காயல்பட்டினம் அரசு மருத்துவமனை இன்று முதல் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது. விரிவான விபரம்:-
கடந்த மாதம் டில்லி – நிஜாமுத்தீன் பகுதியிலுள்ள தப்லீக் தலைமை மர்கஸில் நடைபெற்ற இஜ்திமா – ஒன்றுகூடலில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, பரிசோதனைக்குப் பின் அரசு தெரிவித்தது.
காயல்பட்டினத்திலிருந்து அங்கு சென்று வந்த சிலரும், அவர்களுடன் தொடர்பிலிருந்த சிலரும் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் – அம்பல மரைக்காயர் தெருவைச் சேர்ந்த டாக்டர் ஃபாஸீயும் அவர்களுள் ஒருவர்.
கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட டாக்டர் ஃபாஸீ உள்ளிட்டவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முறைப்படி சிகிச்சையளிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் வழியனுப்பி வைத்தார்.
அரசு மருத்துவருக்கு கொரோனா தொற்று இருந்ததைக் காரணங்காட்டி, அவர் பணியாற்றிய காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைப்பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு, மருத்துவமனை வளாகம் முழுக்கவும் கிருமி நாசினிக் கலவை தெளிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப் படி மொத்தம் பத்து நாட்கள் மூடப்பட்டிருந்தது.
மருத்துவமனையைப் பூட்டி வைத்துள்ளதால் அன்றாடம் பல நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சையின்றி அவதிப்படுவதாக – காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) அமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு முறைப்படி தொடர் முறையீடு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், அது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன் பேசுவதாக அவர்களிடம் தெரிவித்திருந்தார். பின்னர் உரிய வழிகாட்டல்களை அவர் வழங்கியதாகத் தெரிகிறது. அதன் பிறகு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை ஒவ்வொரு நாளும் கிருமி நாசினிகள் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
இதற்கிடையே, காலதாமதம் இல்லாமல் உடனடியாக மருத்துவமனை மீண்டும் திறக்கப்படவேண்டும் என்ற நோக்கில் - பொதுமக்களையும், சமூக ஊடகங்கள் வாயிலாக உயர் அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்திட, மெகா அமைப்பு கேட்டுக்கொண்டது. ஊடகத்துறையினரும் அதிகாரிகளிடம் வினவி வந்தனர்.
ஏப்ரல் 08 அன்று இது தொடர்பாக மெகா நிர்வாகிகளிடம் பேசிய சுகாதாரத் துறையினர், ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் மருத்துவமனையைத் திறந்திட பணிகள் நடப்பதாக தெரிவித்தனர். 13.04.2020. திங்கட்கிழமையன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பிறகு மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
11.04.2020. சனிக்கிழமையன்று மருத்துவமனை மீண்டும் திறக்கப்படும் என மெகா அமைப்பிடம் மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. எனினும், சீரமைப்புப் பணிகள் முழுமை பெறாததால், 13.04.2020. திங்கட்கிழமையன்று அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அருகில் முகாமிட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சையும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினர். 14.04.2020. செவ்வாய்க்கிழமை முதல் காயல்பட்டிஎனம் அரசு மருத்துவமனை மீண்டும் முறைப்படி செயல்படத் துவங்கியுள்ளது.
|