கடந்த மாதம் டில்லி – நிஜாமுத்தீன் பகுதியிலுள்ள தப்லீக் தலைமை மர்கஸில் நடைபெற்ற இஜ்திமா – ஒன்றுகூடலில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, பரிசோதனைக்குப் பின் அரசு தெரிவித்துள்ளது.
காயல்பட்டினத்திலிருந்து அந்த இஜ்திமா நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வந்த காரணத்தால், அம்பல மரைக்காயர் தெருவைச் சேர்ந்த – காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஃபாஸீ, காயிதேமில்லத் நகரைச் சேர்ந்த ஷேக் முஹம்மத் உட்பட சிலர் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, அம்பல மரைக்காயர் தெரு, காயிதேமில்லத் நகர் ஆகிய பகுதிகள் காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தெருவைச் சேர்ந்த யாரும் வீட்டை விட்டும் வெளியே வரவே கூடாது என்றும், அவரவர் வீட்டுத் தேவைகளை – அதற்கென நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்களிடம் சொன்னால் அவர்கள் தேவையான பொருட்களைக் கடைகளிலிருந்து வாங்கிப் பெற்றுத் தருவார்கள் என்றும், யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பளிக்குமாறும் அத்தெருவைச் சேர்ந்த மக்களுக்கு காவல்துறையின் சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
அம்பல மரைக்காயர் தெருவிலுள்ள வீடுகளின் முகப்புகள் முழுக்க தீயணைப்பு வாகன உதவியுடன் கிருமி நாசினிக் கலவை தெளிக்கப்பட்டது.
அதுபோல காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் வெளிப்புறம் – உட்புறம் முழுக்கவும் கிருமி நாசினிக் கலவை தெளிக்கப்பட்டது.
|