கடந்த மாதம் டில்லி – நிஜாமுத்தீன் பகுதியிலுள்ள தப்லீக் தலைமை மர்கஸில் நடைபெற்ற இஜ்திமா – ஒன்றுகூடலில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, பரிசோதனைக்குப் பின் அரசு தெரிவித்துள்ளது.
காயல்பட்டினத்திலிருந்து அங்கு சென்று வந்த சிலரும், அவர்களுடன் தொடர்பிலிருந்த சிலரும் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் – அம்பல மரைக்காயர் தெருவைச் சேர்ந்த டாக்டர் ஃபாஸீயும் அவர்களுள் ஒருவர்.
இதன் காரணமாக, அவர் பணியாற்றிய காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைப்பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு, மருத்துவமனை வளாகம் முழுக்கவும் கிருமி நாசினிக் கலவை தெளிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப் படி – இன்றுடன் ஏழாவது நாளாக மூடவும் பட்டுள்ளது.
இந்நிலையில், தமது தொடர் முறையீட்டைத் தொடர்ந்து நாளை (ஏப்ரல் 11) முதல் அரசு மருத்துவமனை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக – சுகாதாரத் துறையின் தகவலை மேற்கோள் காட்டி, காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா தகவலறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அதன் சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
ஏப்ரல் 4 முதல் மூடப்பட்டுள்ள காயல்பட்டினம் அரசு மருத்துவமனை - 7 தினங்களுக்கு பிறகு - நாளை (11-4-2020) முதல் மீண்டும் இயங்கும் என தூத்துக்குடி மாவட்டம் சுகாதாரத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. மூடப்பட்ட மருத்துவமனை விரைவில் திறக்கப்பட - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது அனைவரும் அறிந்ததே. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை - மூடப்பட்டு இன்றோடு 7 வது நாள். அங்கு பணிப்புரியும் ஒரு மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஊர்ஜிதம் என கூறப்பட்டு - இம்மருத்துவமனை கடந்த ஏப்ரல் 4 முதல் மூடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக - தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி - ஏப்ரல் 6 அன்று வழங்கிய தகவலில், மீண்டும் மருத்துவமனையை திறந்திட குறைந்தது 10 தினங்கள் ஆகும் என்று மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) நிர்வாகியிடம் தெரிவித்தார்.
இவ்வளவு காலதாமதம் ஆனால் - தினமும் சுமார் 500 பேர் புற நோயாளிகள் என்ற முறையில் பயன்பெற்ற நிலையில், கடுமையான சிரமத்திற்கு உள்ளாவார்கள்; மேலும் - மருந்துகளுக்காக அரசு மருத்துவமனையை நாடிவரும் மக்களுக்கு பெரும் சிரமத்தை இது ஏற்படுத்தும்( என்ற காரணத்தால் - இப்பிரச்சனையை அன்றே (ஏப்ரல் 6) - *மெகா அமைப்பு, தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு கொண்டு சென்றது.
மெகா அமைப்புக்கு - ஏப்ரல் 6 அன்று நேரடியாக பதில் வழங்கிய தமிழக அரசு சுகாதாரத்துறையின் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் IAS - இது குறித்து தான் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS இடம் பேசுவதாக தெரிவித்தார். அதன் பிறகு - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை தினமும் கிருமி நாசினிகள் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
இதற்கிடையே - காலதாமதம் இல்லாமல் உடனடியாக மருத்துவமனை மீண்டும் திறக்கப்படவேண்டும் என்ற நோக்கில் - பொதுமக்களையும், சமூக ஊடகங்கள் வாயிலாக - உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திட, மெகா அமைப்பு கோரிக்கை வைத்தது. இது குறித்து ஊடகத்துறையினரும் - அதிகாரிகளிடம் வினவி வந்தனர்.
ஏப்ரல் 8 அன்று இது சம்பந்தமாக மெகா நிர்வாகிகளிடம் பேசிய சுகாதாரத்துறையினர், ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் மருத்துவமனையை திறந்திட பணிகள் நடப்பதாக தெரிவித்தனர்.
நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து 6 நாட்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதனை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பிறகு மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இன்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி - சிறப்பு துறை (SOCIAL AND PREVENTIVE MEDICINE DEPARTMENT), காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை - ஆய்வு செய்ய உள்ளதாக, சுகாதாரத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக, இன்றும் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சுத்தம் செய்யும் பணிகள் - நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் - நாளை (11-4-2020) முதல் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மீண்டும் இயங்க துவங்கும் என தூத்துக்குடி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|