உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலகின் பெரும்பாலும் அனைத்து நாடுகளும் பல வடிவங்களில் ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவிலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
ஊரடங்கு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு நிறைவடைந்துவிட்டது. ஆனால், 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) அரசுப் பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என ஏற்கனவே நாள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இதுவரை நடத்தப்படவில்லை.
ஊரடங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக நடைமுறையில் உள்ளதால், 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணைக் கொண்டே அவர்களின் மேனிலைக் கல்விப் பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருப்பதால் அவசியம் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும், இந்த இக்கட்டான சூழலைக் கருத்திற்கொண்டு இவ்வாண்டு மட்டும் அனைவருக்கும் தேர்ச்சியை அறிவிக்கலாம் என்றும் இருவேறு கருத்துக்கள் அரசியல் தலைவர்களாலும், கல்வியாளர்களாலும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, ஊரடங்கு தளர்த்தப்பட்ட அடுத்த சில நாட்களில் தேர்வு நடத்தப்படலாம் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
|