Re:...வாழ்த்துக்கள்! posted byA.Tharvesh Mohammed (Kayalpatnam)[19 May 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 43888
மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்த வெற்றிச் செய்தி! அல்ஹம்துலில்லாஹ்!
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
அருமைச் சகோதரர் KAM முஹம்மது அபூபக்கர் அவர்கள், தமது இளமைக் காலத்திலிருந்தே பொது நலனிலும், சமூக முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டு தொலை நோக்குப் பார்வையுடன் செயலாற்றி வருபவர். தாம், தமது குடும்ப முன்னேற்றம் என்று ஒவ்வொருவரும் ஓடி உழைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இஸ்லாமிய சமுதாய நலனுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்.
25 ஆண்டுகளுக்கு முன் காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பில் துவங்கிய அவரது சேவை இன்று கோட்டையை நோக்கி பயணிக்கவுள்ளது.இந்த சட்ட மன்ற உறுப்பினர் பொறுப்பினை கடமையுணர்வுடன், அவருக்கு வாக்களித்த , வாக்களிக்காத மக்கள் என்று வேறுபாடு பார்க்காமல் அத்தொகுதி மக்கள் அனைவர்களும் பயன் பெரும் அளவில் தம்மால் இயன்ற அளவுக்கு சேவையாற்றி, சட்ட மன்ற உறுப்பினர் நிதியினை பயனுள்ள பல திட்டங்களுக்கு பயன்படுத்தி அத்தொகுதி மக்கள் மகிழ்ச்சியடையும் அளவுக்கு அவர் செயலாற்றுவார் என்று நம்பிக்கை கொள்ளலாம், இன்ஷா அல்லாஹ்!
அவரது சேவைகள் தொய்வின்றி தொடரவும், மென்மேலும் வளர்ந்தோங்கவும், மேலும் பல உயர்பதவிகள் பெற்று அதன் மூலம் நம் சமுதாயம் பலன் பெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக! ஆமீன்.
Re:.ஏழைகளின் வழிகாட்டி ..... posted byA.Tharvesh Mohammed (Kayalpatnam)[14 November 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38152
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
மர்ஹூம் வாவு புஹாரி ஹாஜி அவர்கள் மிகவும் மென்மையானவர். சமுதாயத்தின் மீதும் குறிப்பாக ஏழை எளியோர்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்.
கடந்த பல வருடங்களுக்கு முன்பு என்னிடம் வந்து உலகக் காயல் நல மன்றங்களின் இ மெயில் முகவரிகளை பெற்றுச் சென்று ஏராளமான ஏழைகளுக்கு குறிப்பாக ஆதரவற்ற மற்றும் விதவைப் பெண்களுக்கு சிறுதொழில், மருத்துவம் மற்றும் கல்வி உதவிகள் பெறுவதற்கு தொடர்ந்து வழிகாட்டியவர்.
இவர்களின் வழிகாட்டுதல் மற்றும் முயற்சியில் பல பெண்கள் தையல் இயந்திரம், கிரைண்டர், ஓவன் போன்ற பொருட்கள் காயல் நல மன்றங்கள் மற்றும் அமைப்புகளின் மூலம் கிடைக்கப் பெற்று இன்றும் தொழில் செய்து குடும்ப ஜீவனம் நடத்தி வருகின்றனர். இது மட்டுமல்ல பள்ளியில் பயிலும் இவர்களின் பிள்ளைகளுக்கு இலவச சீருடைகள் மற்றும் பாட நோட்டுக்களை அமைப்புகள் மூலம் வாங்கிக் கொடுத்துள்ளார்கள்.
சமீப காலத்தில் தங்களது இயலாத நிலையிலும் கூட ஏழைகளுக்கான வழிகாட்டும் பணியினை சிரமம் பாராது செய்து வந்தார்கள். இக்ராஃ கல்விச் சங்கத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார்கள். அவர்கள் பகுதியில் உள்ள மற்றும் அவர்களுக்கு அறிமுகமான இக்ராஃ உறுப்பினர்களின் முகவரிகளைப் பெற்றுச் சென்று அவர்களிடம் உறுப்பினர் சந்தாவைப் பெற்றுத் தருவார்கள்.
இக்ராஃ அலுவலகத்திற்குள் நுழையும் போதே ''இஞ்சி டீ கிடைக்குமா'' என்று கேட்டுக் கொண்டு புன்னகையுடனே வருவார்கள். நிறைய நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். சமுதாயச் சிந்தனையும், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் எப்போதும் மேலோங்கி இருக்கும்.
ஏழை-எளியோருக்கான உதவிகள் குறித்த ஏராளமான தகவல்களை பெற்றுச் சென்று மற்றவர்களுக்கு எத்தி வைப்பார்கள். அவர்கள் இக்ராஃ அலுவலகம் வரும்போதும் சரி, சாலையில் எங்கு கண்டாலும் சரி அவர்களை என் பைக்கில் ஏற்றிச் சென்று அவர்கள் இல்லம் விட்டு வருவேன் ஏராளமான சமயங்களில்! பொது நலனுக்காக, ஏழைகளுக்காக பணியாற்றும் அவர்களை அழைத்துச் சென்று இல்லம் சேர்ப்பிப்பதை ஒரு பாக்கியமாகவே கருதினேன். என்னை தொடர்ந்து ஊக்குவித்து, பாராட்டி, எனக்காக அடிக்கடி துஆ செய்வார்கள்.
அவர்களின் மறைவு குடும்பத்தினர்களுக்கு மட்டுமல்ல, பொது நல சேவகர்கள் மற்றும் வழிகாட்டலுக்காக ஏங்கித் தவிக்கும் ஏழை எளியோர்களுக்கும் இழப்புதான்.
கருணையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, அவனளவில் பொருந்திக் கொண்டு ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் எனும் மேலான சுவனபதியிலே அவர்களை தங்கச் செய்வானாக.
Re:... posted byA.Tharvesh Mohammed (Kayalpatnam)[25 April 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 34618
மாஷா அல்லாஹ்! ஒன்பது வருடத்தில் 72 இலட்சம் ரூபாய்க்கு உதவிகள்! சிங்கை காயல் நல மன்றத்தின் இந்த அற்புதமான சேவைகள் வெகுவாக பாராட்டப்பட வேண்டியவைகள்..
பல்வேறு நலத்திட்டங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வரும் சிங்கை காயல் நல மன்றம் குறுகிய காலத்தில் நிறைந்த தொகையை எட்டியுள்ளது அதன் தனித் தன்மையை காட்டுகிறது.மன்றத்தின் ஆலோசகர் பாளையம் ஹஸன் ஹாஜியார் அவர்கள் சொன்னது போன்று, உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள்தான் இதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.அத்துடன் நாணயத்தின் இரு பக்கத்தைப் போன்று இந்த வெற்றிக்கு மற்றொரு காரணமும் உண்டு.அது சிறந்த நிர்வாகிகளும், சிறந்த வழிகாட்டியும் ஆகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2012) நடைபெற்ற சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் இதே போன்றதொரு வருடாந்திர பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியில், இக்ராஃ நிர்வாகியாக- சிறப்பு அழைப்பாளராக நான் கலந்து கொண்ட போது, 12 தினங்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த போது அமைப்பின் பல்வேறு விஷயங்களை அவதானித்தேன்.அதில் ஒன்று நிர்வாகிகளின் அயராத உழைப்பு.அப்போது தலைவராக இருந்த சகோதரர் ரஷீது ஜமான்,செயலாளர் சகோதரர் மக்தூம் முஹம்மது,பொருளாளர் சகோதரர் KMT ஷேக்னா லெப்பை ஆகியோர் உட்பட அதன் நிர்வாகிகள் பலரும் பனிச் சுமைகளுக்கு மத்தியிலும் தங்களது பொறுப்பை திறம்பட செய்து வருவதை கண்டேன்.அது போன்று, திட்டத்துணைக் குழுவினரும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்களை திறம்படச் செய்து வருவதைக் காண முடிந்தது.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது மன்றத்தின் ஆலோசகர் பாளையம் ஹஸன் ஹாஜி அவர்கள். ஏதோ பெயரளவில் மன்றத்தின் ஆலோசகர் என்றில்லாமல் முழுமையான ஈடுபாட்டுடனும், சிங்கை காயல் நல மன்றத்தை மிகவும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கிலும், அவர்களது பனிச் சுமைகளுக்கு மத்தியிலும் மன்றத்தின் சேவைகள், நடவடிக்கைகள்,செயலாற்றவேண்டிய முறைகள் குறித்து அவ்வப்போது அமைப்பின் அங்கத்தினர்களுடன் பேசிக்கொண்டே இருந்ததைக் கண்டேன்.அது மட்டுமல்ல இந்த குடும்ப சங்கம நிகழ்ச்சி ஏற்பாட்டுப்பணிகளில் - அவர்களது அலுவலகப்பணிகளையும் தாண்டி- ஏதோ பள்ளி மாணவன் போன்று இறைச்சிக் கடைக்கும் , மளிகைக் கடைக்கும் நடையாய் நடந்ததையும்,சமையற்காரராய் மாறி வேலை செய்ததையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போனேன்.காரணம் பொதுவாக உயர்நிலையில் உள்ளவர்கள் இது போன்று கீழிறங்கி வேலை செய்வதில்லை.அதை விரும்புவதும் இல்லை.கவுரவம் தடுத்துவிடும்.ஆனால் சிங்கை காயல் நல மன்றத்தின் இந்த ஆலோசகர் ஆலோசனை சொல்வதோடு மட்டும் நின்று விடாமல், மன்றத்தின் அங்கத்தினர்களின் மகிழ்ச்சிக்காக கவுரவம் பாராமல் அடிமட்ட சாதாரண வேலைகள் வரை செய்வது அவர்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது.
தற்போதைய சிங்கை காயல் நல மன்றத்தின் நிர்வாகிகளும் மிகச் சிறப்பாக பணியாற்றி வருவதைக் காண முடிகிறது.ஒரு அமைப்பின் முதுகெலும்பாக கருதப்படுவது அதன் செயலாளர்தான். செயல் திறன் மிக்க செயலாளர் சகோதரர் மக்தூம் முஹம்மது அவர்கள் சிங்கை காயல் நல மன்றத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம். அவரது அயராத உழைப்பையும், சமுதாய நலனில் அவர் கொண்டுள்ள அதிக அக்கறையையும் கண்டு வியந்துள்ளேன்.
'' Helping hands are more Holier than praying lips '' என்றொரு வாக்கு உண்டு. சிங்கை காயல் நல மன்றத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து, ஏழை-எளியோர்களின் கண்ணீரைத் துடைக்கும், இறைவனுக்குகந்த இந்த அருமையான பணிகளை மிகவும் சிறப்பாக செய்து வருவதை பாராட்டும் அதே வேளையில், அவர்களனைவர்களின் நலமான, வளமான வாழ்வுக்காகவும், இந்த புனிதப்பணிகள் தொய்வின்றி தொடரவும் இறையிடம் துஆ கேட்போம்.
Re: புதிய நிர்வாகக் குழுவுக்கு வாழ்த்துக்கள் posted byA.Tharvesh Mohammed (kayalpatnam)[22 February 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 17125
மாஷா அல்லாஹ்! அருமையான சங்கமம்.அனைத்து போட்டோக்களையும் பார்த்தேன். பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல் உள்ளது. ஒற்றுமையுடன் கூடியுள்ள அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ்கிறது. இந்த புன்னகைக்குப் பின் பல அர்த்தங்கள் ஒளிந்துள்ளது. அதில் முதன்மையானதாக சொல்வதென்றால் ஏழைகளின் துயர் துடைப்பில் கிடைத்திட்ட ஆனந்தம் என்று சொல்லலாம். இதயத்தின் பள்ளத்தில் படிந்திருக்கும் ஆனந்தத்தின் வெளிப்பாடே இந்த மகிழ்ச்சியான சங்கமம்.
கடந்த காலத்தில் தலைவர் சகோதரர் நுஸ்கி, செயலாளர் சகோதரர் முஹம்மது நூஹு ஆகியோர் தலைமையில் ரியாத் காயல் நற்பணி மன்றம் சிறப்பாக செயலாற்றியது. பாராட்டுக்கள்.
தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் புன்னகை முகத்துக்கு மட்டுமல்ல தயாள குணத்திற்கும் சொந்தக்காரர் சகோதரர் மின்ஹாஜ் மற்றும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சகோதரர் கூஸ் அபூபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் திறமையானவர்கள்; இந்த பொறுப்புக்கு பொருத்தமானவர்கள். புதிய நிர்வாகக்குழு இறையருளால் சிறப்புடன் செயலாற்றிட வாழ்த்துக்கள்.
நான் பத்தாண்டுகளாக இவ்வமைப்பின் செயலாளராக பணியாற்றிய காலத்தில் நடைபெற்றதை விட பல மடங்கு வீரியத்துடனும், உற்சாகத்துடனும் தற்போதைய ரியாத் காயல் நற்பணி மன்றம் செயலாற்றுவதைப் பார்க்கும் போது மனதிற்கு உண்மையிலேயே சந்தோசமாக உள்ளது.
சமுதாயத்தின் மீதும், ஏழை-எளியோர்களின் மீதும் அளவற்ற பற்றுடனும், பாசத்துடனும் செயலாற்றிக் கொண்டிருக்கும் இக்கூட்டத்தை பார்க்கும் போது இவர்களுடன் இணைந்து பணியாற்ற மீண்டும் ரியாதுக்கு கிளம்பி விடலாமா என்று மனம் எண்ணுகிறது.
பேரருளாளன் அல்லாஹ் இந்த சகோதரர்களின் தூய்மையான சேவைகளை ஏற்று அருள் பாலிப்பானாக. இவர்களின் நன் முயற்சிகளில் வெற்றியை நல்குவானாக.ஆமீன்.
Re:சமுதாயத்துக்கு ஒரு இழப்பு posted byA.Tharvesh Mohammed (Kayalpatnam)[18 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 6994
முனைவர் ஹம்சா மொஹிதீன் அவர்களின் மறைவுச்செய்தி - அதுவும் விபத்தின் மூலம் என்றறிந்து மனம் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
மென்மையானவர். பழகுவதற்கு இனிமையானவர். இக்ரா சார்பாக அடிக்கடி அவரை சந்திக்கும் நேரமெல்லாம் புன்முறுவலுடன் வரவேற்பார். ஒவ்வொரு தடவை சந்திக்கும் போதும் ''IQRA doing great and wonderful job. ஏராளமான ஏழை மாணவிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது'' என்று மனமகிழ்ந்து பாராட்டி ஊக்கமளிப்பார். சில சமயம் பல ஆலோசனைகளை வழங்குவார். ஏழை மாணவிகளுக்கு உதவித்தொகை பெற்றுத்தருவதில் அதிக அக்கறை செலுத்துவார்.
அன்னாரின் மறைவு அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்ல வஜீஹா கல்லூரிக்கும், மாணவிகளுக்கும், சமுதாயத்திற்கும் ஒரு இழப்புதான். கருணையுள்ள ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து, ஜன்னத்துல் பிர்தவுஸ் எனும் மேலான சுவனபதியிலே அவர்களை தங்கச்செய்வானாக. அன்னாரின் கப்ரை பிரகாசமாகவும், விசாலமானதாகவும் ஆக்கியருள் புரிவானாக. ஆமீன்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்களுக்கும், ஏனையோர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆழ்ந்த துயரத்துடன்,
தர்வேஷ் முஹம்மது
நிர்வாகி, இக்ரா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross