காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில், 05.05.2013 ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற்ற விபத்தொன்றில் ஒருவர் பலியானார்.
காயல்பட்டினத்திற்கு அருகிலுள்ள ஆத்தூரை ஒட்டியிருக்கும் சேர்ந்தபூமங்கலம் - தலைப்பண்ணையைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ் என்ற ஆத்திமுத்து.. இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். தங்கராஜின் இரண்டாவது மகன் சண்முகராஜ். இவருக்கு வயது 24. திருமணமாகாதவர்.
டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில், வெல்டிங் பிரிவில் ஒப்பந்தப் பணியாளராக ஐந்தாண்டுகளாக பணியாற்றி வரும் இவர், நிகழ்வு நாளன்று மதியம் 02.30 மணியளவில், ஆலையிலுள்ள சல்ஃப்யூரிக் ஆமிலம் அடங்கிய உருளையின் மூடி திறக்காததால், மாற்று வழியில் திறப்பதற்கு முயற்சித்தபோது, எதிர்பாராத விதமாக அக்குழாய் மூடி முழு வேகத்தில் திறக்கவே, சண்முகராஜ் தூக்கி வீசப்பட்டதாகவும், அருகிலுள்ள சுவற்றில் மோதியதில் அவரது பிடரியில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், ஆலை நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று சண்முகராஜ் குடும்பத்தினர் எதிர்பார்த்திருக்க, அவர்கள் வராது போகவே பிணத்துடன் ஆலை நுழைவாயில் அருகில் சண்முகராஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நேற்றிரவு 07.00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.
சண்முகராஜ் இறப்பிற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 20 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு ஆலையில் வேலைவாய்ப்பும் தர வேண்டுமென அவர்கள் கோரியதாகவும், ஆனால் ரூபாய் 10 லட்சமும், ஒருவருக்கு வேலையும் அளிக்க ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் டி.பார்த்திபன், துணை ஆய்வாளர்களான சண்முகவேல், ஷ்யாம் சுந்தர், வருவாய்த்துறையைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். |