தூத்துக்குடியில் சலுகைக் கட்டணத்தில் நீச்சல் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதி சற்குணம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்ட பிரிவு சார்பில் 600 ரூபாய் சலுகைக் கட்டணத்தில் தூத்துக்குடி விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இப்பயிற்சி கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 கட்டங்களாக நடைபெற்றன.
3ஆம் கட்ட பயிற்சி முகாம் மே 02இல் துவங்கி 15ஆம் நாள் வரை நடக்கிறது. பின்னர் மே 19 முதல் 31 வரையும், ஜூன் 02 முதல் 14 வரையும் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
மொத்தம் 12 மணி நேர அளவைக் கொண்ட இப்பயிற்சியில், அன்றாடம் 1 மணி நேரம் வீதம், 12 நாட்களில் நீச்சல் கற்றுத் தரப்படும். பயிற்சி காலை 06.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடக்கிறது.
முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் பயிற்சி தொடர்ந்து நடைபெறும். மேற்படி பயிற்சி வகுப்பானது பயிற்சி பெற்ற நீச்சல் பயிற்சியாளரால் பயிற்றுவிக்கப்படுகிறது.
நீச்சல் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியிலும், 0461-2321149 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். சிறப்பு நீச்சல் பயிற்சி திட்டத்தின் படி, இதுவரை கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 140 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவ்வாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் கூறி உள்ளார்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |