காயல்பட்டினத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறதா?
இது குறித்து காயல்பட்டினம் நகராட்சியின் குடிநீர் துறை அலுவலர் (பிட்டர்) நிசாரிடம்
காயல்பட்டணம்.காம் வினவியது. குடிநீர் விநியோகத்தில் பிரச்சனை ஏதும் இல்லை என்றும், குடிநீர் விநியோகம் - நான்கு நாட்களுக்கு ஒரு முறை என்பது ஐந்து நாளுக்கு
ஒரு முறை என ஆகியிருப்பதாகவும் அவர் கூறினார். குடிநீர் விநியோகம் குறித்து புகார்கள் மக்களிடம் இருந்து வரவில்லை என்றும் அவர் மேலும்
கூறினார்.
பொது மக்களிடம் பெறப்பட்ட தகவலோ வேறுவிதமாக உள்ளது.
சேது ராஜா தெருவில் 12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதாக புகார். சொளுக்கார் தெரு, கொச்சியார் தெருவில் 6 - 7 நாட்களுக்கு ஒரு
முறை தண்ணீர் வருவதாக புகார். குத்துக்கல் தெருவில் 6 - 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதாக புகார். ஏன் இந்த நிலை?
காயல்பட்டினம் நகராட்சிக்கு தினசரி குடிநீர் வழங்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் துணை பொறியாளர் பாலசுப்ரமணியம் - குடிநீர் வழங்கும்
அளவில், எந்த மாற்றமும் இல்லை என்றும், தினசரி 21 லட்சம் லிட்டர் அளவு குடிநீர் காயல்பட்டினத்திற்கு வழங்கப்பட்டு வருவதாகவும்
தெரிவித்தார். இது இவ்வாறிருக்க - இந்த கோடை காலத்தில் ஏன் செயற்கையாக குடிநீர் தட்டுப்பாடு நிலை காயல்பட்டினத்தில் உருவாக்கப்படுகிறது?
மே 3 அன்று தினத்தந்தி நாளிதழில் காயல்பட்டினம் நகராட்சி சார்பில் விளம்பரம் ஒன்று வெளியானது. அதில் மே 10 ம் தேதிக்குள், நகரில் 6,000
லிட்டர் மற்றும் 12,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இது குறித்து
நகராட்சி அலுவலர் நிசாரிடம் விசாரித்ததில், இது முன்னெச்சரிக்கை ஏற்பாடு என்றும், தற்போது நகரில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க
திட்டம் ஏதும் இல்லை என்றும் கூறினார்.
லாரிகள் மூலம் தண்ணீர் விநோயோகிக்க - நகராட்சியின் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டிற்கு, ஏப்ரல் 29 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தொகை, அரசின் வறட்சி நிவாரண தொகையின் மூலம் செலுத்தப்படும் என்றும் கூட்டத்தில்
தெரிவிக்கப்பட்டது.
தண்ணீர் தட்டுப்பாடு நிலை உருவாக வாய்ப்புள்ளதா என காயல்பட்டணம்.காம் உயர் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தது. ஜூன் மாதம் இறுதி வரை
எந்த பிரச்சனையும் கண்டிப்பாக ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்த அவர், தென் மேற்கு பருவ மழை துவங்கியவுடன் நீர்வரத்து மேலும்
அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலையிலும் வறட்சி சூழல் எனக்கூறி லாரிகள் மூலம்
தண்ணீர் விநியோகம் செய்வது காலம்காலமாக நடந்து வரும் முறைக்கேடு என்றும் அவர் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகராட்சிக்கு தண்ணீர் வழங்கும் ஆத்தூர் நீரேற்றம், பாபநாசம் அணையினை நம்பி உள்ளது. இந்த அணையின் தற்போதைய நீர்
அளவு, கடந்த ஆண்டை விட 25 சதவீதம் கூடுதலாகவே உள்ளது. கடந்த ஆண்டைவிட தற்போது அதிகளவு விவசாயத்திற்கு குடிநீர் திறந்து
விடப்பட்டு வந்தாலும், குடிநீர் வழங்க பெரும் அளவில் பிரச்சனை இருக்காது என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு - காயல்பட்டினம் நகராட்சியில் - லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதில் பல புகார்கள் வந்தன. ஒரு லாரி தண்ணீரின்
கட்டணம் நிர்ணயம் குறித்து குற்றச்சாட்டுக்கள் நிலவின. வழங்கப்பட்ட தண்ணீரின் தரம் குறித்து குற்றச்சாட்டுக்கள் வந்தன. மேலும் - எத்தனை
முறை நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது என்ற அளவு பேணப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவியது
என்பது குறிப்பிடத்தக்கது.
|