காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம் - பிலால்களுக்கு, தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் ஒருங்கிணைப்பில், உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனி ஆர்வலர்களின் அனுசரணையுடன் - ஆண்டுதோறும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரமழான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்காக உலக காயலர்களிடமிருந்து அனுசரணை எதிர்பார்க்கப்படுவதாகவும் தக்வா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தக்வா செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அன்புள்ளம் கொண்ட காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்...
இறையருளால் இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், இஸ்லாமிய மற்றும் நகர்நலன் குறித்த தூய சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக.
வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையால், அனைத்துலக காயல் நல மன்றங்கள் மற்றும் தங்களைப் போன்ற தனியார்வலர்களின் மகத்தான ஒத்துழைப்புடன் எமது தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில், காயல்பட்டினத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் இமாம் - பிலால்களுக்கு நோன்புப் பெருநாள் ஊக்கத் தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அது செயல் வடிவமும் பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
பள்ளிகளில் பணியாற்றும் இமாம் - பிலால்களைப் பொருத்த வரை, அவர்கள் செய்து வரும் இமாம் - பிலால் பணிகளின் காரணமாக, மற்றவர்களைப் போல நினைத்த நேரத்தில், நினைத்த இடங்களுக்குச் சென்று இதர வணிகங்களைச் செய்வதற்கு சிறிதும் வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர். இதன் காரணமாக, விரல் விட்டு எண்ணும் அளவிலான சிலரைத் தவிர மற்றவர்கள் யாவரும் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற நிலையிலேயே இன்றளவும் இருந்து வருகின்றனர். எனவே, அவர்களை குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையேனும் ஊக்குவிப்பது கடமை என்று உணரப்பட்டதாலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாம் அவர்களுக்கு வழங்கும் தொகை சில ஆயிரங்கள்தான் என்றாலும், அதிக செலவைச் சந்திக்கும் பெருநாள் நேரத்தில் இந்த ஊக்கத்தொகை அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வந்துள்ளது என்பதை அவர்கள் கூற கேள்வியுற்று, மிகவும் திருப்தியடைந்தோம்.
நலிவுற்றுள்ள இமாம் - பிலால்கள் கையேந்தி, கூனிக்குறுகி நிற்பதைத் தவிர்த்து, அவர்களை கண்ணியமிக்கவர்களாக நடைபோடச் செய்ய வேண்டுமெனில் இதுபோன்ற உதவிகள் அத்தியாவசியமாகிறது என்பதைக் கருத்திற்கொண்டு, தங்கள் யாவரின் மேலான ஒத்துழைப்புகளை எதிர்பார்த்தவர்களாக இவ்வாண்டும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
அந்த வகையில், நடப்பாண்டு நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகை வழங்க தங்கள் மன்றத்தின் மேலான ஒத்துழைப்பை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
நகரில் உள்ள 35 பள்ளிகளின் மொத்த இமாம், பிலால்களின் எண்ணிக்கை 70.
இவர்களுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் ஊக்கத் தொகையாக அளித்தால், ஏற்படும் மொத்த செலவினம் ரூ. 3,50,000.
இன்ஷாஅல்லாஹ், 30-05-2014 தேதிக்குள் தங்களின் ஜகாத் அல்லது நன்கொடை பங்குத்தொகையை எங்களுடன் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது
தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் அவர்கள் கைபேசி எண்: +66 8172 07 906 அல்லது +91 99654 24518,
செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யது முஹம்மது கைபேசி எண்: +66 8675 77 296 அல்லது +91 94869 20850
ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டோ தெரிவித்து, இத்திட்டத்தை சிரமங்கள் எதுவும் இன்றி, குறித்த காலத்தில் இறையருளால் வெற்றிகரமாக செய்து முடிக்க உறுதுணை புரியுமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நமதூர் நலனுக்காக நாம் யாவரும் இணைந்து செய்யும் இந்த தன்னலமற்ற நற்காரியங்களை கபூல் செய்து, அவற்றுக்கான பலனை இம்மை மறுமையில் நமக்கு நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.
இத்திட்டத்திற்கு அனுசரணை கோரி, உலக காயல் நல மன்றங்களுக்கு முறைப்படி தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதையும் அன்புடன் அறியத் தருகிறோம்.
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) இமாம் - பிலால் ரமழான் ஊக்கத்தொகை வழங்கப்பட்ட விபரப்பட்டியல்:-
இமாம் - பிலால் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு அனுசரணை கோரி, தக்வா அமைப்பின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) விடுக்கப்பட்ட வேண்டுகோள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தக்வா அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |