கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், அதன் 5ஆம் ஆண்டு துவக்க விழாவாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், மன்றத் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் சமர்ப்பித்த - மன்றத்தின் 2013ஆம் ஆண்டறிக்கை வருமாறு:-
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயர் போற்றி துவங்குகிறேன்.
கர்நாடக மாநிலம் – பெங்ளூரு காயல் நல மன்றம் என்ற பெயர் தாங்கி, இறையருளால் உங்கள் யாவரின் மேலான – மனப்பூர்வமான ஒத்துழைப்புகளுடன் இயங்கி வரும் நம் மன்றத்தின் 2013ஆம் ஆண்டின் முக்கியமான செயல்பாடுகளை உள்ளடக்கிய ஆண்டறிக்கையை தங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
தங்கும் விடுதி குறித்து அறிவிப்பு:
17.02.2013 அன்று, கொடைவள்ளல் மர்ஹூம் ஹாஜி ஆடிட்டர் பி.எஸ்.எம்.புகாரீ அவர்களது குடும்பத்தினருக்குச் சொந்தமான தேவனஹல்லி பசுமைத் தோட்டத்தில் மன்றத்தின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காயல்பட்டினத்திலிருந்து துளிர் அறக்கட்டளை நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத், தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், பெங்களூரு நகருக்கு வேலைவாய்ப்பு தேடி வரும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கக, விரைவில் பெங்களூருவில் தங்கும் விடுதி அமைக்கப்படும் என மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ அவர்களின் மகனார் - நம் மன்ற உறுப்பினர் ஜனாப் அப்துர்ரஹ்மான் புகாரீ அவர்கள் அறிவித்தார்கள்.
விடுதி செயல்திட்டத்திற்காக தனிக்குழு:
08.04.2013 அன்று பெங்களூரு எம்.ஜி. சாலையில் அமைந்துள்ள மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி அலுவலகத்தில் நடைபெற்ற மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தின்போது, மேற்படி மாணவர் தங்கும் விடுதி செயல்திட்டத்திற்காக தனிக்குழு அமைக்கப்பட்டது.
ஷிஃபாவில் அங்கம் வகிப்பு:
உலக காயல் நல மன்றங்களை மருத்துவ உதவித் துறையில் ஒருங்கிணைக்கும் வகையில் துவக்கப்பட்டுள்ள ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பில் அங்கம் வகிக்கவும் 08.04.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நம் மன்றத்தின் உறுப்பினர் சந்தாக்களை சேகரித்திட சிறப்புக் குழுவும் இக்கூட்டத்தில் நியமிக்கப்பட்டது.
இஃப்தார் நிகழ்ச்சியாக நடைபெற்ற பொதுக்குழு:
28.07.2013 அன்று, அப்போது ரமழான் காலமாக இருந்தமையால், நம் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் நிகழ்ச்சியாகவும் - குடும்ப சங்கம நிகழ்ச்சியாகவும் இறையருளால் இனிதே நடத்தி முடிக்கப்பட்டது. மன்றத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட ஜகாத் நிதியை, துளிர் பள்ளிக்கும், மைக்ரோகாயல் அமைப்பிற்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், பேரீத்தம்பழம், தண்ணீர், குளிர்பானம், சிக்கன் சமூசா, பழ வகைகள் அனைவருக்கும் பரிமாறப்பட்டன.
தங்கும் விடுதி திறப்பு மற்றும் செயல்திட்டம்:
15.09.2013 அன்று நம் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த - மாணவர் தங்கும் விடுதி, இறையருளால் 27.10.2013 அன்று முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.
காயல்பட்டினத்திலிருந்து, விடுதியில் தங்க விரும்பும் மாணவர்களது விண்ணப்பங்கள் குறித்து நேர்காணல் செய்து பரிந்துரை வழங்கிடும் பொறுப்பு இக்ராஃ கல்விச் சங்கத்திடமும், சென்னையிலிருந்து வரும் காயலர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து பரிந்துரை செய்யும் பொறுப்பு காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பிடமும் வழங்கப்பட்டதுடன், அதைச் செய்திட இசைவு தெரிவித்த இவ்விரு அமைப்புகளுக்கும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. மாணவர் தங்கும் விடுதி துவக்கத்திற்காக முழு ஆதரவளித்த - அனுசரணை புரிந்த மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்தினருக்கு இந்நிகழ்வில் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
செயலருக்கு பிரியாவிடை:
விடுதி திறப்புடன் இணைந்து நடைபெற்ற நம் மன்றத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில், அதுகாலம் வரை நம் மன்றத்தின் செயலாளராக இருந்து உற்சாகமாகவும், ஊக்கத்துடனும் நகர்நலப் பணிகள் ஆற்றிய நம் மன்றச் செயலாளர் எம்.என்.சுலைமான் பணியிட மாற்றலாக வெளிநாடு செல்வதாக அறிவித்தார். அவரது சேவைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், வளமான வருங்கால நல்வாழ்வு கிடைத்திட அவருக்காக துஆ செய்யப்பட்டது. பயன்படுத்தப்பட்ட நல்லாடைகளைச் சேகரித்து, நமதூரின் ஏழை - எளிய மக்களுக்கு வழங்கிடவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
காயல்பட்டினம் வழித்தடத்தில் பேருந்து சேவை பெற முயற்சி:
பெங்களூரு – திருச்செந்தூர் வழித்தடத்தில் செல்லும் எஸ்.ஆர்.எம். மற்றும் கே.பி.என். உள்ளிட்ட தனியார் நிறுவன பேருந்துகளை - நம் காயலர்கள் தாயகம் திரும்புவதற்கு வசதியாக – காயல்பட்டினம் வழித்தடத்தில் இயக்கிட மேற்படி நிர்வாகங்களுக்கு மன்றத்தின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
வேலைவாய்ப்பு செயல்திட்டங்கள்:
காயல்பட்டினத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தம் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை பெங்களூருவில் பெற்றிட நம் மன்றத்தின் சார்பில் தொடர்ச்சியான செயல்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அன்பான வேண்டுகோள்:
அன்புச் சகோதரர்களே, நம் மன்றத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவானதே. அதுவும், இவர்கள் யாவரும் பன்னாட்டுக் கம்பெனிகளில் (mnc) பணி புரிந்து வருவதால், அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படும் சூழலில் உள்ளனர். எனவே, நம் மன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் வருடக்கணக்கில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க முடிவதில்லை. Floating People ஆகவே இருந்து வருகின்றனர்.
இந்தச் சூழல்களுக்கிடையிலும், இயன்றளவு நம் நகருக்காக சேவைகள் ஆற்றிட வேண்டும் என்று நினைப்பதும், அதற்கேற்ப செயல்படுவதும் அல்லாஹ் நமக்களித்த அருட்கொடை என்றே கூற வேண்டும். இணைந்து பணியாற்றும் அனைவருக்கும் அல்லாஹ் நிறைவான நற்கூலிகளை வழங்கியருள்வானாக, ஆமீன்.
எனினும், இதுவே போதும்... இயன்ற பணிகளைச் செய்துவிட்டோம் என்று இருந்துவிடாமல், நம் முன்னே காத்திருக்கும் நகர்நலப் பணிகள் ஏராளம் என்பதை மனதில் கொண்டு, அதற்கேற்ப, முன்பை விட உற்சாகத்துடனும், புதிய உத்வேகத்துடனும் செயல்பட எனக்கும், உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக நிறைவு செய்கிறேன். வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
இவ்வாறு, பெங்களூரு காயல் நல மன்றத்தின் 2013ஆம் ஆண்டறிக்கை அமைந்துள்ளது.
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
பெங்களூரு காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |