காயல்பட்டினம் கடற்கரையில், தின்பண்ட வணிகர்கள் காகிதக் கோப்பைகளிலும், ப்ளாஸ்டிக் பைகளிலும் தின்பண்டங்களைப் போட்டு விற்க, அவற்றை உட்கொள்ளும் வாடிக்கையாளர்களோ, வெற்றுக் கோப்பைகளை கடற்கரை மணலிலேயே போட்டுச் செல்வது நாள்தோறும் வாடிக்கையாகிப் போனது.
இதன் காரணமாக, காகிதக் குப்பைகள் மற்றும் ப்ளாஸ்டிக் பைகளும் நிறைந்து, கடற்கரை மணற்பரப்பு குப்பைக் காடாகக் காட்சியளிப்பது பழகிப்போன ஒன்றாகிவிட்டது. குப்பைகளைக் காணும் பொதுமக்கள் நகராட்சியின் பணிகளைக் குறை கூற, நகராட்சி நிர்வாகமோ பொதுமக்களின் ஒத்துழைப்பின்மையைக் காரணம் காட்டும் நிலையுள்ளது.
இந்நிலையில், இம்மாதம் 21 மற்றும் 29ஆம் நாட்களில் காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் தலைமையில், கடற்கரையில் குப்பைகள் தேங்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 30) மாலையில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜுடன் கடற்கரைக்கு வந்து ஆய்வு செய்தார்.
அவரது வருகை குறித்து காயல்பட்டணம்.காம் வினவியதற்கு, கடற்கரையை சுத்தமாகப் பராமரிப்பதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், இனி செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்ந்தறிவதற்காக வந்ததாகக் கூறினார்.
காயல்பட்டினம் கடற்கரை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |