காயல்பட்டினம் கோமான் தெரு சந்திப்புகளில் வேகத்தடை அமைக்கக் கோரி ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை நகராட்சியால் அமைக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, விபத்து எதுவும் நடந்தால் நகராட்சியே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா முறையிட்டுள்ளது. இதுகுறித்த “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
சமீபத்தில் சாலைகள் போடப்பட்ட கோமான் மொட்டையர் பள்ளி சந்திப்பு இடத்திலும், அருணாச்சலபுரம் போக திரும்பும் சந்திப்பு இடத்திலும் - வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் நிலை - உள்ளது.
இவ்விடங்களில் ஏற்கனவே வேக தடை இருந்து, சாலை புனரமைக்கப்படும் பணியின் போது - அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் போடப்படவில்லை.
இவ்விடங்களில் மீண்டும் வேகத்தடை போட - அப்பகுதி பெண்கள், காயல்பட்டினம் நகராட்சியிடம் கடந்த மாதம் இறுதியில் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை வைத்து ஒரு மாதம் ஆகியும், இதுவரை வேகத்தடை போடப்படவில்லை.
(இறைவன் காப்பாற்றுவான்) அசம்பாவிதம் ஏதும் அவ்விடங்களில் நடந்தால் - அதற்கு முழுப்பொறுப்பு காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் மற்றும் பொறியியல் துறையினரே_ என தெரிவித்து, இது குறித்த முறையீடு தற்போது - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|