காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில் டிக்டாக் ஆட்டம் பாட்டம் விடுமுறை நாட்களிலேயே நடந்ததாக நகராட்சி ஊழியர்கள் அரசுக்கு விளக்கமளித்துள்ளதைத் தொடர்ந்து, அலுவலக வளாகத்தில் அலுவலகப் பணிகள் தவிர்த்து பிற செயல்களில் ஈடுபடுவதைக் கண்டித்து உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் ஆணையிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா தகவலறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் சில ஊழியர்கள் - காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில், ஆடி, பாடிய நிகழ்வுகள் - வீடியோவில் பதியப்பட்டு, அந்த ஊழியர்களாலேயே - டிக் டாக் சமூக ஊடக சேவையில் பகிரப்பட்டது நினைவிருக்கலாம்.
அந்த வீடியோ காட்சிகள், தமிழகத்தின் பிரதான ஊடகங்களில் வெளிவந்து - பெரும் அதிருப்தியை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ காட்சிகள் - காயல்பட்டினம் சார்ந்த சமூக ஆர்வலர் ம.மைதீன் அப்துல் காதர் என்பவரால் - மின்னஞ்சல் மூலம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த தகவலை வழக்காக எடுத்துக்கொண்டு *(எண்: 754/ந/2019)( விசாரணைகள் மேற்கொண்டு தற்போது ஆணை பிறப்பித்துள்ளது. ஆணை விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது - நகராட்சி ஆணையர் தரப்பில் கீழ்க்காணும் தகவல், நடுவத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் -
இது குறித்து ஊழியர்களை விசாரித்தததில், அவை பல நாட்களுக்கு முன்பு எடுத்த காட்சிகள் என்றும், அவை விடுமுறை தினங்களில் அலுவலகத்திற்கு வந்த போது எடுத்தவை என்றும், நகராட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர், அவப்பெயர் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அவற்றை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே ஈடுபடாத காரணத்தால், இனி கடமையுடன் செயலாற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட ஊழியர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும் - ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையினை - நகராட்சி ஆணையர், திருநெல்வேலி மண்டல நகராட்சிகள் இயக்குனருக்கு அனுப்பி வைத்ததாகவும், அலுவலக நடைமுறைகளை பின்பற்றி பணியாற்ற வேண்டும் என்றும், இது போன்ற நிகழ்வுகளில் இனி ஈடுபடக்கூடாது என்றும் மண்டல இயக்குனர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளை ஆய்வு செய்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் திரு சோ அய்யர் IAS (ஓய்வு), கீழ்க்காணும் ஆணையை - தற்போது - பிறப்பித்துள்ளார்.
ஆணை விபரம் கீழே:
காயல்பட்டினம் நகராட்சி பணியாளர்களின் நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் பொதுமக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி இது போன்ற முறைக்கேடுகளில் ஈடுபடுவதை நகராட்சி பணியாளர்கள் அறவே தவிர்க்கவேண்டும். குறிப்பாக - அலுவலக வளாகங்களில், அலுவலக பணிகளை தவிர்த்து பிற செயல்களில் ஈடுபடுவதை இம்முறைமன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
சம்பந்தப்பட்ட பணியாளர்களின் செயல்பாட்டினை தொடர்ந்து கண்காணிக்கவும், காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளருக்கு அறிவுறுத்தி ஆணையிடப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|