கேரள மாநிலம் – கோழிக்கோடு நகரை செயல் களமாகக் கொண்டு, சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் காயலர்களுக்காக இயங்கி வருகிறது மலபார் காயல் நல மன்றம் – மக்வா. இவ்வமைப்பு துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள மகிழ்ச்சியுடன் அதன் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
கேரளா மாநிலம் மலபார் பகுதியின் காயல் மக்களின் கூட்டமைப்பான எங்கள் காயல் நல மன்றம் அதன் 26 வது பொதுக்குழு கூட்டத்தை எமது மன்றத்தின் 10 ஆண்டு நிறைவு தினமான 01.03. 2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் கோழிக்கோட்டில் உள்ள M.K.நெய்னா காக்கா வீட்டு (NMS MANZIL) மாடியில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
ஆரம்பமாக மன்றத்தின் கணக்கு தணிக்கையாளர் ஜனாப் K.R.S. முத்து முஹம்மது ரஃபிக் அவர்களின் மகன் M.M.R. அப்துர் ரஹ்மான் அவர்கள் இனிமையான குரலில் இறைமறை ஓதி நிகழ்ச்சிகளை துவக்கி தந்தார்.
அவரைத் தொடர்ந்து செயற்குழு உறுப்பினர் ஜனாப் S.பாதுல் அஸ்ஹாப் அவர்கள் மன்றத்தின் சிறப்பு அம்சங்களையும்,மன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளையும் சிலாகிக்கும் விதமாக அழகிய கவிதையின் வடிவில் வரவேற்று பேசினார்.
செயலாளர் உரை
மன்ற செயலாளர் ஜனாப் A.S.I.முஹம்மது ஸிராஜ் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் எம் மன்றத்தின் சிறப்பான செயல்பாடுகளை ஒரு மலரும் நினைவு போல விவரித்தார், மேலும் கடந்த கூட்டத்தின் மினிட்ஸை வாசித்து கூட்டத்தின் அங்கீகாரம் பெற்றார்.
வரவு செலவு கணக்குகள் தாக்கல்
மன்றத்தின் பொருளாளர் ஜனாப் N.மொகுதூம் மீராசாஹிப் அவர்கள் கடந்த பொதுக் குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கும் இடையில் உள்ள கணக்குகளை தாக்கல் செய்தார். கணக்குகளை உன்னிப்பாக கவனித்த கூட்டம் அதனை அங்கீகரித்து ஒப்புதலும் வழங்கியது. மேலும் பொருளாதார பற்றாக்குறை காரணமாக பல உதவி கடிதங்களுக்கு உதவிகள் செய்ய முடியாத நிலை ஏற்படுவதாகவும், உறுப்பினர்கள் அனைவர்களும் சந்தா மற்றும் நன்கொடை தொகைகளை அதிகப்படுத்தி தரவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.
தலைவர் உரை
மன்றத்தின் தலைவர் ஜனாப் S.ஷேக் சலாஹுதீன் அவர்கள் இந்த 10வது ஆண்டு நிகழ்வுகளில் நம் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டது மகிழ்ச்சியையும், குறிப்பாக தலச்சேரி கண்ணூர் பகுதிகளில் இருந்து நம் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டதை மகிழ்வுடன் குறிப்பிட்டார்.
தற்போது நம் நாட்டின் பிரச்சினகள் CAA NRC போன்ற போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் தருணமாக இருப்பதனால் நம் 10வது ஆண்டு நிகழ்வுகளை சுருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. என்றும் நம் மன்றம் துவங்கிய காலம் முதல் இன்று வரை 10 ஆண்டுகளில் மிகப்பெரிய தொகையை நலிந்தவர்களுக்காக செலவு செய்ததையும் ஒவ்வொரு வருடமும் உதவி கடிதங்களுக்கு கொடுத்த தொகைகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.
சில உறுப்பினர்கள் பல காலங்களாக சந்தா தொகை தராமல் இருப்பதாகவும், அத்தகைய உறுப்பினர்களின் நிலுவை தொகை பற்றி இந்த பொதுக்குழு ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
துணைத் தலைவர் உரை
மன்ற துணைத் தலைவர் ஜனாப் T.S. சாஹிப் தம்பி அவர்கள் தமது உரையில்...
இந்த வருடமும் கேரள மழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான நிலையில் நம் மன்றம் மீண்டும் அதற்கான நிதியினை திரட்டியதனையும், அதில் நம் மக்களின் பங்களிப்பையும் வெகுவாக பாராட்டினார்.
மிகவும் தகுதியான ஒரு வீட்டின் பராமரிப்பு பணிகளை சிறப்பாக செய்து கொடுத்த அனுபவத்தை பகிர்ந்தார்.
நம்மிடம் இன்னும் சிறு தொகை பாக்கி உள்ளதாகவும் அதனைக்கொண்டு வேறு ஒருவரின் வீடு பராமரித்து கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.
சிறப்பு உரை
மன்றத்தின் இந்த பருவத்தின் கணக்கு தணிக்கையாளரான ஜனாப் K.R.S.முத்து முகமது ரஃபீக் அவர்கள் கணக்குகளை சரி பார்த்ததோடு 10 ஆண்டுகளுக்கு முன் மக்வா எனும் இம்மன்றம் உருவான காலகட்டத்தின் நிகழ்வுகளையும் அதில் கலந்துகொண்ட நண்பர்களின் கருத்துகளையும் நினைவு கூர்ந்தார்.மன்றத்தின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி பேசினார்.மக்வா என்பது நமது வீட்டு பிள்ளை. உயர்ந்த நோக்கத்திற்காக ஒரே கருத்தில் இருந்து செயல்படுங்கள் என்று குறிப்பிட்டார்.
வாழ்த்துரை
நம் மன்றத்திற்கான ஷிஃபாவின் அறங்காவலர் ஜனாப் சாளை M.A.K.முஹம்மது உதுமான் அவர்கள் உரையாற்றினார். இந்த மன்றம் துவங்குவதற்கான மூல காரணத்தை விவரித்தார்.துவக்க காலங்களில் நம் மன்றத்தை குறை கூறியவர்கள் கூட இப்போது பாராட்டுவதையும் நினைவு கூர்ந்தார், மேலும் இந்த மன்றத்தில் அனைவர்களுக்கும் கருத்துரிமை இருப்பதனால் இன்றுவரை ஒரு பழி சொல்லிற்கும் இடம் கொடுக்காமல் அதன் 10வது வயதை பூர்த்தி செய்து வெற்றி நடை போடுகிறது என்பதனை சிலாகித்து பேசினார்.மக்வா யாருடைய தனி நபர் கைகளிலும் போகவில்லை என்பதை பதிவு செய்தார்.
வரும் காலங்களிலும் முழு கருத்துரிமை உள்ள மன்றமாக 100 ஆண்டுகள் நம் மக்களுக்கு சேவை செய்யும் மன்றமாக ஆக்கி அருள் புரிவதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்.
கருத்துப்பரிமாற்றம் & தீர்மானங்கள்.
மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சிறந்த முறையில் கருத்துக்கள், ஆலோசனைகளை தெரிவித்தனர்.
பல காலங்களாக சந்தா நிலுவையில் உள்ள உறுப்பினர்கள் பற்றிய விஷயத்தில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் சந்தா தராத உறுப்பினர்களாகவோ அல்லது மூன்று வருட காலமாக நம் மன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத நிலையில் உள்ள உறுப்பினர்களாகவோ இருந்தார்கள் என்றால் அவர்களுக்கு நம் மன்றத்தின் நடைமுறைகளில் விருப்பமில்லை என்று தீர்மானித்து உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தில் இருந்து நீக்கி விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
வெள்ள நிவாரண உதவிகளுக்கு தகுதியான வீட்டை தேர்ந்தெடுக்கும் பணிகளுக்காக ஒரு குழுவை முன்னதாக அமைத்திருந்தோம். அந்த குழுவின் பணிகள் மிகவும் பாராட்டுக்குரியது, இருப்பினும் அந்த குழுவில் பலராலும் தங்கள் தனிப்பட்ட காரணங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என்பதனால் தற்போது 10 நபர் கொண்ட ஒரு குழுவை அவர்களின் விருப்பத்துடன் அமைக்கப்பட்டது, இந்த குழுவுடன் கடந்த குழுவில் உள்ளவர்கள் தங்களால் முடிந்தவரை ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து செயல்பட்டு தகுதியான வீட்டை தேர்வு செய்து துரிதமாக வேலைகளை முடித்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பரிசு வழங்குதல்.
முதல் முறையாக பொதுக்குழுவில் குறித்த நேரத்தில் பங்குபெறும் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் பரிசுகள் வழங்கப்படும் என்று முன்னதாக அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்தபடி, குறித்த நேரத்தில் பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களில் இருந்து இருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது, அதில் சகோதரர் மூஸா நெய்னா மற்றும் உவைஸ்னா லெப்பை ஆகிய இருவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
மன்றத்தின் உறுப்பினர் S.நாகூர் மீரான் அவர்கள் அழகிய முறையில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
மன்ற செய்தித்தொடர்பாளர் H.A.அஹமது மதார் அவர்கள் நன்றி கூற, கஃபார தூஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
விருந்து...
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் H.A.ஜெய்னுல் ஆப்தீன் அவர்களினால் தயார் செய்யப்பட்ட சுவைமிகு காயல் பிரியாணி வழங்கப்பட்டது. நம் உறுப்பினர்கள் அனைவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு பெற்று வாழ்த்தி தூஆ செய்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|