கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் வரும் மே மாதம் 03ஆம் நாள் வரை தொடர் ஊரடங்குக்கு நடுவண் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் வழமையாக நடைபெறும் நிகழ்ச்சிகளும், அவ்வப்போது நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்தியா முழுக்கவும் உள்ள பள்ளிவாசல்களில் அன்றாடம் ஐவேளைத் தொழுகை நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோல, இன்றுடன் ஐந்தாவது வாரமாக நாடு முழுவதும் ஜும்ஆ தொழுகையும் நடைபெறவில்லை.
இந்நிலையில், ரமழான் மாதத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஆறுமுகநேரி காவல் நிலையம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதை - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா பொதுமக்களுக்குத் தகவலறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
ஊரடங்கு நடைமுறையில் இருப்பதை முன்னிட்டு, எதிர்வரும் புனித ரமழான் - நோன்பு மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு நடைமுறைகள் குறித்து காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு ஆறுமுகநேரி காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது:-
ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் வரை –
ரமழான் மாத நாட்களில் பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி வழங்கப்படக் கூடாது...
இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது...
இரவு நேர சிறப்புத் தொழுகைகளை நடத்தக் கூடாது...
ஆகிய சிறப்புக் கட்டுப்பாடுகளும், வழமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக் கட்டுப்பாடுகளும் இதில் அடக்கம்.
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இன்று (2020 ஏப்ரல் 23 வியாழக்கிழமை) காலை நடத்தப்பட்ட சிறப்பு கலந்து ஆலோசனை கூட்டத்திற்கு, காவல்துறை சிறப்பு துணை கண்காணிப்பாளர் திரு. ரவி அவர்களின் அழைப்பின் பேரில், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் நிர்வாகிகள் சென்று கலந்து கொண்டனர்.
அவரது தலைமையில், ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் பத்திரகாளி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |