நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் - காயல்பட்டினத்தில் வாக்குப்பதிவு 62.48 சதவீதம் அளவில்
இருந்துள்ளது. இது 1999 (52.37%) , 2004 (55%), 2009 (57%) ஆகிய ஆண்டுகளில்
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விகிதத்தை விட அதிகம்.
காயல்பட்டினத்தில் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் (66.69%), 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் (68.64%)
காலங்களில் - பதிவான வாக்குகளோடு பார்க்கும்போது இது குறைவு.
1999ம் ஆண்டும் (நாடாளுமன்றம்), 2001ம் ஆண்டும் (சட்டசபை) நகரில் பதிவான வாக்குகள் முறையாக 52.37%
மற்றும் 49.05%. ஆர்வக்குறைவுக்கான காரணம் - தி.மு.க. - அத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியுடன்
கூட்டணி ஏற்படுத்திக்கொண்டது இருக்கலாம்.
காயல்பட்டினம் மக்கள் - பொதுவாக சட்டமன்றத் தேர்தலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாடாளுமன்றத்
தேர்தலுக்கு கொடுப்பதில்லை. இருப்பினும் - கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் போது பதிவான
வாக்குகளைவிட தற்போது அதிகம் வாக்குகள் பதிவாகியிருப்பது - களத்தில் எண்ணிக்கையில் அதிகமான
கட்சிகள், அதனால் அதிகரித்த விழிப்புணர்வு, தேர்தலில் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள் போன்றவை
காரணமாக இருக்கலாம்.
கடந்த சட்டசபை தேர்தலில் பதிவான சதவீதத்தை விட சுமார் 6 சதவீதம் குறைவாக காயல்பட்டினத்தில்
வாக்குகள் பதிவாகியிருந்தாலும் (2011: 68.64%; 2014: 62.48%), எண்ணிக்கையில் சுமார் 500 வாக்குகள் தற்போது
அதிகமாக பதிவாகியுள்ளது (2011: 19,499; 2014: 19,922). இதற்கு முக்கிய காரணம் - வாக்காளர்களின்
எண்ணிக்கையில் காணப்பட்ட உயர்வு (2011: 28,313; 2014: 31,886).
காயல்பட்டினத்தில் வாக்குப்பதிவு எந்த கட்சிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கும் என்பதனை துல்லியமாக
கணிப்பது கடினம் என்றாலும் - 2011ம் ஆண்டு நடந்த சட்டசபைக்கான தேர்தல் முடிவுகளை அளவுகோளாக
வைத்து - சில கணிப்புகளை மேற்கொள்ளலாம்.
2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது - நகரில் - தி.மு.க., 11,703 வாக்குகள் பெற்றது. அ.தி.மு.க., 7,302
வாக்குகள் பெற்றது. பாரதிய ஜனதா கட்சி 151 வாக்குகளும் - இதர கட்சிகள், சுயேட்சைகள் - 340 வாக்குகள்
பெற்றன.
இந்த தேர்தலில் வாக்குகள் எவ்வாறு ஒவ்வொரு கட்சிக்கும் சென்றிருக்கும் எனக் காணுமுன், அளவுகோல்
தேர்தலான 2011 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் எவ்வாறு இருந்தது என்று பார்ப்போம்.
2011 சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. அணியில் - காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகியோர்
இருந்தனர்.
அ.தி.மு.க. அணியில் - தே.மு.தி.க., கம்யூனிஸ்ட்கள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை
இடம்பெற்றன.
நடப்பு தேர்தலில் - அ.தி.மு.க. தனியாக தேர்தலை சந்திக்கிறது.
தி.மு.க. அணியில் இருந்த காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை விலகிவிட்டன. புதிய தமிழகம், மனித
நேய மக்கள் கட்சி ஆகியவை - தி.மு.க. அணிக்கு மாறியுள்ளன.
அ.தி.மு.க. அணியில் இருந்து பிரிந்த தே.மு.தி.க, தி.மு.க. அணியில் இருந்து பிரிந்த பாட்டாளி மக்கள் கட்சி,
சட்டமன்றத் தேர்தலில் கலந்துக்கொள்ளாத ம.தி.மு.க. ஆகியவை - பாரதிய ஜனதா கட்சியுடன்
இணைந்துள்ளன.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக நிற்கின்றன.
இவ்வாறு 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல் காட்சியில் இருந்து மாறி காட்சி அளிக்கும் தேர்தல் களத்தில் - ஆம்
ஆத்மி கட்சி, புதிதாக அறிமுகமாகியுள்ளது.
இந்த பின்னணியில் - நகர வாக்குகள், எவ்வாறு ஒவ்வொரு கட்சிக்கும் சென்றிருக்கும்?
நகரில் 19,922 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் கம்யூனிஸ்ட் கட்சி, இதர கட்சிகள், சுயேட்சைகள் மற்றும்
NOTA - 500 வாக்குகள் பெறலாம்.
இந்த தேர்தலில் - தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராக நின்றவர்களில், திறமை வாய்ந்தவராக கருதப்பட்ட
இரு வாக்காளர்களில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சண்முகம். மற்றொருவர் - ஆம் ஆத்மி
கட்சியின் வேட்பாளர் புஸ்பராயன்.
சண்முகம் நகரில் மேற்கொண்ட பிரச்சாரம், இவருக்கு ஆதரவாக இக்கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன்
- நகரில், பொதுக்கூட்டத்திலும் பேசியது ஆகியவை இக்கட்சிக்கு - ஓர் அளவு ஆதரவை பெருக்கியது. நகரின் மேற்கு
பகுதியில் அக்கட்சிக்கு என்று உள்ள ஆதரவும் சேர்ந்து - நகரில் - குறைந்தது 1000 வாக்குகளை காங்கிரஸ்
கட்சி பெற வாய்ப்புள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் - பாரதிய ஜனதா கட்சி, நகரில் 151 வாக்குகள் பெற்றது. தற்போது -
அக்கட்சியுடன் - தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகியவை கூட்டணியில் உள்ளன. இக்கட்சிகளின் தனிப்பட்ட
செல்வாக்கு நகரில் எந்த அளவில் உள்ளது என்பது தெளிவில்லை என்றாலும், நகரின் புற நகர் பகுதிகளில் -
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சி ம.தி.மு.க. வேட்பாளர் ஜோயலுக்கு - குறிப்பிடும்படியான அளவில்,
வாக்குகள் (சுமார் 1500 முதல் 2000 வரை) விழுந்திருக்கும் எனக்கூறப்படுகிறது. இந்த வாக்குகள் - சில
பகுதிகளில் தி.மு.க.வின் அனிதா ஆதரவாளர்கள் வாக்குகள் என்றும், சில பகுதிகளில் அ.தி.மு.க. ஆதரவு
வாக்குகள் என்றும் கூறப்படுகிறது.
புதிதாக களம் கண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, கனிசமான வாக்குகளை நகரின் கிழக்கு பகுதி மற்றும் கடலோர
பகுதிகளிலும், மற்ற உள்ளூர் பகுதிகளில் குறிப்பிடும்படியிலான அளவிலும் பெறும் என்றும் கூறப்படுகிறது. நகரில்
ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு எண்ணிக்கை 2500 - 3000 அளவில் இருக்கலாம்.
நகரில் பதிவான் எஞ்சிய 14,000 வாக்குகளை தி.மு.க. வும், அ.தி.மு.க. வும் - பகிர்ந்துக்கொள்ளும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் - இரு கட்சிகளும் சேர்ந்து ஏறத்தாழ 19,000 வாக்குகள் பெற்றிருந்தன. அதில்
சுமார் 5000 வாக்குகளை தற்போது 4 கட்சிகள் பெற வாய்ப்புள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் - நகரின் 29 வாக்கு சாவடிகளில், அ.தி.மு.க., 10 வாக்கு சாவடிகளில்
பெருவாரியான வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், இத்தேர்தலில் - அக்கட்சி - நகரில் தனக்கு பலமான,
கடலோர பகுதிகளில் குறிப்பிடும்படியிலான வாக்குகளை ஆம் ஆத்மி கட்சியிடம் இழக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் புற நகர்
பகுதிகளில் தான் வழமையாக பெறும் வாக்குகளில் குறிப்பிடும்படியிலான வாக்குகளை ம.தி.மு.க. கட்சியிடம்
இழக்கும் என்றும் கூறப்படுகிறது.
அக்கட்சியின் உள்ளூர் வாக்குகளுக்கு - பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
இந்த
கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, தான் - முன்னர் பெற்ற 7,302 வாக்குகளில் சுமார் 1500 வாக்குகளை -
அக்கட்சி, இத்தேர்தலில் நகரில் இழக்க வாய்ப்புள்ளது.
பாரம்பரியமாக அ.தி.மு.க. விற்கு வாக்களிக்கும் குடும்பங்களின் புதிய வாக்காளர்கள் இக்கட்சிக்கு வாக்களிக்கும்
வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டால் - அ.தி.மு.க., நடப்பு பாராளுமன்ற தேர்தலில், நகரில் சுமார் 6,000
வாக்குகள் பெற வாய்ப்புள்ளது.
தி.மு.க. - கடந்த சட்டமன்றத் தேர்தலில் 11,703 வாக்குகள் பெற்றது. இது முந்தைய தேர்தல்களை விட குறைவு.
இந்த தேர்தலிலும், இக்கட்சி இறங்கு முகம் காணும் என்றே தெரிகிறது.
இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், பெரிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை.
அவரின் ஆதரவாளர்கள் - உள்ளூர் பகுதிகளில் தி.மு.க.விற்கு வாக்களிக்காமல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு
வாக்களிக்கவும், புறநகர் பகுதிகளில் தி.மு.க.விற்கு வாக்களிக்காமல் ம.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு
வாக்களிக்கவும் - தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது ஏறத்தாழ - அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.
அழகிரியின் நிலைப்பாடு.
தி.மு.க. விற்கு முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்
போன்றவை ஆதரவு தெரிவித்தாலும், உள்ளூர் பகுதிகளில் அக்கட்சிக்கு பொதுவாக செல்லும் வாக்குகளும்,
இம்முறை பெருவாரியாக ஆம் ஆத்மி கட்சிக்கும், குறிப்பிடும்படியிலான அளவில் காங்கிரஸ் கட்சிக்கும்
சென்றுள்ளது.
எனவே - 2011 சட்டமன்றத் தேர்தலில் தான் பெற்ற 11,703 வாக்குகளில் - இக்கட்சி கனிசமான
வாக்குகளை - சுமார் 3,500 வரை நடப்பு தேர்தலில் இழந்து, நகரில் சுமார் 8000 வாக்குகளை பெற
வாய்ப்புள்ளது.
|