எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவிலா அருளால் சஊதி அரபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 44-வது பொதுக்குழு மற்றும் காயலர் குடும்ப சங்கம நிகழ்வு கடந்த 07.02.2020 வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல் இரவு 09:30 மணி வரை, ஜித்தா வான்படை தளத்திற்கு அருகில் அமைந்துள்ள விசாலமான "அஸ்ஸஃப்வா ஓய்வில்லத்தில் சிறப்பாக நடந்தேறியது.
வரவேற்பு:
ஏற்கனவே அறிவித்தபடி காலை 07:30 மணியில் இருந்தே உறுப்பினர்கள் ஜித்தா ஷரஃபிய்யா ஆர்யாஸ் உணவக வளாகம் முன் வருகை தர, அங்கு ஏற்பாடாகியிருந்த வாகனத்தில் சகோ.அப்துல் பாஸித் தலைமையில் நிகழ்விடம் அழைத்து வரப்பட்டனர். சொந்த வாகனமுள்ளோர் முற்கூட்டியே நிகழ்விடம் வந்திருந்தனர். புனித மக்கா, மதீனா, யான்பு மற்றும் அருகாமை ஊர்களிலிருந்தும் காயலர்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் நிகழ்வுக்கு வந்திருந்தனர். வருகை தந்த அனைவரையும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு தலைவர் சகோ.பிரபு நூர்தீன் நெய்னா தலைமையில் மன்ற நிர்வாகிகள் அகமகிழ வரவேற்றனர். வந்திருந்தோர் முகமலர்ச்சியுடன் ஒருவருக்கொருவர் உற்சாகமாக உரையாடி நலம் விசாரித்துக் கொண்டனர்.
வருகை பதிவு:
வருகை பதிவேட்டில் உறுப்பினர்கள் யாவரும் தம் வருகையை பதிவு செய்து சந்தா மற்றும் நன்கொடைகள் செலுத்தினர். புதிதாக வந்துள்ளவர்கள் உறுப்பினர் படிவத்தினை நிரப்பி தங்களை இம்மன்றத்தில் உறுப்பினராகவும் இணைத்துக் கொண்டனர்.
காலை உணவு:
காலை உணவாக சுவை மிக்க இட்லி, சட்னி, சாம்பார், உளுந்துவடை, ரவை உப்புமா மற்றும் காயலின் சுவைமிகு இஞ்சி ஏலம் தேயிலையும் பஃபே முறையில் வழங்கி உபசரிக்கப்பட்டது.
விளையாட்டு போட்டிகள்:
காலை 09:30 மணியளவில் வெளியரங்க விளையாட்டு போட்டிகள் விசாலமான மைதானத்தில் சிறியோர் மற்றும் பெரியவர்களின் ஆரவாரத்துடன் ஆரம்பமானது.
வாகன டயரில் பந்தை அடித்தல்:
ஒவ்வொரு வருடமும் வழமையாக நடைபெறும் பெனால்டி கிக் போட்டிக்கு பதிலாக இந்த வருடம் சற்று வித்தியாசமாக வாகன டயரில் பந்தை அடித்தல் (நுழைத்தல்) போட்டி நடைபெற்றது. பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த விளையாட்டில் மிகவும் குதூகலமாக கலந்து கொண்டனர். பங்கு பெற்றோர் அனைவரும் உற்சாகமுடன் பள்ளிப்பருவத்திலே துள்ளி விளையாடும் சிறுவர்களாக மாறினர்.
வாலிபால் போட்டி:
அடுத்து கைப்பந்து போட்டி 6 அணிகளாக பிரிக்கப்பட்டு மிகுந்த உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் பலத்த கரவொலிகளுக்கிடையில் நடந்தேறியது. ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் பங்கு பெற்றனர்.
வேடிக்கை விளையாட்டு:
கண்களை இறுக கட்டிக்கொண்டு திறந்த வெளியில் ஓரிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் துணிகளை எடுத்து மற்றொரு இடத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் அவற்றை தொங்க விட வேண்டும். பல உறுப்பினர்கள் இந்த வேடிக்கை விளையாட்டில் கலந்து கொண்டனர். வயது வித்தியாசமின்றி பெரியவர்களும் வாலிபர்களும் பங்கு பெற்று களைகட்டிய இந்த விளையாட்டை பார்வையாளர்கள் ஆனந்தக் களிப்புடன் கண்டு இரசித்தனர்.
குட்டீஸ் போட்டிகள்:
இவ்வருட குட்டீஸ்களுக்கான போட்டிகள் அனைத்தும் சற்று வித்தியாசமாக தாய்மார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அழகிய முறையில் குழுக்கள் அமைத்து பலூன் உடைத்தல், குழு ஓட்டம், கலரிடுதல், தண்ணீரும் நுரை பஞ்சும், பலூன் காற்றால் கப்பை தள்ளுதல், பென்சிலை கவிழ்த்தல் போன்ற கலர்ஃபுல் போட்டிகளை குட்டீஸ்களுக்கு மிகச்சிறப்பாக நடத்தியிருந்தனர்.
மங்கையர்களுக்கான போட்டி:
விசாலாமான உள்ளரங்கில் மங்கையர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தேறியது. மங்கையர்களுக்குரிய போட்டிகளை சகோதரிகள் அருமையாக நடத்தினர். மங்கையர் மற்றும் மழலைகள் மகிழ்ச்சி பெருக்கால் திளைத்தனர்.
பதின் வயதினர் (ஆண்கள்) போட்டிகள்:
பதின் வயதுடைய (Teenagers) ஆண்களுக்கான போட்டிகளான வளையத்தினுள் பந்தை எறிதல், வளையத்தினுள் பந்தை ஷூட் செய்தல் மற்றும் ஸ்கிப்பிங் போன்றவற்றை சகோதரர்கள் அரபி ஷுஐபு மற்றும் முஹம்மது ஷமீம் ஆகியோர் வழமைபோல் நடத்தினர்.
குளியல்:
சிறியோர் மற்றும் பெரியோருக்கான அனைத்து வெளியரங்க போட்டிகளும் நண்பகல் 12:00 மணியளவில் நிறைவுற்றவுடன் பெரும்பாலான உறுப்பினர்கள் நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்ந்தனர்.
ஜும்ஆ தொழுகை:
மதியம் 01:00 மணி அளவில் உள்ளரங்கில் காயல் சகோதரர் பிரபு. செய்யிது முஹிய்யத்தீன் ஆலிம் காஹிரி தலைமையில் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது.
இசைப்பந்து:
ஜூம்ஆ தொழுகைக்குப்பிறகு PASSING BALL என்ற இசைப்பந்து போட்டி நடைபெற்றது. ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் (USC) பிரபல்ய இசையுடன் நடந்தேறிய இப்போட்டியில் வயது பாகுபாடின்றி அனைவரும் கலந்துகொண்டது மிகுந்த ஆரவாரத்தையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.
காயல் களரி சாப்பாடு:
காயல் மண்ணுக்கு சொந்தமான சுவைமிகுந்த களரி சாப்பாடு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. கமகமக்க சுவைமிகு களறி கறி, கத்தரிக்கா மாங்கா, புளியானம் என காயலை நினைவுபடுத்தி அதன் அதீத மணத்தால் மீண்டும் காயல் மண்ணுக்கே அனைவரையும் அழைத்துச் சென்றது. இச்சுவைமிக்க களரி சாப்பாட்டை யான்பு சகோ.கலவா இபுறாஹீம் தலைமையிலான பிரத்தியேக குழு சிறப்புற தயார் செய்திருந்தார்கள்.
உண்டு களித்து ஓய்வெடுக்கும் வேளையிலே இன்னிசை இளவல் சகோ. எம்.எஃப். யாகூத்துல் அர்ஷ் தனது காந்தக்குரலால் மன்றத்தின் முன்னாள் தலைவர் குளம் அஹ்மது முஹ்யித்தீன் மன்றத்தின் சேவைகளை பாராட்டி இயற்றிய பாடலை பாடி காதுக்கினிய விருந்தை தந்தார்.
உள்ளரங்க போட்டிகள்:
சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ் உடைய ஏற்பாட்டில் வடிவமைக்கப்பட்டிருந்த "கஹூத்" என்ற ஸ்மார்ட் ஃபோன் கேள்வி-பதில் விளையாட்டு மிக அற்புதமாக இருந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. இவ்விளையாட்டில் நம் நகர் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன. இதன் மூலம் நமதூரைப் பற்றி நாம் அறியாத நிறைய விபரங்கள் அறிந்து கொண்டதாக இதில் கலந்து கொண்டோர் மற்றும் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
அடுத்து சகோ.எம்.ஏ.ஆதம் அபுல்ஹசன் நடத்திய சைகை மொழியறிந்து விடை சொல்லும் குழு விளையாட்டு நிகழ்ச்சி மிகுந்த வேடிக்கையாகவும் குதூகலமாகவும் இருந்தது.
அஸ்ர் தொழுகை:
அஸ்ர் தொழுகை முடிந்து பருப்பு வடையுடன் காயல் இஞ்சி தேயிலை அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சி:
குழந்தைகளின் தனித்திறமையை வெளிக்கொணரவும் மேடை பயத்தை போக்கும் முகமாகவும் குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அவர்களுக்கே உரிய அழகிய குரலில் குர்ஆன் கிராஅத் , சிற்றுரை வழங்குதல், பாட்டு பாடுதல், ஆங்கில ரைம்ஸ் என பல விடயங்கள் தாய்மார்களின் மனங்குளிர நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மஃக்ரிப் தொழுகை கூட்டாக நடைபெற்றது.
EMPOWERMENT THROUGH EDUCATION:
மஃக்ரிப் தொழுகைக்குப்பிறகு சஊதி அரபியா - ஜாஸான் நகர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் நமதூர் சகோதாரர் முனைவர் தமீமுல் அன்சாரி M.A., M. Phil., LL.B, Ph.D. அவர்கள் "EMPOWERMENT THROUGH EDUCATION" எனும் தலைப்பில் அரசு வேலை வாய்ப்பின் அவசியத்தை சிறந்த மேற்கோள்களுடன் விவரித்தார். நம் குடும்பத்தில் ஒருவராவது அரசு பணியில் அமர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டுமென்றும் அதற்கான ஆயத்தங்களை தாமதமின்றி நாம் இப்போதே முன்னெடுக்கவேண்டுமென்றும் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
பொதுக்குழு கூட்டம்:
மன்றத்தின் 44 வது பொதுக்குழு கூட்டம் மன்றத்தின் ஆலோசகர் சகோ.M.A.செய்யிது இப்ராஹீம் தலைமையில் நடைபெற்றது. காயல் மற்றும் ரியாத், தம்மாம் பகுதியிலிருந்து வருகை தந்த பிரமுகர்கள் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். சகோ.அல்ஹாஃபிழ் M.N.முஹம்மது ஸாலிஹ் (மக்கா) இறைமறை ஓத, மன்றச்செயலர் சகோ.M.W.ஹாமீது ரிஃபாய் அனைவரையும் வரவேற்றார்.
மன்ற செயல்பாடுகள்:
இதுவரை நம் மன்றம் செய்த அளப்பரிய பணிகள் குறித்த விபரங்களையும், மன்றம் கடந்து வந்த பாதைகளையும், நாம் இனி செய்ய வேண்டிய சேவைகள் குறித்த விளக்கங்களையும் தெளிவாக தந்தார் கூட்டத் தலைவர் சகோ.M.A.செய்யிது இப்ராஹீம்.
நிதி நிலை அறிக்கை:
சந்தா மற்றும் நன்கொடைகளின் வரவு மற்றும் தற்போதைய இருப்பு பற்றியும் மன்றம் இதுநாள் வரை வழங்கிய உதவிகளின் விபரங்களையும் விரிவாக தந்தார் பொருளர் சகோ.M.S.L.முஹம்மது ஆதம்.
பாடல் - கவி:
மன்றத்தின் சேவைகளை விளக்கி இயற்றப்பட்ட அழகிய பாடலை காயல் பாடகர் சகோ.M.F.யாகூத்துல் அர்ஷ் பாடினார். அவரைத் தொடர்ந்து மன்றப்பணிகளை பாராட்டி, மறைந்த கவிஞர் S.M.B.மஹ்மூது ஹுசைன் அவர்களால் எழுதப்பட்ட சிறப்புக்கவியை காயல் கவிஞர் ஜாகிர் ஹுசைன் வாசித்தார்.
மனமே மருத்துவம்:
உம்ரா கடமையை நிறைவேற்ற புனித மக்கா வந்திருந்த சகோதரர் அக்கு ஹீலர் S.H.ஸாலிஹ் (SK) "மனமே மருத்துவம்" என்ற தலைப்பில் தாம் பயின்ற "அக்கு ஹீலர்" சம்பந்தப்பட்ட மிகவும் உபயோகமான மருத்துவ துணுக்குகளை அவருக்கே உரிய பாணியில் அழகாக எடுத்துரைத்தார்.
பரிசு வழங்கல்:
நடந்தேறிய அனைத்து போட்டிகளுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. போட்டியில் வென்ற, வெல்ல முயற்சித்த, கலந்து கொண்ட அனைவருக்கும் அழகிய பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சீரிய முறையில் உரையாற்றிய முனைவர் தமீமுல் அன்சாரி அவர்களுக்கும் S.H.ஸாலிஹ் (SK) அவர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரின் பெயர்களும் எழுதப்பட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபருக்கு பம்பர் பரிசாக புனித மக்கா நகரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் ஓர் இரவு தங்குவதற்கான பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டது.
நன்றியுரை:
நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற துணை புரிந்த வல்ல நாயனுக்கு முதற்கண் நன்றி செலுத்தப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.... இந்த காயல் சங்கம நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற அனுசரணைகள், நன்கொடைகள் வழங்கிய உயர்ந்த உள்ளங்களுக்கும், வாகன உதவி மற்றும் அனைத்து வகையிலும் பொருளாலும் உடலுழைப்பாலும் உதவிகள் புரிந்தோருக்கும், சிறப்பு விருந்தினர்களாக கலந்து சீருரையாற்றிய பெருமக்களுக்கும், தொலைதூரத்திலிருந்து வந்து கலந்து கொண்ட தாய்மார்கள், சிறார்கள், மழலைகள் மற்றும் அனைவருக்கும் மன்றத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் மன்றத்தலைவர் பிரபு S.J.நூர்தீன் நெய்னா.
பிரார்த்தனை:
சகோ. தோல்ஷாப் முஹம்மத் லெப்பை அவர்களின் இறை வேண்டலுடன் அனைத்து நிகழ்வுகளும் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மற்றும் படங்கள்:
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
07.02.2020.
|