காயல்பட்டினம் கடற்கரையில், தின்பண்ட வணிகர்கள் காகிதக் கோப்பைகளிலும், ப்ளாஸ்டிக் பைகளிலும் தின்பண்டங்களைப் போட்டு விற்க, அவற்றை உட்கொள்ளும் வாடிக்கையாளர்களோ, வெற்றுக் கோப்பைகளை கடற்கரை மணலிலேயே போட்டுச் செல்வது நாள்தோறும் வாடிக்கையாகிப் போனது.
இதன் காரணமாக, காகிதக் குப்பைகள் மற்றும் ப்ளாஸ்டிக் பைகளும் நிறைந்து, கடற்கரை மணற்பரப்பு குப்பைக் காடாகக் காட்சியளிப்பது பழகிப்போன ஒன்றாகிவிட்டது. குப்பைகளைக் காணும் பொதுமக்கள் நகராட்சியின் பணிகளைக் குறை கூற, நகராட்சி நிர்வாகமோ பொதுமக்களின் ஒத்துழைப்பின்மையைக் காரணம் காட்டும் நிலையுள்ளது.
இந்நிலையில், இம்மாதம் 21ஆம் நாளன்று காயல்பட்டினம் கடற்கரைக்கு வருகை தந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், அங்கிருந்த தின்பண்ட வணிகர்களிடம் - அவர்கள் தம்முடன் குப்பை சேகரிக்க தனிப்பெட்டி வைத்துக்கொண்டு, அவர்களது வாடிக்கையாளர்களுக்கு உணவுப் பண்டங்களை விற்கும்போது, குப்பைகளை அப்பெட்டியில் போடக் கூறுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை.
இவ்வாறிருக்க, நேற்று (ஏப்ரல் 29 செவ்வாய்க்கிழமை) மாலையில், காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் திடீரென கடற்கரையில் முகாமிட்டார். அங்கு, கடற்கரை மணற்பரப்பில் உணவுப் பண்டங்களை விற்றுக்கொண்டிருந்த வணிகர்களை, கடற்கரை நுழைவாயிலுக்குச் செல்ல உத்தரவிடவே, அவர்கள் தமது பொருட்களை எடுத்துக்கொண்டு, கடற்கரை நுழைவாயிலில் கடைகளை அமைத்தனர்.
காகிதக் கோப்பைகளை இனி பயன்படுத்தக் கூடாது என்றும், பளிங்கு கோப்பைகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அவர்களிடம் கூறினார். ஏற்கனவே வாங்கி வைத்த காகிதக் கோப்பைகள் சிறிதளவு உள்ளதாக வணிகர்கள் கூறியதைக் கேட்ட அவர், இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டும் காகிதக் கோப்பைகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும், அதன் பிறகு பளிங்கு அல்லது உலோகக் கோப்பைகளை முறையாக சுத்தம் செய்து பயன்படுத்துமாறும் அவர் அவர்களிடம் கூறினார்.
பின்னர், கையோடு கொண்டு வந்திருந்த குப்பை சேகரிக்கும் குச்சிகளைப் பயன்படுத்தி, தன்னுடன் அழைத்து வந்திருந்த நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுடன் இணைந்து அவர் கடற்கரை மணலில் சிதறிக் கிடந்த குப்பைகளைச் சேகரித்து, எடுத்துச் சென்றார்.
குப்பைகளை அவர் சேகரித்துக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த சிலர் அவரிடம், “பளிங்கு, உலோகக் கோப்பைகளை அவர்கள் முறையாக சுத்தம் செய்யாததால், நாங்கள்தானே காகிதக் கோப்பையை விரும்புகிறோம்...? அவ்வாறிருக்க, அதை ஏன் தடுக்கிறீர்கள்?” என்று கேட்க, “பெயர்தான் காகிதக் கோப்பையே தவிர, அது நீரை உறிஞ்சாமல் இருக்க அதிலும் ப்ளாஸ்டிக் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது... சூடான பொருட்களை அக்கோப்பைகளில் வைத்து உட்கொள்கையில், அந்த ப்ளாஸ்டிக்கும் இளகி, உட்கொள்பவரின் உடலோடு சேர்கிறது... இதுவும் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது...
எனவே, பளிங்கு அல்லது உலோகக் கோப்பைகளிலேயே பொருட்களை வாங்குங்கள்... அவற்றை வணிகர்கள் முறையாக சுத்தம் செய்யாவிடில், நகராட்சி சுகாதாரத் துறையினரான எங்களுக்கு புகார் அளியுங்கள்... உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கிறோம்...” என்று கூறிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
காயல்பட்டினம் கடற்கரை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |