சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், மகளிருக்கான தஜ்வீத் மற்றும் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், சென்ற 13.04.2013 சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது, சிங்கையிலுள்ள மன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினரான மகளிரை ஊக்கப்படுத்துவதற்காக பல செயல்திட்டங்களை வகுக்க திட்டமிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், துவக்கமாக அவர்கள் திருமறை குர்ஆனை சரியான உச்சரிப்புடன் ஓதப் பழகிட - தஜ்வீத் வகுப்பும், சிங்கப்பூர் நாட்டில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆங்கில மொழிப் புலமையின்பால் மகளிருக்கு வழிகாட்ட - ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பும், இம்மாதம் 03ஆம் தேதி (நேற்று) வெள்ளிக்கிழமை மதியம் 02.30 மணியளவில் அறிமுகம் செய்யப்பட்டு, முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. மன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினரான மகளிர் இவ்வகுப்புகளில் திரளாகக் கலந்துகொண்டனர்.
துவக்கமாக, மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் இவ்வகுப்புகள் நடைபெற்றுள்ளன. இனி, மாதந்தோறும் ஒரு நாளில் இவ்வகுப்புகளை - இன்ஷாஅல்லாஹ் சுழற்சி முறையில் மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் இல்லத்திலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |