சென்னை புதுக்கல்லூரியில் விஷுவல் கம்யுனிகேஷன் படித்து வரும் காயல்பட்டினத்தை சேர்ந்த மாணவர் ஃபியாசுர்ரஹ்மான் உருவாக்கிய "பொருள்" என்ற குறும்படத்திற்கு தமிழநாடு வணிகர் சங்கம் சார்பாக 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மே 05 (ஞாயிறு) அன்று சென்னை தீவுத் திடலில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் இந்த பரிசு வழங்கப்பட்டது.
இந்தியர்களால், இந்தியாவில் தயாரிக்கப்படும் (சுதேசி) பொருட்களையே வாங்க வேண்டும் என வலியுறுத்தும் இந்த குறும்படம் 6 நிமிடங்கள் நீளமானது. இந்த குறும்படத்தை பாராட்டிய தமிழநாடு வணிகர் சங்கத்தினர், மாணவர் ஃபியாசுர்ரஹ்மானை கொளரவிக்கும் வகையில் அவருக்கு வணிகர் சங்க மாநாட்டில ரூ. 1 லட்சம் பரிசும், பாராட்டு கேடயமும் வழங்கி பாராட்டியுள்ளனர்.
கோலா பானங்களை தயாரிக்கும் தனது நண்பரின் தந்தை - எவ்வாறு கோலா பானங்களை மிகவும் குறைந்த விலையில் தயாரிக்கிறார் என்று தெரிவிப்பதையும், ஆனால் அது போன்றே கோலா பானங்களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மிக அதிக விலையில் கோலா பானங்களை விற்பனை செய்வதையும் சுட்டிக்காட்டும் இந்த குறும்படம், இதனால் எவ்வாறு இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன என்றும் விவரிக்கிறது. இரு வாரங்களில் இப்படம் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
மாணவர் ஃபியாசுர்ரஹ்மான் தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்க தலைவர் காயல் இளவரசுவின் மகனாவார்.
இந்த குறும்படம் மற்றும் மாணவரின் பேட்டி ஆகியவை - எதிர்வரும் சனிக்கிழமை (மே 11) அன்று காலை 08:30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் வெளியிடப்படவுள்ளது.
[செய்தி திருத்தப்பட்டது @ 9.5.2013/9:40am] |