சில மாதங்களுக்கு முன் கொரோனா வைரஸ் சீனாவில் துவங்கி, பின்னர் படிப்படியாக உலகெங்கும் பரவி வருவதாக ஊடகங்கள் வழியே தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கு COVID – 19 என்று பெயரும் சூட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தப் பரவலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தடுப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில், சஊதி அரபிய்யா மக்கா நகரிலுள்ள புனித கஃபத்துல்லாஹ், மதீனாவிலுள்ள புனித மஸ்ஜிதுன் நபவீ ஆகிய புனிதத் தலங்களில் உம்ரா பயணியர் வர – நாள் வரையறுக்கப்படாத தடை அறிவிக்கப்பட்டு, இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக, எப்போதும் இடைவெளியில்லாத மக்கள் திரளுடன் காணப்படும் இவ்விரு புனிதத் தலங்களும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வந்த செய்திகளையடுத்து, 22.03.2020. ஞாயிற்றுக்கிழமையன்று 07.00 மணி முதல் 21.00 மணி வரை பொதுமக்கள் தாமாக முன்வந்து தன்னெழுச்சி ஊரடங்கைக் கடைப்பிடிக்குமாறு இந்தியப் பிரதமர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். பின்னர் அது 23.03.2020. திங்கட்கிழமை அதிகாலை 05.00 மணி வரை என நேர நீட்டிப்புச் செய்யப்பட்டது.
அந்நாள் முழுக்க நகரில் இந்தியாவில் எங்கும் பேருந்து, தொடர்வண்டி, ஆட்டோ – கார் – வேன் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. அரசு நிறுவனங்களும், அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் கிருமித் தொற்று பரவி வருவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, வெளிநாடுகளிலிருந்து கடந்த ஒரு மாத காலத்திற்குள் இந்தியா வந்தவர்கள் தமது முழு விபரங்களை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு, அவரவர் இல்லங்களுக்குச் சென்ற அரசு அலுவலர்கள் – அடுத்த ஒரு மாத காலத்திற்கு வீட்டை விட்டும் வெளியேறக் கூடாது என உத்தரவிட்டு, அவர்களது இல்லங்களின் முன் “இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்” என்ற ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 31ஆம் நாள் வரை நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு ஏப்ரல் 14ஆம் நாள் வரை அடுத்த 21 நாட்களுக்கு என 24.03.2020. அன்று மறு அறிவிப்புச் செய்யப்பட்டது.
அதன்படி, இன்றளவும் நாடெங்கும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், இறைச்சி – மீன் வகைகளை வாங்கிட காலை முதல் 14.30 மணி வரை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. காயல்பட்டினத்தில் காய்கறிகளை தனித்தனிக் கடைகளில் விற்பது நிறுத்தப்பட்டு, நகரின் மேற்கே பேருந்து நிலைய வளாகத்திலும், கிழக்கே குருவித்துறைப் பள்ளி மைதானத்திலும், வடக்கு ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்திலும், தெற்கே தாயிம்பள்ளி மைதானத்திலும் இடம் வரையறுக்கப்பட்டு – ஒவ்வொரு நாளும் ஆங்கே காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது.
காய்கறி விற்பனை நிலையங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மெயின் ரோடு, கூலக்கடை பஜார், எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, எல்.எஃப். வீதி, ஸீ-கஸ்டம்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் கிருமி நாசினிக் கலவை தெளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அப்பணிகளை நேரில் பார்வையிட்டுச் சென்றார்.
பொதுமக்கள் வீடடங்கியிருப்பதால், அன்றாட வாழ்க்கை அவதிக்குள்ளாகிவிடக் கூடாது என்று கருதி, தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பணமும், அரிசி – சமையல் எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்கள் இலவசமாகப் பகிரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்டு, தற்போது பொதுமக்களுக்குப் பகிரப்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் டில்லி நிஜாமுத்தீன் பகுதியிலுள்ள தப்லீக் மர்கஸில் இஜ்திமா – ஒன்றுகூடல் நடைபெற்றது. அதில் இந்தியர்களும், வெளிநாட்டினர் பலரும் கலந்துகொண்டு அவரவர் வசிப்பிடம் திரும்பினர். அப்படித் திரும்பிய சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டு, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அந்த ஒன்றுகூடலில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியவர்களின் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அவர்கள் கொரோனா பரிசோதனைக்காகத் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறிருக்க, அவர்களுள் பலருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யத் துவங்காத நிலையிலேயே - கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காகித & காட்சி ஊடகங்கள் சில பொறுப்பற்ற முறையில் அவதூறு செய்திகளை வெளியிட்டுள்ளதையடுத்து, முஸ்லிம் சமுதாய மக்களிடையே அது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஃபாஸீயும் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, அவர் வீடு உள்ள அம்பல மரைக்காயர் தெரு முற்றிலும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரெங்கும் காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியில் சுற்றித் திரிவோரை அவர்கள் கடுமையாக எச்சரித்து இல்லங்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டுள்ளனர்.
இன்று காலையில் துவங்கி – நகரில் சுகாதாரக் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. அரசு அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவத்தின் படி வீட்டு எண், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, மொத்த பெரியவர்களின் எண்ணிக்கை, பெண்களின் எண்ணிக்கை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை, சளி – இருமல் – சர்க்கரை நோய் – இரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களைச் சேகரித்துக் கொண்டுள்ளனர்.
உலக வரலாற்றிலேயே தற்போது கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் உலகளாவிய நடவடிக்கை போல இதற்கு முன் ஒருபோதும் மேற்கொள்ளப்பட்டதில்லை என அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
|