அறிவுத்துளிர் குடும்ப நண்பர்கள் வட்டம், நிரஞ்சனம் மன நல மன்றம் ஆகியவற்றின் சார்பில், பெண் எழுத்தாளர் பே.சாந்தியுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி, இம்மாதம் 13ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருச்செந்தூர் பிரதிநிதி தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பேராசிரியர் சுப்பிரமணியன், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் இ.எம்.சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துளிர் அறக்கட்டளை செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அதன் நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
மேலப்பாளையம் நகரில் வசிக்கும் முஸ்லிம்களின் இன வரைவியலை ஆய்வு செய்து, அவர்களின் உண்மையான வாழ்க்கை நிலையை “மேலப்பாளையம் முஸ்லிம்கள்” எனும் தனது நூலின் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைத்த எழுத்தாளர் பே.சாந்தி சிறப்புரையாற்றினார்.
முஸ்லிம்கள் மீது இந்த நாட்டில் பரப்பப்படும் அவதூறுகள் அனைத்தும் திட்டமிட்டு செய்யப்படுபவை என்றும், இத்தீமையைக் களைய வேண்டுமானால், அவர்கள் சமூகத்தில் தனியாகப் பிரிந்து நிற்காமல், அனைவரோடும் கலந்து வாழ வேண்டும் என்று அவர் தனதுரையில் கூறினார். உரையைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் கேள்விகளுக்கும் அவர் விளக்கமளித்துப் பேசினார். எழுத்தாளருக்கு, துளிர் நிர்வாகத்தின் சார்பில், அதன் மறுவாழ்வு திட்டப்பணிகள் தலைவர் அ.வஹீதா, எஸ்.ஓ.பி.ஆயிஷா ஆகியோர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
கொமந்தார் இஸ்மாஈல் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, துளிர் அலுவலக மேலாளர் சித்தி ரம்ஸான் ஒருங்கிணைப்பில், குழுவினர் செய்திருந்தனர்.
துளிர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |