கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்றத்தின் 5ஆம் ஆண்டு துவக்க விழாவாக நடைபெற்ற அம்மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், பணியிட மாற்றலாகிச் செல்லும் மன்றத் துணைத்தலைவருக்கு பிரியாவிடையளித்து வழியனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், 09.03.2014 அன்று, பெங்களூரு லால்பாக் பூங்காவில் - 5ஆம் ஆண்டு துவக்க விழாவாக நடைபெற்றது.
வருகை:
அன்று நண்பகல் 12.00 மணியளவில், மன்ற அங்கத்தினர் பலர் குடும்பத்தினருடன் தமது வசிப்பிடங்களிலிருந்து நிகழ்விடம் வந்தடைந்தனர். கையோடு கொண்டு வந்திருந்த மதிய உணவு பதார்த்தங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துண்டவர்களாக சிறிது நேரம் அவர்கள் அரட்டையில் ஈடுபட்டனர். வெகு நாட்களுக்குப் பிறகு அனைவரும் ஓரிடத்தில் சந்தித்துக்கொண்டதால், அரட்டை உணர்வுப்பூர்வமாக அமைந்திருந்தது.
பொதுக்குழுக் கூட்டம்:
16.00 மணியளவில் அனைவரும் நிகழ்விடம் வந்தடைந்தனர். 16.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது. ஹாஃபிழ் மன்னர் பி.ஏ.செய்யித் அப்துர்ரஹ்மான் கூட்ட நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மன்றத்தலைவரின் மகனான இளவல் இசட்.என்.அப்துல்லாஹ் ஸாஹிப் இறைமறை வசனங்களை கிராஅத்தாக ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
ஆண்டறிக்கை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன், மன்றத்தின் 2013ஆம் ஆண்டறிக்கையை கூட்டத்தில் சமர்ப்பித்தார். (ஆண்டறிக்கை தனிச்செய்தியாக வெளியிடப்படும்.)
நகர்நலன் குறித்த - உறுப்பினர்களின் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
புதிய நிர்வாகிகள்:
ஆலோசனைக் குழு:
(1) ஹாஜி எம்.ஏ.அப்துர்ரஹீம்
(2) ஹாஜி எஸ்.டி.ஷேக்னா மஹ்ழரீ
(3) பி.எம்.டி.அப்துர்ரஹ்மான்
தலைவர்:
ஹாஜி பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் (Zumi Solutions)
துணைத்தலைவர்கள்:
(1) ஜபரூத் மவ்லானா (ஹனீவெல்)
(2) டைமண்ட் அப்துர்ரஹ்மான்
செயலாளர்:
முஹம்மத் இப்றாஹீம் நவ்ஷாத்
துணைச் செயலாளர்கள்:
(1) ஹாஃபிழ் ஷேக் அப்துல்லாஹ் முஹாஜிர்
(2) குளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர்
பொருளாளர்:
வாவு முஹம்மத்
துணைப் பொருளாளர்:
ஹாஃபிழ் மன்னர் பி.ஏ.செய்யித் அப்துர்ரஹ்மான்
செயற்குழு உறுப்பினர்கள்:
(1) ஹாஃபிழ் மக்கீ இஸ்மாஈல்
(2) ஷேக் சுலைமான் (Juniper)
(3) கே.எம்.எஸ்.உமர்
(4) ஷேக் அப்துல் காதிர்
ஷிஃபா பிரதிநிதி:
வி.டி.என்.மஹ்மூத்
துளிர் பிரதிநிதி:
ஜாஃபர் சுலைமான்
செயல்திட்டங்கள் விளக்கவுரை:
நடப்பாண்டு மன்றத்தால் செய்ய திட்டமிடப்பட்டுள்ள செயல்திட்டங்கள் குறித்து, மன்றத்தின் புதிய செயலாளர் முஹம்மத் இப்றாஹீம் நவ்ஷாத் விளக்கிப் பேசினார்.
மாதம் ஒருமுறை மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தையும், 3 மாதங்களுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அனைத்துறுப்பினர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பளிக்குமாறும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
மன்றத்தால் திட்டமிடப்பட்டுள்ள Mentor and Menti Programme குறித்து, புதிய துணைத்தலைவர் ஜபரூத் மவ்லானா விளக்கிப் பேசினார்.
துணைத்தலைவருக்கு பிரியாவிடை:
மன்றம் துவங்கப்பட்ட காலம் முதல், நகர்நலப் பணிகள் மற்றும் மன்றப் பணிகளை ஊக்கத்துடன் செய்து வந்த நிலையில், தற்போது சென்னைக்கு பணியிட மாற்றலாகிச் செல்லும் - மன்ற துணைத்தலைவர் கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் அவர்களது சேவைகளைப் பாராட்டி, அவரது வருங்காலம் சிறந்தோங்க இக்கூட்டத்தில் வாழ்த்திப் பிரார்த்தித்து, நினைவுப் பரிசு வழங்கி பிரியாவிடையளிக்கப்பட்டது.
விடைபெற்றுச் செல்லும் - மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஏற்புரையாற்றினார்.
வெறும் 5 பேரை மட்டும் அங்கத்தினராகக் கொண்டு துவங்கப்பட்ட இம்மன்றம் இன்று இந்தளவுக்கு தழைத்தோங்கியுள்ளது - அதன் நிறுவன உறுப்பினர்களுள் ஒருவர் என்ற அடிப்படையில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், இம்மன்றத்தின் நகர்நலச் செயல்பாடுகள் அனைத்தும் இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்டதாக அமையவும், அதன் நற்கூலிகள் அனைவருக்கும் நிறைவாகக் கிடைத்திடவும் தான் மனதாரப் பிரார்த்திப்பதாக அவர் தனதுரையில் கூறினார்.
சிறப்புரை:
மன்றத்தின் புதிய ஆலோசனைக் குழு உறுப்பினர் மவ்லவீ எஸ்.டி.ஷேக்னா மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.
சகோதரத்துவம், ஒற்றுமை, சேவை மனப்பான்மை குறித்து சன்மார்க்கச் சான்றுகளை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், மன்றத்தின் நிதி மூலாதாரமான சந்தா தொகையின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கிப் பேசினார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
புதிதாக பெங்களூரு நகரில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள காயலர்கள் மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக இணைந்ததையடுத்து, இக்கூட்டத்தில் அவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
ரிழ்வானுல்லாஹ் நன்றி கூற, துஆ - ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் ஆர்வமாகக் கலந்துகொண்டனர். கூட்ட நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் தேனீர் - சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு, பெங்களூரு காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் குறித்து, அதன் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் மன்னர் B.A.செய்யித் அப்துர்ரஹ்மான்
படங்கள்:
K.M.S.உமர்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
பெங்களூரு காயல் நல மன்றத்தின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பெங்களூரு காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |