சிறப்புக் குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் ஆண்டு விழா. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் 15ஆவது ஆண்டு விழா, இம்மாதம் 19ஆம் நாள் சனிக்கிழமை 16.30 மணியளவில், துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்றது.
பள்ளியின் ஆசிரியர் சுப்பிரமணியன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். பார்வையற்ற ஹாஃபிழ் இர்ஃபான் இறைமறை வசனங்களையோதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். துளிர் அறக்கட்டளை செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். துளிர் ஆர்வலர் கொமந்தார் இஸ்மாஈல், முன்னோர்களை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.
துளிர் பள்ளி அலுவலக மேலாளர் சித்தி ரம்ஸான் ஆண்டறிக்கை வாசித்தார். துளிர் பள்ளி நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத், பள்ளி துவங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை அது கடந்து வந்த பாதை, அதன் சேவைகள் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய - திருநெல்வேலி பிஷப் சார்ஜன்ட் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியின் முன்னாள் முதல்வர் சந்திரமோகன் தலைமையுரையாற்றினார். பேச்சு மற்றும் செவித்திறன் மருத்துவ நிபுணர் டாக்டர் இராவணன், சுரண்டை பராசக்தி மேனிலைப்பள்ளியின் தாளாளர் சண்முக சுந்தரம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய இயக்குநர் முனைவர் எம்.ஏ.ஹனீஃபா சிறப்புரையாற்றினார்.
விழாவில் முன்னிலை வகித்த நகரப் பிரமுகர்களான ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், எஸ்.எம்.உஸைர், ஜெஸ்மின் ஏ.கே.கலீல், அப்துல் காதிர் என்ற சின்னத்தம்பி, காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் உள்ளிட்டோர், துளிர் பள்ளியின் சிறப்பு மாணவ-மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர்.
பள்ளி மாணவ-மாணவியரின் - ஆடல், பாடல், நாடகம், கலந்துரையாடல், வினா-விடை, பேச்சு உள்ளிட்ட பல்சுவை கலை நிகழ்ச்சிகள், கலந்துகொண்ட பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாய் அமைந்திருந்தன.
பள்ளியின் ஆசிரியையர் மற்றும் அலுவலர்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. நன்றியுரையைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர், அவர்கள்தம் பெற்றோர், உற்றார் - உறவினர், துளிர் பள்ளியின் ஆர்வலர்கள், அபிமானிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
துளிர் பள்ளியின் 14ஆம் ஆண்டு விழா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துளிர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |