காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளியில், ஸ்மார்ட் க்ளாஸ் எனும் பெயரில் வசூலிக்கப்பட்ட 2 ஆயிரத்து 400 ரூபாய் தொகை இவ்வாண்டு கல்விக் கட்டணத்தில் கழிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வது எப்படி என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா தகவலறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி - சட்டத்திற்கு புறம்பாக, வணிகவியல்பிரிவு மாணவர்களை தவிர்த்து - சுமார் 1400 மாணவர்களிடம் இருந்து 2017 - 2018 கல்வியாண்டில், ரூபாய் 2100 ம், 2018 - 2019 கல்வியாண்டில் ரூபாய் 2400 ம் - வசூல் செய்தது.
இது சம்பந்தமான புகார் 2018 - 2019 கல்வியாண்டு துவக்கத்தில் சில பெற்றோர்களால் - தமிழ்நாடு தனியார் பள்ளிக்கூடங்கள் கல்விக்கட்டணம் நிர்ணயம் குழுவிடம் (TAMIL NADU PRIVATE SCHOOLS FEE DETERMINATION COMMITTEE) - சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பும் (மெகா) - சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் மனுவினை வழங்கியது.
இதற்கிடையே - பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக ஒரு சிலர் - தங்கள் புகாரினை வாபஸ் பெற்றனர்.
இருப்பினும் - மெகா அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி, மேல் நடவடிக்கை எடுத்துவந்ததை அடுத்து மே 2019 இல் - கல்விக்கட்டணம் நிர்ணையம் குழு, தனது ஆணையை பிறப்பித்தது.
அதில் - சட்டத்திற்கு புறம்பாக எல்.கே.மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி 2400 ரூபாய் வசூல் செய்துள்ளது என்றும், அதனை திருப்பி கொடுக்கவேண்டும் என்றும், கல்வியை நிறைவு செய்து வெளியே செல்லும் மாணவர்களிடம் அது ரொக்கமாக கொடுக்கப்படவேண்டும் என்றும், கல்வியை தொடரும் மாணவர்களின் 2019 - 2020 கல்வியாண்டு கல்விக்கட்டணத்தில் அது கழிக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயங்கள் என்னவென்றால் - இந்த ஆணையில், சட்டத்திற்கு புறம்பாக 2017 - 2018 கல்வியாண்டில் வசூல் செய்யப்பட 2100 ரூபாய் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை; மேலும் - சுமார் 2,000 - 3,000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள், காலுறைகள் போன்ற பொருட்களை - அந்த பள்ளிக்கூடம், 6000 - 8500 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்து, வலுக்கட்டாயமாக விற்பனை செய்வது குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே - 2400 ரூபாய் தொகை ஒரு மாதத்தில் திரும்ப கொடுக்கவேண்டும் என கல்விக்கட்டணம் நிர்ணயம் குழு பிறப்பித்த உத்தரவை - அந்த பள்ளிக்கூடம் அமல்படுத்திவிட்டதாக - மாவட்ட கல்வி அலுவலர், அறிக்கை ஒன்றினை - கட்டண நிர்ணயக்குழுவிற்கு அனுப்பியிருந்தார்.
ஆனால் - உண்மை என்னவென்றால் - கல்வியை நிறைவு செய்து வெளியே சென்ற 168 மாணவர்களுக்கு மட்டுமே 2400 ரூபாய் திரும்ப கொடுக்கப்பட்டது; கல்வியை அதே பள்ளிக்கூடத்தில் தொடர்ந்த மாணவர்களுக்கு எவ்வாறு கழிக்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் - புதிதாக, இந்த கல்வியாண்டு - இதர கட்டணம் (MISCELLANEOUS FEE) என்ற பெயரில் ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் 3500 ரூபாய் வசூல் செய்யப்படும் என்றும் அந்த பள்ளிக்கூடம் அறிவித்தது. இது சம்பந்தமாக மெகா அமைப்பு - மாவட்ட ஆட்சியர் உட்பட கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கவே - அந்த தலைப்பில் வசூல் செய்வதை அந்த பள்ளிக்கூடம் நிறுத்திக்கொண்டது.
இருப்பினும் - பல பெற்றோர்கள், அந்த வகைக்கு - மாதம் 350 ரூபாய், இரண்டு மாதத்திற்கு 700 ரூபாய், மூன்று மாதத்திற்கு 1050 ரூபாய் மற்றும் ஓர் ஆண்டுக்கு 3500 ரூபாய் - தொகையினை, அறியாமையால் செலுத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே 2400 ரூபாய் கல்விக்கட்டணத்தில் கழிக்கப்படாதது குறித்து பதில் தந்த கல்வித்துறை அதிகாரிகள், ஆண்டு இறுதிக்குள் - கல்விக்கட்டணத்தில் அந்த 2400 ரூபாயினை கழித்துவிட கால அவகாசம் உள்ளதாக தெரிவித்தனர்.
கல்வியாண்டு நிறையும் தருவாயில் உள்ள நிலையில், 2400 ரூபாயினை கழித்தே இவ்வாண்டு வசூல் செய்துள்ளதாக பள்ளிக்கூடம் தெரிவிப்பதாக சில பெற்றோர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் - எவ்வளவு கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும், எவ்வளவு செலுத்தியிருக்கிறார்கள் என்ற தகவலை பள்ளிக்கூடம் எழுத்துப்பூர்வமாக பெற்றோர்களுக்கு வழங்கியதாக தெரியவில்லை.
கீழே - 2019 - 2020 கல்வியாண்டில் - எல்.கே.மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி க்கு அரசு அனுமதித்துள்ள கல்விக்கட்டணம் விபரம் உள்ளது. இந்த தொகையில் இருந்து 2400 ரூபாயினை கழித்தே அந்த பள்ளிக்கூடம் - இவ்வாண்டு வசூல் செய்யவேண்டும். இதர கட்டணம் (MISCELLANEOUS FEE) என்ற தலைப்பில் உங்களிடம் வசூல் செய்யப்பட்டிருந்தால் - அந்த தொகையையும் - அந்த பள்ளிக்கூடம் குறைக்கவேண்டும்.
-----------------
2019 - 2020 (TUITION FEE)
-----------------
LKG, UKG - ரூபாய் 10,285
1st, 2nd, 3rd, 4th, 5th - ரூபாய் 11,735
6th, 7th, 8th - ரூபாய் 12,705
9th, 10th - ரூபாய் 13,310
11th, 12th - ரூபாய் 15,125
இதனை எவ்வாறு உறுதி செய்வது?
ஏப்ரல் 2019 முதல் - நீங்கள் செலுத்திய கட்டணத்தை - கீழ்க்காணும் தலைப்பு வாரியாக - எழுதுங்கள்.
// கல்விக்கட்டணம் (TUITION FEE)
// வாகன கட்டணம் (BUS FEE)
// புத்தகங்கள், எழுதுபொருட்கள் போன்றவை ( BOOKS, STATIONERY, ID CARD ETC)
// இதர கட்டணம் (MISCELLANEOU FEE)
// PTA FEE
மேலுள்ள தலைப்பில் நீங்கள் செலுத்திய மொத்த தொகை - அனுமதித்த தொகையை விட - 2400 ரூபாய் குறைவாக இருக்கவேண்டும். இதர கட்டணம் (MISCELLEANOUS FEE) என்ற தலைப்பில் உங்களிடம் வசூல் செய்யப்பட்டிருந்தால் - அந்த தொகையையும் - அந்த பள்ளிக்கூடம் குறைக்கவேண்டும்.
உதாரணமாக - அந்த பள்ளிக்கூடம், இதர கட்டணம் என்ற பெயரில் 700 ரூபாய் வசூல் செய்திருந்தால், கழிக்கவேண்டிய மொத்த தொகை - 3100.
இது தவிர - அந்த பள்ளிக்கூடத்தின் வாகனத்தை பயன்படுத்தும் மாணவர்கள், அதற்கான கட்டணமான 6500 ரூபாய் கூடுதலாக செலுத்தலாம். மேலும் - அந்த பள்ளிக்கூடம் புத்தகம் போன்றவைக்கு என வசூல் செய்யும் தொகை, வகுப்புக்கு ஏற்ப 6000 - 8500 ரூபாய் கூடுதலாக செலுத்தலாம்.
கல்விக்கட்டணம் குறைக்கப்பட்டதா என்று இன்னும் சந்தேகம் இருந்தால், எழுத்துப்பூர்வமாக பள்ளிக்கூடத்தில் பெற்றோர்கள் விளக்கம் பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|