இம்மாதம் 26ஆம் தேதியன்று, காயல்பட்டினத்தில், மஹல்லா ஜமாஅத் ஒற்றுமை விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெறுமெனவும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களான இ.டி.பஷீர், எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றவுள்ளதாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 03ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 08.00 மணிக்கு, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள கட்சியின் அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெற்றது.
கட்சியின் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் கூட்ட நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். முன்னிலை வகித்த மாவட்ட தலைவர், செயலாளர் ஆகியோரும், கட்சியின் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், மாணவரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர துணைச் செயலாளர்களான எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.எல்.ஷேக்னா லெப்பை ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.
பின்னர், இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.
மஹல்லா ஜமாஅத் ஒற்றுமை குறித்தும், முஸ்லிம் சமுதாயத்தை ஒருங்கிணைப்பதில் கட்சி மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள் பற்றியும் அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு இரங்கல்:
அண்மையில் காலமான - ‘தினத்தந்தி’ நாளிதழின் அதிபரும், பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவி, அனைத்து சமுதாய மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக அரிய சேவையாற்றிவரும், தான் சார்ந்த சமூகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வித்திட்டவரும், ‘சின்னய்யா’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவருமான சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தார், ‘தினத்தந்தி’ நாளிதழ் அங்கத்தினர், கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர் மற்றும் அவர் சார்ந்த சமூகத்திற்கு எல்லாம்வல்ல இறைவன் நல்ல பொறுமையை அளித்திட இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 2 - மாணவரணி கோடைகால செயல்திட்டம்:
நடப்பு கோடை விடுமுறையை முன்னிட்டு, மாணவ சமுதாயத்தை, சமூகப் பணிகளின்பால் ஆர்வப்படுத்திடுவதற்காக, தேவையான செயல்திட்டங்களை வடிவமைத்து, இம்மாதம் 10ஆம் தேதிக்குள் கட்சியின் நகர நிர்வாகத்திடம் சமர்ப்பித்திட, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர துணை அமைப்பாளர் எச்.எல்.அப்துல் பாஸித் ஆகியோரிடம் இக்கூட்டம் பொறுப்பளிக்கிறது.
தீர்மானம் 3 - கடற்கரை தொழுமிடத்தில் சோலார் ஒளிவிளக்கு:
தற்காலத்தில் அடிக்கடி மின்தடை செய்யப்படுவதைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் கடற்கரையையொட்டியுள்ள - குருவித்துறைப்பள்ளிக்குச் சொந்தமான தொழுமிடத்தில், தொழ வருவோரின் வசதிக்காக, சூரிய ஒளியில் இயங்கும் ஒளிவிளக்கு கம்பம் ஒன்றை நிறுவிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட, மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸனிடம் இக்கூட்டம் பொறுப்பளிக்கிறது.
தீர்மானம் 4 - மஹல்லா ஜமாஅத் ஒற்றுமை விழிப்புணர்வு பொதுக்கூட்டம்:
இம்மாதம் 26ஆம் தேதியன்று, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், கட்சியின் நகர கிளை சார்பில், மஹல்லா ஜமாஅத் ஒற்றுமை விழிப்புணர்வு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்திடவும், அக்கூட்டத்தில், கேரள மாநிலத்தின் முன்னாள் கல்வி அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இ.டி.பஷீர், காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோரை சிறப்புரையாற்ற அழைப்பதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - ‘மணிச்சுடர்’ நாளிதழ் சந்தா சேகரிப்பு:
‘மணிச்சுடர்’ நாளிதழுக்கு, காயல்பட்டினத்தில் அதிகளவில் சந்தாக்களை சேகரித்து, இம்மாதம் 15ஆம் தேதிக்குள் சந்தாதாரர் பட்டியலை, தலைமைக்கு வழங்கிட, ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஜனாப் அரபி ஷாஹுல் ஹமீத் ஆகியோரிடம் இக்கூட்டம் பொறுப்பளிக்கிறது.
தீர்மானம் 6 - நிதி திரட்டல்:
தெற்கு ஆத்தூரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அப்பாஸிய்யா மத்ரஸாவின் நிறைவுப் பணிகளுக்காகவும். தூத்துக்குடி - திரேஸ்புரம் பள்ளிக்கூட கட்டிடத்திற்காகவும் நகர முஸ்லிம் லீக் சார்பில் நிதி திரட்டியளித்திட, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட இக்கூட்டம் தீர்மானிப்பதோடு, அம்முயற்சிகளுக்கு உறுதுணையாக, நகர பிரமுகர்களை சந்தித்து நிதி திரட்டும் முயற்சிகளை மேற்கொள்ள ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 7 - காயிதேமில்லத் பேரவையில் அங்கம் பெற்ற காயலர்களுக்கு வாழ்த்து:
காயல்பட்டினம் முஸ்லிம் லீக் பிரமுகர்களான ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத், கத்தர் நாட்டின் காயிதேமில்லத் பேரவை தலைவராகவும், ‘கவிமகன்’ காதர் அதன் செய்தி தொடர்பாளராகவும், ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் - ஹாங்காங் காயிதேமில்லத் பேரவை செயலாளராகவும், ஹாஜி ஏ.டபிள்யு.கிழுறு முஹம்மத் ஹல்லாஜ் அதன் பொருளாளராகவும், பிரபு அஹ்மத் ஜரூக் - சீன பிரதிநிதியாகவும் தேர்வு செய்யப்பட்டமைக்கு, இக்கூட்டம் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஆடிட்டர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் - முறையே சிங்கப்பூர் மற்றும் பாங்காக் நகரங்களில் காயிதேமில்லத் பேரவையை அமைக்கும் முயற்சிகளை துரிதப்படுத்தி, தாய்ச்சபை நடவடிக்கைகளை உலகளாவிய அளவில் பரப்பிட ஆவன செய்யுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. நகர செயலாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, அரபி ஷாஹுல் ஹமீத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் நகர பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்களில் உதவி:
A.R.ஷேக் முஹம்மத் |