காயல்பட்டினம் வழித்தடத்தை அரசுப் பேருந்துகள் தொடர்ந்து புறக்கணித்துச் செல்லும் பிரச்சினையை முன்னிட்டு, மாதமிருமுறை தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை வழங்கிட வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா தகவலறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியை அரசு பேருந்துகள் புறக்கணிக்கும் பிரச்சனை குறித்து - கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) | நடப்பது என்ன? குழுமம்* மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்தது.
போக்குவரத்து துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபிறகும் - இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை என்பதால், காயல்பட்டினம் வழியை புறக்கணிக்கும் அரசு பேருந்துகளின் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், சம்பந்தப்பட்ட பேருந்து சார்ந்த போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் (CONSUMER COURT) வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - என அறிவித்து, மெகா அமைப்பு சார்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் - சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
எவ்வாறு வழக்கு தொடரப்படும் என்ற விபரம் - இறைவன் நாடினால் - விரைவில் வெளியிடப்படும்.
இதற்கிடையே - கடந்த மாதம் இறுதியில், மெகா நிர்வாகிகள், திருச்செந்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) *திரு சக்திவேல் அவர்களை நேரில் சந்தித்து - போக்குவரத்து ஆணையர் திரு சமயமூர்த்தி IAS அவர்கள் பிறப்பித்த உத்தரவினை நினைவூட்டினர்.
அந்த சந்திப்பினை தொடர்ந்து - வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) தற்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக - மாதமிருமுறை, இந்த வழித்தடங்களில் தொடர் ஆய்வு செய்து, மாதம் இறுதியில் ஆய்வறிக்கை வழங்கவேண்டும் என ஊர்தி ஆய்வாளர் நிலை - 1 அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் - காயல்பட்டினம் வழியாக பேருந்துகளை இயக்கும் அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், போக்குவரத்து ஆணையர் அவர்களின் உத்தரவினை நினைவூட்டி - காயல்பட்டினம் வழியாக பேருந்துகள் கண்டிப்பாக இயக்கப்படவேண்டும் என்றும், பெயர் பலகையில் காயல்பட்டினம் வழி என பதிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|