கடந்த மாதம் டில்லி – நிஜாமுத்தீன் பகுதியிலுள்ள தப்லீக் தலைமை மர்கஸில் நடைபெற்ற இஜ்திமா – ஒன்றுகூடலில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, பரிசோதனைக்குப் பின் அரசு தெரிவித்துள்ளது.
காயல்பட்டினத்திலிருந்து அங்கு சென்று வந்த சிலரும், அவர்களுடன் தொடர்பிலிருந்த சிலரும் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களுள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறிருக்க, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அழைப்பின் பேரில் காயல்பட்டினத்திலிருந்து காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை (KMUF), காயல்பட்டினம் அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு (KACF) ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று மாலையில் மாவட்ட ஆட்சியரகம் சென்று கூட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலை வகித்தார்.
அப்போது அவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை, அதன் தொடர்ச்சியாக நகரில் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எதற்கும் மதச்சாயம் பூசத் தேவையில்லை என்றும், டில்லியில் நடைபெற்ற இஜ்திமாவில் பங்கேற்றவர்களிடம் இந்த நோயின் தாக்கம் இருப்பதாக அதிகளவில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால் மட்டுமே அதனடிப்படையில் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்தத் தகவலை மீறி யாராவது இந்தப் பிரச்சினைக்கு மதச்சாயம் பூச முனைந்தால், அவர்கள் குறித்து முறையீடு செய்திட சிறப்புத் தொடர்பு எண்ணையும் அவர் குழுவினரிடம் அளித்துள்ளார்.
கொரோனா தொற்று இருப்பதாகப் பெறப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளுள் பெரும்பகுதி டில்லி இஜ்திமா சென்று வந்தவர்களிடமிருந்தே பெறப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொண்டு வந்துள்ள அம்பல மரைக்காயர் தெரு டாக்டர் ஃபாஸீ, காயிதேமில்லத் நகர் ஷேக் முஹம்மத் ஆகியோருடன் தொடர்பிலிருந்தவர்கள் தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், அப்படிச் செய்யாவிடில் அது அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், இது தொடர்பாக நகரப் பிரமுகர்கள் அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்கக் கூறுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இன்று காயல்பட்டினம் வந்து கள ஆய்வு செய்த பின், மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து இறுதி முடிவு செய்யவுள்ளதாகவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெளிநாடுகளிலிருந்து காயல்பட்டினம் வந்துள்ள 263 பேர் வரை கண்டறியப்பட்டு, அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும் காயல்பட்டினம் நகராட்சி தெரிவித்துள்ளது.
இத்தகவல்களை, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் குரல் பதிவு மூலம் சமூக ஊடகங்கள் வழியே தெரிவித்துள்ளார்.
|