மருத்துவ உதவி வழங்கும் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணையவும், அதற்கு வருடாந்திர பங்களிப்பாக ரூபாய் 25 ஆயிரம் வழங்கவும், தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
கூட்ட நிகழ்வுகள்:
அல்லாஹ்வின் கிருபையினால் எமது தாய்லாந்து காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் 24.04.2013 புதன்கிழமை இரவு 08.00 மணியளவில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு எம்.எஸ்.ஜஃபருல்லாஹ் இல்லத்தில் நடைபெற்றது.
மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் கூட்டத்திற்கு தலைமைத் தாங்கினார். இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் என்ற தைப்பான் ஷாஜஹான் ஹாஜி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
துவக்கமாக, பள்ளி விடுமுறையில் வந்திருந்த இளவல் ஹாஃபிழ் எம்.எஸ்.உஜைர் மிஸ்கீன் தன் இனிய குரலில் இறை மறையிலிருந்து சில வசனங்களை ஓத, மன்ற துணை நிதி அமைச்சர் எஸ்.ஏ.ஆர்.யூனுஸ் வரவேற்புரையாற்றினார்.
தலைமையுரை:
அடுத்து, மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் உரையாற்றினார்.
இன்று நம் சிறப்பினராக வந்துள்ள தைப்பான் ஷாஜஹான் துரை காக்கா ஒரு சிறந்த வணிகர். ஆரம்ப காலத்தில் ஹாங்காகில் இருந்தபோது ரொம்ப பெரிதாக வியாபாரம் செய்ததால், சீன மொழியில் முதலாளி என்பதற்கு அழைக்கப்படும் தைப்பான் என்ற பெயரையும், பின்னர் இலங்கையில் தங்கள் தொழிலை மாற்றியபோது, மிகவும் நேர்மையாகவும் சொன்ன நேரத்திற்கு அவர்களின் கொடுக்கல் வாங்கலில் செய்திட்ட நடவடிக்கைகளையும் மெச்சிஇலங்கை மக்கள் வழங்கிய சிறப்புப் பெயர்தான் "துரை".
அருமையான எழுத்தாளர். இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நாளிதழ்களில் வெளியாகும் இவர்களின் கட்டுரைகள் ரொம்ப புகழ்பெற்றது. அரசியல் மற்றும் அதிகார மட்டங்களில் ரொம்ப செல்வாக்குப் பெற்றவராகத் திகழ்ந்தார். முன்னாள் இலங்கை அதிபர் பிரேமதாசவின் நெருங்கிய தோழர்.
தம்பி அபூபக்கரைப் பற்றி இளைய தலைமுறையினரான நீங்கள் நன்றாக அறிவீர்கள். பள்ளிப் பருவத்திலிருந்தே தன்னை சமுதாயப் பேரியக்கத்தில் இணைத்து பல சமூகப் பணிகளைச் செய்தவர். கல்லூரியில் பயிலும்போது சிராஜுல் மில்லத் அ.கா.அப்துஸ்ஸமது ஸாஹிப் மற்றும் அப்துல் லத்தீஃப் சாஹிப் போன்றவர்களின் நன்மதிப்பைப் பெற்று லீகின் முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பின் (எம்.எஸ்.எஃப்) தலைவராகத் திகழ்ந்தவர்.
கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு தொழில், பணி என பல இடங்களுக்குச் சென்றாலும், செல்லும் இடங்களில் எல்லாம் சமுதாயப் பணிகளை செவ்வனே செய்து வந்தார்.
இன்று நாம் கூடியுள்ள இந்த தக்வா அமைப்பிற்கு வித்திட்டவரே இவர்தான். 2001ஆம் வருடம் இவர் இங்கு பாங்காக் நகரில் பணியில் இருந்தபோது, நம்மிடையே ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும், ஹாங்காங்கில் KASWA என்ற அமைப்பு ஏற்படுத்தி, நம்மூர் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள், அதைப்போல் நாமும் செய்ய வேண்டும் என்று 20 பேர் அளவில் இருந்த எங்களிடம் ஒரு ஆலோசனை சொன்னார். ஆரம்பத்தில் KASWA என்ற பெயரில்தான் HOLY GEMS இல்லத்தில் வைத்து துவக்கினோம்.
அல்ஹம்துலில்லாஹ், காலப்போக்கில் அது பல பெயர் பரிணாமங்கள் பெற்று, இன்று தக்வா என்ற பெயரில் கல்வி, மருத்துவம், தொழில் மற்றும் சமூகத்தின் பல துறைகளுக்கும் உதவும் ஓர் அழகான அமைப்பாக உருவெடுத்துள்ளது. ஆக இம்மன்றத்தின் உருவாக்கம் இவர் போட்ட கருவாக்கம்தான் என்பதை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.
நம் சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதே இவருடைய கவலையும் இலட்சியமும். அதற்காகவே தன் தொழில், பணிகளையெல்லாம் துறந்துள்ளார்.
இவருடைய ஈடுபாடு, செயல்திறன் உத்வேகக் குணம், பதவி ஆசையின்மை போன்ற பல குணங்களினால், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் பதவி இளைய வயதிலேயே இவரைத் தேடி வந்துள்ளது. இது நம் ஊருக்குக் கிடைத்த பெருமை.
மைய அரசு மதரசா கல்வி மேம்பாட்டுத் திட்ட உதவித்தொகை அமைப்பின் தமிழ் மாநில பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார் இவர். இவரைப் போன்ற துடிப்பானவர்களின் நுழைவால் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கம் புத்துணர்வு பெற்று துடிப்புடன் இயங்கி வருகிறது.
சென்ற சட்ட மன்றத் தேர்தலின்போது முஸ்லிம் லீகின் சார்பாக நிற்பதற்கு வேட்பு மனு விண்ணப்பம் கட்சியிடம் கொடுக்கும்படியும், தேர்வானால் செலவிற்கான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன் என்றும், தம்பி அபூபக்கரிடம் நான் சொன்னபோது, தனக்கு அப்படி ஒரு ஆசையில்லை என்றும், அப்படியே நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சின்னத்தில்தான் நிற்பேன் என்றும், வேறு கட்சியின் சின்னத்தில் நிற்க மாட்டேன் என்றும் மறுத்துவிட்டார்
அண்மையில் நடைபெற்ற நம் நகர்மன்ற தேர்தலுக்குப் பிறகு, நம்மிடம் ஒற்றுமை குறைவு ஏற்பட்டுள்ளதால், அதைச் சீர்செய்ய பல தரப்பினரையும் சந்தித்து, சுமூக உடன்பாடு காண பெரும் முயற்சி எடுத்து வருகின்றார்.
சென்ற 2 மாதத்திற்கு முன்பு நானும் இவரும் சேர்ந்து ஒரு முயற்சியில் இறங்கினோம். ஏனோ அது கைகூடாமல் போய்விட்டது. இப்போது மீண்டும் முயல்வோம் என என்னை அழைக்கின்றார். அல்லாஹு தஆலா இவருடைய முயற்சியில் வெற்றி அடையவும், இவர் மேலும் நிறைய சமுதாயப் பணிகள் செய்யவும் இவருக்கு சக்தியைத் தர துஆ செய்கிறேன்...
இவ்வாறு, மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் - எம்.எஸ்.ஷாஜஹான் உரை:
அடுத்து, சிறப்பு விருந்தினரான - காவாலங்கா தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் என்ற ஷாஜஹான் துரை உரையாற்றினார்.
45 ஆண்டுகளுக்கு முன் நான் பாங்காக்கிற்கு முதன் முதலாக வந்திருந்த போது நம் ஊர் காரர்கள் யாரும் இல்லை. ஆனால் இன்று ஒரு மன்றம் அமைத்து, ஒரு திரளைக் கூட்டும் அளவிற்கு பெருகி, நம் ஊர் மக்களுக்காக பல நலத்திட்டங்களைச் செய்து வருகின்றீர்கள் என்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
நான் தலைமை ஏற்றிருக்கும் காவலங்கா, உங்களுடன் ஒப்பிடுகையில், ஒரு வசதி குறைந்த அமைப்புதான். எனவே உங்களைப் போன்று நிறைய செய்ய முடியவில்லை.
இந்த ஒரு மாதத்தில் ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் பாங்காக் ஆகிய மூன்று மன்றங்களின் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லா மன்றங்களும் நிறைய பணிகள் செய்வதைக் காண்கிறேன். மன நிறைவைத் தருகிறது.
ஆனாலும் ஒரு குறையைக் காண்கிறேன். அது நேரத்தைக் கடைப்பிடிப்பதில்லை. தயவு செய்து நேரத்தைக் கடைப்பிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எல்லோருக்கும் எந்த நேரம் சாத்தியமோ அந்த நேரத்திற்கு கூட்டத்திற்கு அழையுங்கள். சரியான நேரத்தில் ஆரம்பித்து விடுங்கள்.
ரயில், பிளேன் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பி விடுகிறது என்பதால் நாம் முற்கூட்டியே கிளம்பி போகத்தானே செய்கிறோம்? அதேபோல இதையும் கடைப்பிடியுங்கள். சரியாக வந்து விடுவார்கள்.
இவ்வாறு, காவாலங்கா தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரை:
பின்னர், மற்றொரு சிறப்பு விருந்தினரான - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார். (அவரது உரை தனிச்செய்தியாக தரப்படும்.)
செயலர் உரை:
அடுத்து, தக்வா செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் உரையாற்றினார். தற்போது அனைத்துலக காயல் மன்றங்களின் உதவியில் அமையவுள்ள மருத்துவக் கூட்டமைப்பான ‘ஷிஃபா’ அமைப்பிற்கு தக்வாவின் சார்பில் செயற்குழு உறுப்பினர் ஒருவரும், கௌரவ உறுப்பினர் ஒருவரும் தேர்ந்தடுக்கும் பிரேரணையைக் கொண்டு வந்தார்.
‘ஷிஃபா’வின் செயற்குழு உறுப்பினராக - இம்மன்ற செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத், கௌரவ உறுப்பினராக உதவிச் செயலாளர் எம்.எச்.அபுல் மஆலீ ஆகியோர் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், ‘ஷிஃபா’வின் நிர்வாகச் செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூபாய் 25 ஆயிரம் வழங்கவும், துவக்கத்தில் ஏற்படும் கட்டமைப்பிற்கான செலவினங்களுக்காக, ரூபாய் 10 ஆயிரம் வழங்கவும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.ஷேக் சதக்கத்துல்லாஹ் நன்றி கூற, உதவித் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் அபுல் ஹஸன் ஷாதுலீ ஃபாஸீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவு உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தி வடிவமைப்பு & படங்கள்:
கம்பல்பக்ஷ் S.A.அஹ்மத் இர்ஃபான்
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 17:36 / 03.05.2013] |