவலறிக்கை:-
ஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு
===============================
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இவ்வருடத்தின் புனித ரமழான் மாதம் கடந்த 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று சரியாகத் தொடங்கியது. புறக்கண்களால் பார்க்க இயலும் ரமழான் மாத 'உர்ஜூஃனில் கதீம்' இறுதிப் பிறையை இன்று 21-05-2020 வியாழக்கிழமை அதிகாலை (ஃபஜ்ரு) வேளையில் பார்த்தோம்.
22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் (அமாவாசை) புவிமைய சங்கமதினம். அன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒருகோட்டில் சங்கமித்து ரமழான் மாதத்தின் இறுதி நாளை உறுதிப்படுத்தும்.
இவ்வருடத்தின் ரமழான் மாதம் (மே 22) வெள்ளிக்கிழமை அன்றோடு 29 தினங்களோடு நிறைவடைகிறது.
எனவே மே 23-ஆம் தேதி (23-05-2020) சனிக்கிழமை அன்றுதான் ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைப் பெருநாள் தினம்.
பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதற்கு நமது மார்க்கம் ஹராம் என தடைசெய்துள்ளது. எனவே பெருநாள் தினமான சனிக்கிழமை (23-05-2020) அன்று இறைவனைப் புகழ்ந்து ஏழைகளுக்கு உணவளித்து ஈகைப் பெருநாளை தாங்களும் சிறப்பாக கொண்டாடிட பிராத்திக்கிறோம்.
வருடம்தோரும் ஹிஜ்ரி கமிட்டி சார்பில் சுமார் நாற்பதுக்கும் அதிகமான இடங்களில் பெருநாள் தொழுகை, திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். தற்போது அரசின் ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஹிஜ்ரி கமிட்டியின் பெருநாள் திடல் தொழுகை ஏற்பாடுகள் இவ்வருடம் ரத்து செய்யப்படுகிறது. பெருநாள் தொழுகையை தங்கள் இல்லங்களிலேயே தொழுது கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
அன்பின் பெருமக்களே..! பிறைகளின் கணக்கீடான ஹிஜ்ரி காலண்டரைப் பின்பற்றுவதற்கு குர்ஆன், சுன்னாவிலிருந்து பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ஒரு மாதத்தின் முடிவை, மாதம் முடிவடைவதற்கு ஒருவாரத்திற்கு முன்னதாகவே அறிந்திருந்ததை விளக்கியுள்ளோம். நபித்தோழர்கள் ஹிஜ்ரி நாட்காட்டியின் வருடக் கணக்கை தீர்மானிக்க 'இஜ்மாவுஸ் ஸஹாபா' செய்த வரலாற்றை சமர்ப்பித்துள்ளோம். மேலும் மூத்த தாபியீன்களும், முற்கால குர்ஆன் விரிவுரையாளர்களும், மத்ஹபு இமாம்களும் பிறை கணக்கீட்டை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளதை அறியத் தந்துள்ளோம்.
சூரியனும், சந்திரனும் துல்லியமான கணக்கின் படி அமைந்துள்ளன (55:5, 6:96). சந்திரனின் மன்ஜில்களை வைத்து ஆண்டுகளைக் கணக்கிடலாம் (10:5). இதன் அடிப்படையில் ஷவ்வால் முதல் நாள் சனிக்கிழமை (23-05-2020) என்பதுதான் சரியானதாகும். வல்ல அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்கள் இக்குறிப்பிட்ட தேதியைத்தான் நமக்கு அறிவிக்கின்றன (2:189).
ஒரு முஸ்லிம் நேர்வழியில்தான் நடக்க வேண்டும். சத்தியத்திற்கே சான்று பகர வேண்டும். அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளை உலகிற்கு உணர்த்திட, ஹிஜ்ரி நாட்காட்டியை மீண்டும் இவ்வுலகில் நிலைபெறச் செய்திட எங்களோடு புறப்பட்டு வாருங்கள் என அழைப்பு விடுக்கிறோம். உங்கள் அனைவருக்கும் இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
ஹிஜ்ரி கமிட்டி,
State Head Office : 160 /101, வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி – 627103.
திருநெல்வேலி மாவட்டம்.
தொடர்பு எண்கள்:
99626 22000, 99943 44292 ,
98437 77157, 99524 14885
www.mooncalendar.in
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
P.M.ஹுஸைன் நூருத்தீன்
|