இனி கடவுச்சீட்டு விண்ணப்பங்களை வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விசாரிக்க ஆறுமுகநேரி காவல்துறை இசைவு தெரிவித்துள்ளது. இதையொட்டி, விண்ணப்பதாரர்களுக்கு மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இதுகுறித்த “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
கடவுசீட்டு (PASSPORT) விண்ணப்பம் செய்த பிறகு, விண்ணப்பதாரரின் விபரங்கள் - அவர் வசிக்கும் இடத்தில் உள்ள காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டு - காவல் நிலையத்தின் அறிக்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படுவது நடைமுறை.
பொதுவாக - மாநிலத்தின் அநேக பகுதிகளில் - காவல்துறையின் இந்த விசாரணை, அவரவர் வீடுகளுக்கு, இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள காவலர் ஒருவர் நேரில் சென்று நடைபெறுகிறது.
இருப்பினும் - காயல்பட்டினம் பகுதியில், கடவுசீட்டு விண்ணப்பதாரர்கள் - ஆறுமுகநேரி காவல்நிலையத்திற்கு அழைக்கப்படும் நடைமுறை கடந்த பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் - கடவுசீட்டு விண்ணப்பதாரர்கள் - குறிப்பாக பெண்கள், வயதானோர், குழந்தைகள் - சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள்.
இது குறித்து - சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், நகர அமைப்புகள் பலமுறை முறையிட்ட பிறகும், இந்த நடைமுறை தொடருகிறது.
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI ACT) கீழ் - சில தகவல்கள் - சென்னையில் உள்ள காவல்துறை தலைமை நிலையத்தில் (DGP OFFICE) கோரப்பட்டது. அதற்கு பெறப்பட்ட பதில்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பொது தகவல் அலுவலர், சென்னை பெருநகர காவல் அலுவலகம் வழங்கியுள்ள பதிலில் - கடவுசீட்டு கோரும் விண்ணப்பதாரர் இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்துக்கொள்ளவும், அவர் மீது குற்ற நடவடிக்கை ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளவும் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும், கடவுசீட்டு விண்ணப்பம் சரிபார்ப்பு சம்பந்தமாக விண்ணப்பதாரர் எவரும் காவல்நிலையத்திற்கு செல்லும் வழக்கம் ஏதும் நடைமுறையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெறப்பட்டுள்ள பதிலினை அடிப்படையாக கொண்டு, கடுவுசீட்டு விண்ணப்பதாரர்களை ஆறுமுகநேரி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கவேண்டாம் என வேண்டுகோள் வைத்து - மனு ஒன்று, 29-1-2020 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு அருண் பாலகோபாலன் IPS அவர்களிடம் - மெகா அமைப்பு சார்பாக - வழங்கப்பட்டது.
அதன் பயனாக - கடவுசீட்டு விண்ணப்பம் (Passport Application) குறித்த விசாரணைகளை (Police Verification) இனி வீடுகளுக்கு நேரடியாக சென்று நடத்திட - ஆறுமுகநேரி காவல் நிலையம் இசைவு தெரிவித்துள்ளது. இந்த தகவல் - ஆறுமுகநேரி காவல்நிலையம் மூலமாக - நேற்று, மெகா அமைப்புக்கு தெரிவிக்கப்பட்டது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
கடவுசீட்டு விண்ணப்பம் (PASSPORT APPLICATION) செய்யும் பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள்!
கடவுசீட்டு விண்ணப்பங்களை - காவல் நிலைய அதிகாரி - நேரடியாக வீடுகளுக்கு சென்று உறுதி செய்வதே - அரசு விதித்துள்ள விதிமுறை. மெகா அமைப்பு - இதனை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் உறுதிசெய்துள்ளது. எனவே - பொது மக்கள், இதனை தயவுகூர்ந்து மனதில் வைத்துக்கொள்ளவும்.
இந்த விதிமுறையை அறியாமல், அல்லது அறிந்துக்கொண்டே - அச்சத்திலோ அல்லது தங்களின் பிற சௌகரியங்களை மனதில் வைத்துக்கொண்டோ - நேரடியாக விசாரணைக்கு காவல்நிலையம் செல்வதை - கடவுசீட்டு விண்ணப்பதாரர்கள், அன்புகூர்ந்து தவிர்க்கவும்.
ஒரு சிலர் அவ்வாறு செல்வதால், நகரில் உள்ள பிற பெண்கள், குழந்தைகள், வயதானோர் உட்பட பிறரும் அவ்வாறே காவல்நிலையம் செல்லவேண்டிய சூழல் எழுகிறது. எனவே - பொதுமக்கள், விதிமுறைகளை அறிந்து - கடவுசீட்டு விசாரணைகளுக்கு காவல்நிலையம் செல்வதை தவிர்க்கவும்.
விண்ணப்பம் செய்த 3 வாரங்களுக்குள் - காவல்நிலைய அதிகாரிகள், தங்கள் விசாரணை அறிக்கையை, தங்கள் மேலதிகாரிக்கு அனுப்புவர் என்பதை கடவுசீட்டு விண்ணப்பம் செய்துள்ள நபர்கள், மனதில் வைத்துக்கொள்ளவும். அதற்கு ஏற்றாற்போல் - தங்கள் பயணங்களை, கடவுசீட்டு விண்ணப்பம் செய்துள்ள பொதுமக்கள் வைத்துக்கொள்ளவும்.
காவல்நிலையம் அதிகாரி - நேரடியாக வீட்டிற்கு வந்து விசாரணை செய்யாமல், காவல்நிலையம் வர அழைத்தால் - அவரிடம் விதிமுறையை நினைவுபடுத்தவும். அதன் பிறகும் அவர் செவிசாய்க்காமல் - காவல்நிலையம் வர அழைத்தால், கீழ்க்காணும் கடவுசீட்டு வழங்கும் மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் இணையதளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் - விசாரணைக்கு நேரடியாக அழைக்கப்படுவது குறித்து - புகார் பதிவு செய்யவும்.
இணையதளம் முகவரி:
https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/ccgm/ServiceRequestHomeAction
தொலைபேசி எண் (17 மொழிகளில், 24 மணி நேரமும் இயக்கப்படும் சேவை):
1800-258-1800
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|