இலங்கை பண்பலை வானொலி இயக்குநராகப் பணியாற்றும் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருக்கு, இலங்கை வானொலி சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ விருதை வழங்கிப் பாராட்டியுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
இலங்கை நாட்டில் இயங்கி வரும் பண்பலை வானொலிகளுள் ஒன்று YES FM. அதன் தலைமை இயக்குநராக, காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவைச் சேர்ந்த ரியாஸுத்தீன் ஷாஜஹான் பணியாற்றி வருகிறார்.
இலங்கையில் பல்வேறு வானொலி - தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்தி வருவதும், இந்தியாவின் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு உரிமம் பெற்று இலங்கை ஊடகங்களில் ஒளிபரப்பி வருவதுமான பணிகளைச் செய்து வரும் Maharaja Organization நிறுவனத்தின் சார்பில், 2013/2014ஆம் ஆண்டிற்கான - இலங்கை வானொலியின் சிறந்த இயக்குநராக ரியாஸுத்தீன் ஷாஜஹான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்காக, இலங்கை ரத்மலானை நகரில் நடைபெற்ற அரசு விழாவில், அந்நாட்டு அதிபர் மஹிந்த ராஜபக்ஷ - அவருக்கு விருது வழங்கிப் பாராட்டினார்.
Jaycee என்ற ஜப்பானிய நிறுவனத்தின் சார்பில், 2012ஆம் ஆண்டின் இளம் சாதனையாளர்களாக பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள், ஊடகத்துறையின் இளம் சாதனையாளருக்கான விருதை ரியாஸுத்தீன் ஷாஜஹான், அதிபர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பெற்றார்.
ரியாஸுத்தீன் ஷாஜஹான், இலங்கை காயல் நல மன்றத் தலைவரும் - எழுத்தாளருமான எம்.எஸ்.ஷாஜஹானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியாஸுத்தீன் ஷாஜஹான் வழிநடத்த, இலங்கை க்ரிக்கெட் வீரர்களான குமார சங்ககாரா, மஹில ஜெயவர்த்தன ஆகியோர் பங்கேற்ற தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியின் அசைபடப் பதிவுகளை, கீழேயுள்ள இணைப்புகளில் சொடுக்கிக் காணலாம்:-
பாகம் 1 பாகம் 2 பாகம் 3
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 14:43 / 02.05.2014] |