சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட வருடாந்திர 09ஆவது பொதுக்குழு மற்றும் காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சியில், அம்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட - சிங்கப்பூர்வாழ் காயலர்கள் தம் குடும்பத்தினருடன் திரளாகப் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கமம்:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர 09ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், சிங்கப்பூர் ALOHA CHANGI BEACH FAIRY POINT CHALET 5 சுற்றுலா மாளிகையில், இம்மாதம் 12ஆம் நாள் சனிக்கிழமை 14.30 மணிக்குத் துவங்கி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 10.00 மணி வரை நடைபெற்றது.
புறப்பாடு:
சனிக்கிழமை 15.00 மணியளவில் - மன்ற உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் Beach Road நிறுத்தத்திலிருந்தும், 15.30 மணியளவில் Bedok North Avenue 4 நிறுத்தத்திலிருந்தும் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். 16.00 மணிக்கு அனைவரும் நிகழ்விடம் வந்தடைந்தனர்.
அஸ்ர் தொழுகை:
மாலை 16.30 மணிக்கு, சிங்கப்பூர் சைனா டவுண் ஜாமிஆ சூலியா பள்ளியின் துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ அஸ்ர் தொழுகையை வழிநடத்த, உறுப்பினர்களனைவரும் ஜமாஅத்தாக (கூட்டாகத்) தொழுதனர்.
தேனீர் & சிற்றுண்டி:
16.45 மணிக்கு ‘ஜித்தா புயல்’ செய்மீன் காக்காவின் கைவண்ணத்தில் காயல் ஸ்பெஷல் இஞ்சி தேனீருடன் வாழைக்காய் - உருளைக்கிழங்கு பஜ்ஜி அனைவருக்கும் பறிமாறப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டு:
17.00 மணிக்கு, உறுப்பினர்கள் சுற்றுலா மாளிகையின் வெளிப்புற மைதானத்தில், நட்பு போட்டியாக கிரிக்கெட் விளையாடினர். இதில் உறுப்பினர்கள் வயது வரம்பின்றி களத்தில் இறங்கி ஆர்வத்தோடு விளையாடினர்.
மகளிருக்கான கேரம் போட்டி:
அதே நேரம் மாளிகையின் மேல் மாடியில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில், மகளிருக்கான கேரம் போட்டி நடைபெற்றது. அணிக்கு இருவர் என மொத்தம் ஆறு அணிகளாக விளையாடினர். இப்போட்டியில் முதல் மூன்றிடங்களைப் பெற்றோர்:
முதலிடம்:
எம்.ஏ.ஃபாத்திமா ஸபீனா (க.பெ.A.M.உதுமான்)
பாளையம் முஹம்மது மீராநாச்சி (க,பெ.M.J.செய்யது அப்துர் ரஹ்மான்)
இரண்டாமிடம்:
ஃபவுஸியா (A.M.உதுமானின் தாயார்)
பாளையம் முஹம்மது மீராநாச்சி (க,பெ.பாளையம்.முஹம்மத் அப்துல் காதர்)
மூன்றாமிடம்:
பீவி ஃபாத்திமா (க.பெ.அஸ்கர்)
ஃபாஹிமா (க.பெ. ஹஸன் சுலைமான்)
குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்:
17:45 மணிக்கு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்கின. போட்டிகளும், அவற்றில் வென்றோர் விபரமும் வருமாறு:
பலூன் உடைத்தல்:
துவக்கமாக பலூன் உடைக்கும் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு சாளை நவாஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். போட்டியின் நிறைவில் முதலிடங்களைப் பெற்ற மழலையர்:
முதலிடம்:
S.M.தைக்கா சாஹிப்
இரண்டாமிடம்:
ஃபவ்ஜுல் ஹினாயா
கவன நடை:
இப்போட்டியில் பங்கெடுக்கும் மழலையர்கள் தமது வாயில் கரண்டியை வைத்து, அதில் சிறிய எலுமிச்சைப்பழத்தை தாங்கி அதை விழ விடாமல் மூன்று சுற்றுகள் வலம் வர வேண்டும்.
இப்போட்டியில் முதலிடங்களைப் பெற்ற மழலையர் விபரம்:
முதலிடம்:
துல்கிஃப்ல்
இரண்டாமிடம்:
மிஃப்ரா
வண்ணம் தீட்டுதல்:
இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மழலையருக்கும் ஓவியங்கள் வழங்கப்பட்டு, அதற்குத் தகுந்த வண்ணம் தீட்டுமாறு பணிக்கப்பட்டனர். இதில் முதலிடங்களைப் பெற்ற மழலையர் விபரம்:
முதலிடம்:
ஃபவ்ஜுல் ஹினாயா
இரண்டாமிடம்:
ஷாதின் இஸ்மாஈல்
மூன்றாமிடம்:
ஆயிஷா
பரிசளிப்பு:
18.10 மணிக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், மன்றத்தின் நடப்பு வருடாந்திர 09ஆவது பொதுக்குழுவை முன்னிட்டு நடத்தப்பட்ட அனைத்து போட்டிகளிலும் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு நிகழ்ச்சியை ஹாஃபிழ் ஷாகுல் ஹமீத் பாதுஷா திருமறை வசனத்தை ஓதி துவங்கி வைத்தார். மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் செயலாளர் மொகுதூம் முஹம்மத் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பொதுக்குழுவிற்கு வந்திருந்த அனைத்து குழந்தைகளுக்கும் பாடசாலை பை (School bag) வழங்கப்பட்டது.
ஒருநாள் ஊதிய நன்கொடை சேகரிப்பு:
மஃரிப் தொழுகைக்குப் பின், உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே வெள்ளை நிறத்திலான வெற்றுறை (கடிதஉறை) வழங்கப்பட்டது. அதில் மன்றத்தின் நகர்நலத் திட்டங்களுக்காக, உறுப்பினர்கள் தமது ஒருநாள் ஊதியத்தை அதில் வைத்து அதற்காக பிரத்தியேகமாக ஆயத்தம் செய்யப்பட்ட அட்டைப்பெட்டி உண்டியலில் செலுத்தினர்.
இவ்வாறு பெறப்பட்ட நன்கொடை வசூலில் ஆறாயிரம் சிங்கப்பூர் டாலர் - அதாவது, சுமார் 2 லட்சத்து 88 ஆயிரம் இந்திய ரூபாய் சேகரமானது. இத்தொகை, மன்றக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம்:
19.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது. கூட்ட நிகழ்வுகள் வருமாறு:-
ஹாஃபிழ் எம்.எஃப்.பஸல் இஸ்மாஈல் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் மன்றத்தின் சார்பில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவரது உரைச் சுருக்கம்:-
2004ஆம் ஆண்டு, சொற்ப உறுப்பினர்களைக் கொண்டு துவங்கப்பட்ட இம்மன்றம் 09ஆவது ஆண்டைப் பூர்த்தி செய்து, தற்போது 10ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நாளுக்கு நாள் மன்றத்தின் செயல் திறனும், அதைத் தழுவிய உதவிகளும் அதிகரித்தே வருகின்றது.
இது வரையில் மன்றத்தின் சார்பில் 1.5 லட்சம் சிங்கப்பூர் டாலர் - அதாவது இந்திய ரூபாய் 72 லட்சம் வரை பல்வேறு உதவிக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மன்றத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களே ஆவர். தற்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளபடியால், இனி வருங்காலங்களில் அனைவரின் ஒத்துழைப்போடு இன்னும் நிறைய உதவித் திட்டங்களை நம்மால் நடைமுறைப்படுத்த இயலும் என்பதை எண்ணுகையில் பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
தலைமையுரை:
கூட்டத் தலைவரும், மன்றத் தலைவருமான ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் தலைமையுரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
பத்தாம் ஆண்டில் கால் பதித்திருக்கும் இம்மன்றம் தமது ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினால் அதிக உதவிகளைச் செய்து வருகின்றது. முக்கியமாக கல்விக்கான உதவி அதிகரித்துள்ளது. மன்றத்தின் வரவு செலவு மிகுந்த மன நிறைவைத் தருகிறது.
கல்வி, மருத்துவம், சிறுதொழில், என பல்வேறு உதவிகளை நாம் வழங்கி வரும் நிலையில், நமதூரில் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் - யாரிடமும் உதவி கேட்கத் தயங்கும் மூத்த வயதினரைக் கண்டறிந்து, அவர்களுக்கு பிறர் அறியாவண்ணம் கண்ணியமான முறையில் மாதாந்திர உதவித்தொகையை மன்றம் வழங்கி வருகிறது. இதுதான் மார்க்கம் நமக்கு கற்றுத்தந்துள்ள அழகிய உதவி வழங்கல் முறை.
அவ்வாறு உதவி பெறுவோரின் தன்மானத்திற்கு சிறிதும் பங்கம் வராத வகையில் அவர்களது பெயர் மற்றும் விபரம் பொறுப்பாளர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இனியும் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கிறோம். பொது நலனில் அக்கறை கொண்டு பாடுபட்டு வரும் நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.
மேலும் மன்றம் நடத்திய அனைத்துப் போட்டிகளிலும் முதன்மையானதும், தமக்கு மிகவும் மனமகிழ்ச்சியை அளித்ததுமான ஹிஃப்ழுல் குர்ஆன் மனனப்போட்டியை, இன்ஷா அல்லாஹ் இனி வருங்காலங்களில் இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்கு இறைவன் துணை செய்வானாக.
இவ்வாறு, மன்றத் தலைவர் தலைமையுரையாற்றினார்.
ஆண்டறிக்கை:
மன்றத்தின் 2013 ஏப்ரல் முதல் 2014 மார்ச் மாதம் வரையிலான ஆண்டறிக்கையை, கணினி உதவியுடன் பவர்பாய்ண்ட் முறையில் மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத், துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் அனைவருக்கும் விளக்கினார். (ஆண்டறிக்கை தனிச் செய்தியாக வெளியிடப்படும்.)
வரவு - செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் பவர் பாய்ண்ட் ஸ்லைட் முறையில் அனைவருக்கும் விவரித்தார். இந்த ஆண்டு இது வரையிலான சந்தா மற்றும் நன்கொடையாகப் பெறப்பட்ட தொகை, நலத்திட்டங்களுக்கான உதவித்தொகை போக இருப்பு நிதியை அவர் அறிவித்தார். அதற்கு மன்றம் ஒப்புதல் அளித்தது.
மழலையர் நிகழ்ச்சி:
கூட்டத்தைக் கலகலப்பாக்குவதற்காக, மன்ற உறுப்பினர்களின் மழலைக் குழந்தைகள் பங்கேற்பில் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. உறுப்பினர்களது செல்லக் குழந்தைகள் தமது கொஞ்சும் மொழியால் திருமறை குர்ஆனின் சில வசனங்களை ஓதியும், நபிமொழிகளை நவின்றும், இதர நிகழ்ச்சிகளின் மூலமும் பார்வையாளர்களுக்கு பரவசமூட்டினர்.
துணைக்குழு உறுப்பினர்கள் கருத்துரை:
இதுநாள் வரை மன்றத்தின் துணைக்குழு உறுப்பினர்களாகச் சேவையாற்றிய
கே.எஸ்.நூருல் அமீன்
எம்.எம்.அப்துல் காதிர்
ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப்
ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல்
எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ
ஆகியோர், தம் பொறுப்புக் காலங்களில் நடைபெற்ற மன்றத்தின் செயற்குழுக் கூட்டங்கள் மூலம் தாம் பெற்ற அனுபவங்களை தமது கருத்துரைகள் மூலம் பகிர்ந்துகொண்டனர்.
சுழற்சி முறையில் இந்த வாய்ப்பைப் பெற்ற தமக்கு மன்றத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நேரில் காணும் வாய்ப்பு கிட்டியதாகவும், செயல்திட்டங்கள், உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தல், முடிவெடுத்தல், தீர்மானங்கள் நிறைவேற்றல் போன்ற அனைத்து நடப்புகளும் தமக்கு மிகப்பெரும் அனுபவத்தை தந்துள்ளதாகவும், இனி வரும் துணைக்குழு உறுப்பினர்களும் இதுபோன்ற பணிகளில் தம்மை இதில் இணைத்துக் கொண்டு சேவையாற்ற வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
புதிய துணைக்குழு உறுப்பினர்கள் தேர்வு:
ஏப்ரல் 2014 முதல் செப்டம்பர் 2014 வரையுள்ள பருவத்திற்கு புதிதாகத் துணைக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு தேர்வு செய்யப்பட்டனர்:-
(1) எம்.ஜே.செய்யித் அப்துர் ரஹ்மான்
(2) ஹாஃபிழ் கே.டி.ஷாஹுல் ஹமீத் பாதுஷா
(3) ஆர்.எம்.எஸ்.முஹம்மத் மொஹிதீன்
(4) ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் காஸிம்
(5) எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத்
(6) ஹாஃபிழ் சாவன்னா பி.ஏ.ஷாஹுல் ஹமீத்
துணைக் குழுவினரின் பொறுப்புகள் குறித்து, மன்றத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் இஸ்மாஈல் விளக்கிப் பேசினார்.
பின்னர், ஹிஃப்ழுப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
படக்காட்சிகளால் மலர்ந்த நினைவுகள்:
2013ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒன்றுகூடல், சிற்றுலா உள்ளிட்ட மன்ற நிகழ்ச்சிகள் படக்காட்சிகள் திரையிடப்பட்டன. இது, உறுப்பினர்களின் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துரை:
இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - ஓமன் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி இஸ்மாஈல் ஸூஃபீ வாழ்த்துரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம்:-
இந்த மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது. பரபரப்பு மிகுந்த இந்த நாட்டிலும் கூட - திட்டமிட்ட படி கச்சிதமாக இவ்வளவு உறுப்பினர்களை அழைத்து வந்து உணவு, தங்குமிட வசதி செய்து, சிறப்பான முறையில் ஒன்றுகூடலை நடத்துவது உண்மையிலேயே எனக்கு பெரும் வியப்பளிக்கிறது.
மன்றத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள உதவிகள் அனைத்தும் மிகவும் அவசியமானவையே. எனது வெளிநாட்டு வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு மன்றத்தை நான் பார்த்ததில்லை.
இவ்வாறு அவர் மனம் நெகிழ்ந்து உரையாற்றினார்.
தொடர்ந்து, அண்மையில் சிங்கப்பூரில் வேலைவாய்ப்பைப் பெற்று, மன்ற உறுப்பினராகி, செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பு வகிக்கும் எம்.என்.எல்.முஹம்மத் ரபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் உரையாற்றினார். சிங்கப்பூரில் தகுந்த வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு, இம்மன்றத்தின் மூலம் கிடைக்கபெற்ற உதவிகள் மற்றும் உறுப்பினர்களின் வழிகாட்டுதல்கள் குறித்து அவர் பாராட்டிப் பேசி, உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நிறைவுரை மற்றும் இறைவேண்டல்:
சிங்கை - மஸ்ஜித் ஜாமிஆ சூலியாவின் இமாமும், மன்ற உறுப்பினருமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்து நிறைவுரையாற்ற, ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் இறைவேண்டல் - துஆ பிரார்த்தனையுடன் 21.15 மணியளவில் கூட்ட நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இரவு நேர சஹன் சாப்பாடு:
சமையல்கட்டு சமாச்சாரம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. சமைப்பதற்கு உதவி செய்ய திறமையான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, காய்கறிகள் வெட்டுதல், பாத்திரம் கழுவுதல், தேனீர் வினியோகம் என பொறுப்புகள் முன்னரே பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.
உணவுத்துறை தலைமை பொறுப்பு ‘ஜித்தா புயல்’ செய்மீன் காக்காவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அவர், நாவிற்குச் சுவையான பிரியாணி, தனக்கே உரிய நகைச்சுவையுடன் சமைப்பதில் மும்முரமாக இருந்தார். இளசுகள் அவ்வப்போது அவரைச் சீண்டியதும், அவர் சீறியதும் காணக்கிடைக்காத அரிய பொழுதுபோக்குக் காட்சிகள்.
சுற்றுலா மாளிகையின் வரவேற்பறையில் ஆண்களுக்கும், மேல் மாடியில் பெண்களுக்கும் என - மட்டன் பிரியாணி, தயிர் சம்பல், இனிப்பு பச்சடி ஆகியன சஹன் முறையில் பரிமாறப்பட்டது.
நள்ளிரவில் பார்பிக்யூ:
முதல் நாள் இரவிலேயே வசிப்பிடம் திரும்புவோருக்காக சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களைத் தவிர்த்து பெரியவர்கள் தத்தம் அறைகளில் உறங்கச் சென்றனர். இளைஞர் பட்டாளம் வெளிப்புறத்தில் கூடியமர்ந்து அரட்டையில் ஈடுபட்டிருந்தனர். இன்னும் சிலர் கடலோரக்காற்று வாங்க கால்நடையாகச் சென்றிருந்தனர்.
00.00 மணிக்கு சாளை நவாஸ் அடுப்புக் கரியில் தீ மூட்ட, ஹிஜாஸ் மைந்தன் சுட்டெடுத்த சூட்டுக்கறி வாடை, வாடைக் காற்றில் கலந்து, பலரது உறக்கத்தைக் கலைத்தது. விழித்திருந்தோருக்கு சிக்கன் பார்பிக்யூ சுடச்சுட பறிமாறப்பட்டது.
காலை உணவாக கறிக்கஞ்சி:
காலையில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்னர் தேனீரும், 07.00 மணியளவில் மன்றத்தின் ஆலோசகர் பாளையம் ஹாஜி முஹம்மத் ஹஸன் தயாரிப்பில் காயல் கறிக்கஞ்சியும் அனைவருக்கும் காலை உணவாக பரிமாறப்பட்டது.
குழுப்படம்:
நடப்பு வருடாந்திர பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தோர் கூட்டாக சேர்ந்து குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.
நல்லதொரு ஒன்றுகூடலில் கலந்துகொண்டு, மனமகிழ்வோடும் - மாறாத நினைவுகளைச் சுமந்தவர்களாகவும் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் 10.00 மணியளவில் தத்தம் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். அவர்களை அழைத்துச் செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு, சிங்கை கா.ந.மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
KWAS செய்தி தொடர்பாளர்
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர 08ஆவது பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |