காயல்பட்டினம் நகருக்கு நலத்திட்டங்கள் வழங்கி, தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதற்காக கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில், காரசாரமான விவாதங்களைத் தொடர்ந்து, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் உட்பட தமிழகத்தில் உள்ள 24 நகராட்சிகளில், திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நவீன உயிரி எரிவாயு கூடங்கள் (BIO-GAS PLANT) அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அண்மையில் அறிவிப்பு செய்தார்.
மேலும், பழுதடைந்துள்ள காயல்பட்டினம் நகர்மன்றக் கட்டிடத்தை புதுப்பிக்க 1.5 கோடி ரூபாயும் நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவற்றுக்கும், இதர நலத்திட்டப் பணிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றுவதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியன்று சிறப்புக் கூட்டம் நடத்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அழைப்பு விடுத்திருந்தார். நகர்மன்றத் தலைவர் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இக்கூட்டத்தில் ஒரேயொரு உறுப்பினரைத் தவிர வேறெவரும் கலந்துகொள்ளாததால் அக்கூட்டம் நடைபெறாமல் போனது.
இந்நிலையில், மீண்டும் அதே தீர்மானத்தை முன்வைத்து, கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி காலை 11.10 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார், நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்:
கூட்டத்தில், பின்வருமாறு கூட்டப் பொருளை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வாசித்தார்.
துணைத்தலைவர் உரை:
கூட்டப்பொருள் வாசிக்கப்பட்டவுடன், எழுந்த துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், தான் மற்றும் தன்னுடன் அதிமுகவில் இணைந்த 10 நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பாக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்களடங்கிய கடிதத்தை வாசித்தார். கடிதம் வருமாறு:-
அடுத்து எழுந்து பேசிய 06ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், இரண்டாவது குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சியிலேயே வந்துவிட்டதாகக் கூறினார். அதற்கு பதிலளித்த துணைத்தலைவர், திமுக ஆட்சியில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதாகவும், அதிமுக ஆட்சியில்தான் நிதியொதுக்கப்பட்டது என்றும் கூறினார். இதை ஆட்சேபித்து கூட்டத்தைப் புறக்கணிப்பதாக ஏ.கே.முஹம்மத் முகைதீன் கூறினார். ஆனால் புறக்கணிக்கவில்லை.
அடுத்து பேசிய 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால், 2006-2011 நகர்மன்றப் பருவத்தின்போது இத்திட்டத்திற்கு நிதியொதுக்கீடு செய்யவில்லை என்று கூறினார்.
அப்படியானால், முந்தைய நகர்மன்றத் தலைவர் 50 லட்சம் ரூபாய் இத்திட்டத்திற்காகத் தருவதாக சொன்னதன் பொருளென்ன என்று ஏ.கே.முஹம்மத் முகைதீன் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், அவர் நிதி தருவதாக வாய்மொழியாகவே கூறியதாகவும், எழுத்துப்பூர்வமாக எதுவும் தரவில்லை என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது.
13ஆவது வார்டு உறுப்பினர் உரை:
பின்னர், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் எழுந்து, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதமொன்றை வாசித்தார். கடிதம் வருமாறு:-
இக்கடிதத்தில், தான் சார்ந்துள்ள கட்சியில் அண்மையில் தங்களை இணைத்துக்கொண்ட 10 நகர்மன்ற உறுப்பினர்களின் பெயர்களையும் பட்டியலிட்டு, அவர்களுக்கும் நன்றி கூறினார்.
“அதிமுகவில் நான் சேரவில்லை” -03ஆவது வார்டு உறுப்பினர் குறுக்கீடு:
பின்னர் எழுந்து பேசிய 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், 03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள் பெயரைக் கூறியது தவறு என்று வாதிட்டார். தான் மரியாதை நிமிர்த்தமாகவே அமைச்சரை சந்தித்ததாகவும், அதிமுகவில் தான் சேரவில்லை; அதன் உறுப்பினர் படிவத்திலும் தான் கையெழுத்திடவில்லை என்றும் சாரா உம்மாள் கூறினார்.
அதனை மறுத்த துணைத்தலைவர், அவர் எழுதித் தந்த கடிதம் தன்னிடம் உள்ளதாகக் கூறினார்.
03ஆவது வார்டு உறுப்பினர் சாரா உம்மாள் அதிமுகவில் இணைந்ததாக, ‘தினகரன்’ நாளிதழில் படத்துடன் வந்த செய்தியை, 13ஆவது வார்டு உறுப்பினர் கூட்டத்தில் அனைவருக்கும் காண்பித்தார். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
18ஆவது வார்டு உறுப்பினர் உரை:
பின்னர், 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி எழுந்து பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி வாக்களித்ததும் காரணம் என்றும், இரண்டாவது பைப் லைன் திட்டத்தைப் பொருத்த வரை, உறுப்பினர்கள் யார் யாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமோ அவர்களுக்கு, மீண்டும் ஒருமுறை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து நன்றி தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தின் தீர்மானத்தை, எந்த தனிநபரும் ஆதாயம் அடையாதிருப்பதற்காக, தமிழக முதல்வருக்கு, நகராட்சி ஆணையர் நேரடியாக அனுப்பி வைத்து, அதன் நகலை தங்களின் பார்வைக்குத் தருமாறு கூறினார்.
நகராட்சிக்கு புதுக் கட்டிடம் கட்ட அனுமதியளித்தமைக்கு நன்றி கூறிய அவர், அதற்காக அடிக்கல் நாட்டும்போது, இந்த வார்டு உறுப்பினர் என்பதற்காக தன் பெயரை மட்டும் கல்வெட்டில் பதிவு செய்யாமல், அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
05ஆவது வார்டு உறுப்பினர் உரை:
அடுத்து 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் எழுந்து பேசினார். இத்தீர்மானம் கொண்டு வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சிதான் எனினும், காயல்பட்டினம் நகராட்சியில் நடப்பு நகர்மன்றம் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் திட்டமல்ல இது என்றும், இதற்கு முன் பல திட்டங்கள் வந்துள்ளதாகவும், அப்போதெல்லாம் சிறப்புக் கூட்டம் நடத்தி நன்றி தெரிவிக்காத நகர்மன்றத் தலைவர் தற்போது மட்டும் சிறப்புக் கூட்டம் நடத்தி நன்றி தெரிவிக்க முனைவது தங்களை யோசிக்க வைப்பதாகவும், நெருடல் உள்ளதாகவும் கூறினார்.
சிறப்பு அறிவிப்பு என்பதால் சிறப்புக் கூட்டம்! –நகர்மன்றத் தலைவர்
அதற்கு பதிலளித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர், மற்ற திட்டங்களெல்லாம் நகராட்சி நிர்வாகத் துறை மூலம் வழமை போல பெறப்பட்டது என்றும், பயோ கேஸ் திட்டம் மற்றும் நகர்மன்றக் கட்டிடம் கட்டும் திட்டம் ஆகியவற்றை, தமிழக சட்டசபையில் முதலமைச்சரே நேரடியாக, காயல்பட்டினத்தின் பெயரைச் சொல்லி அறிவித்த சரித்திரப் புகழ்வாய்ந்த திட்டம் என்றும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கை புத்தகத்திலும் இவ்விரு திட்டங்களும் “காயல்பட்டினம்” பெயருடன் இடம்பெற்றுள்ளதால், காயல்பட்டினத்திற்கு சரித்திரப் புகழ் கிடைத்துள்ளதாகவும், அதற்காகத்தான் இந்த சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதேயன்றி வேறெந்த லாப நோக்கும் கிடையாது என்றும் கூறினார்.
நகராட்சி ஆணையருக்கு இக்கூட்டம் நடத்துவதற்கான கடிதத்தை தான் அளிக்கையில், “நகர்மன்றத்தின் சார்பில் இத்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றே தான் கேட்டுக்கொண்டதாகவும், “தலைவராகிய நீங்கள் கடிதம் அளித்துள்ளதால், உங்கள் பெயரில்தான் கூட்டப்பொருள் வைக்க முடியும்” என்று, நகராட்சி தலைமை எழுத்தர் முருகேசன் கூறியதாகவும் கூறினார்.
தன் பெயரை மட்டும் குறிப்பிட்டு கூட்டப் பொருள் கொண்டு வந்தால் அதில் பிரச்சினை ஏற்படும் என்றும், இது காயல்பட்டினம் நகராட்சிக்குரிய திட்டம் என்பதால், நகர்மன்றத்தின் சார்பாக இத்தீர்மானத்தைக் கொண்டு வருவதே எல்லா வகையிலும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் தான் கூறிய பிறகும், தான் அக்கடிதத்தை அளித்ததால் தன் பெயரிலேயே கூட்டப் பொருளை அவர்கள் தயாரித்ததாகவும், அக்கூட்டத்தை தனது சுய லாபத்திற்காக நடத்துவதாக உறுப்பினர்கள் கற்பனையாக எண்ணிக்கொண்டு முந்தைய கூட்டத்தைப் புறக்கணித்ததாகவும் கூறினார்.
கூட்டத்தைப் புறக்கணித்ததாக தலைவர் கூறியது தவறு என்று உறுப்பினர்கள் சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். தான் சொன்னதை உறுதிப்படுத்த சில சான்றுகளை நகர்மன்றத் தலைவர் கூறினார். பின்னர் இது தொடர்பாக காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.
பின்னர் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், நகராட்சியால் பெறப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முதல்வரின் அனுமதியுடனேயே பெறப்படுவதாகவும், ஏப்ரல் 19 அன்று அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் பல உறுப்பினர்கள் ஊரிலில்லாததால்தான் வரவில்லை என்றும், தெரு விளக்கு உட்பட முக்கியமான ஊர் தேவைகள் பல இருக்க அதற்காக சிறப்புக் கூட்டத்தை தலைவர் கூட்டியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
தெரு விளக்கு உட்பட ஊர் தேவை பலவற்றை கூட்டப்பொருட்களாக வைத்தே பிப்ரவரி மாதம் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் இந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்டதாகவும் கூறிய நகர்மன்றத் தலைவர், அதன்பிறகு தெருவிளக்கு உதிரி பாகங்கள் வாங்குவதற்கு முன் அனுமதி வேண்டி தன்னிடம் கையெழுத்து கேட்கப்பட்டதாகவும், முன் அனுமதி பெற்ற அம்சங்களை நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானமியற்ற வேண்டும் என்ற நிலையிருக்க, நகர்மன்றக் கூட்டம் நடக்குமா, நடக்காதா என்ற நிலையில் எதை நம்பி தான் முன்னனுமதிக்கு கையெழுத்திடுவது என்று கேள்வியெழுப்பினார்.
இவ்வாறாக, விவாதங்கள் நடைபெற்றன. நிறைவில், கூட்டப் பொருளில் உள்ளவாறு, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், 12ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோரைத் தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். பொதுமக்கள் சுமார் 15 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட அசைபடக் காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |