தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், நடப்பு நாடாளுமன்றத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற ஒத்துழைத்த - அரசின் அனைத்துத் துறை அலுவலர்களுக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ம.ரவிக்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில், இம்மாதம் 24ஆம் நாளன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தலைமையில், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் மறுநாள் - ஏப்ரல் 25 அன்று பூட்டி முத்திரையிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் தெரிவித்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தேர்தலை நல்ல முறையில் நடத்திட உதவிய காவல்துறை, அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற தேர்தலில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில்
மொத்த வாக்காளர்கள் - 13,08,296
வாக்களித்தோர் - 9,14,441
சதவிகிதம் - 69.90
ஆண் வாக்காளர்கள் - 4,48,493 (69.2 சதவிகிதம்)
பெண் வாக்காளர்கள் - 4,66,037 (70.76 சதவிகிதம்)
மூன்றாம் பாலினம் - 2 வாக்காளர்களுள் ஒருவர் வாக்களித்துள்ளார். (50 சதவிகிதம்)
95 சதவிகித வாக்காளர்கள், அரசால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டைப் பயன்படுத்தியே வாக்களித்துள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் - முத்திரையிடப்பட்ட அறைகளுக்கு 24 மணி நேரமும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில், மத்திய ரிசர்வ் படையினர், மாநில - மாவட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 24 மணி நேரமும் வெப் காமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதில், சுழற்சி முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்களின் முகவர்களும் இதைக் கண்காணிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை, கோவில்பட்டி சார் ஆட்சியர் டாக்டர் விஜயகார்த்திகேயன், கோட்டாட்சியர் நாகஜோதி, தமிழ்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புரூஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.பாஸ்கரன் ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பு நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |