காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீனின் அண்மைக்கால நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து, அவரை ஜமாஅத் சார்பில் உறுப்பினராகப் போட்டியிட தேர்ந்தெடுத்த புதுப்பள்ளி ஜமாஅத் நேரில் விசாரிக்க வேண்டும் என்று கோரி, அப்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பள்ளி நிர்வாகத்திற்கு அண்மையில் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீனிடம் சில கேள்விகளை முன்வைத்து, வார்டு பொதுமக்களின் கைச்சான்றுகளைப் பெற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், புதுப்பள்ளி ஜமாஅத்திற்கு தன்னிலை விளக்கக் கடிதமொன்றை பின்வருமாறு அளித்துள்ளார்:-
பெறுனர்
தலைவர் அவர்கள்,
புதுப்பள்ளி ஜமாஅத்,
காயல்பட்டினம்.
அன்புள்ள புதுப்பள்ளி முத்தவல்லி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
தாங்கள் 30/03/2013 தேதி ஒரு கடிதம் தந்தீர்கள் அதில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி நம் ஜமாஅத்தைச் சேர்ந்த சிலர் கையெழுத்திட்ட புகார் கடிதத்தையும் இணைத்திருந்தீர்கள். அந்த கடிதத்திற்கு பதில் தயாரித்துக் கொண்டிருக்கும்போதே அதே கடிதம் ஒரு வெப்சைட்டில் வந்துவிட்டது.
அதற்கு நியாயம் கேட்டு 03/04/2013 அன்று தங்களிடம் ஒரு கடிதம் தந்தேன். அக்கடிதத்தில் ஜமாஅத்திற்கு கொடுக்கப்பட்ட கடிதம் வெப்சைட்டில் வர தாங்கள் அனுமதி அளித்தீர்களா எனவும் கேட்டிருந்தேன். அதற்கு பிறகும் நான் விளக்கம் தரவேண்டுமென நீங்கள் கேட்டுக் கொண்டதால் பிறகு பதில் எழுதலாம் என்றிருந்தேன்.
ஆனால் இரண்டாவது முறையாக அதே வெப்சைட்டில் என்னை குறைகூறி ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியையும், எனக்கெதிராக தங்களிடம் புகார் தந்தவர்களே கொடுத்திருப்பதாக அறிந்தேன்.
மிகவும் மனவேதனைப்பட்டேன். இருப்பினும் தங்களையும் ஜமாஅத்தையும் மதித்து இந்த பதில் கடிதத்தை நான் தருகிறேன். சுணங்கித்தருவதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களிடத்தில் அவர்கள் தந்த புகாரிலும், வெப்சைட்டில் இரண்டாவது முறையாக வந்த செய்தியிலும் குறிப்பிட்டுள்ள அனைத்து விசயங்களுக்கும் நான் உரிய நேரத்தில் பதில் தருவேன்.
இப்போது சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் விரிவாக பதில்தர இயலவில்லை. இதைபற்றியும் அவர்கள் என்னை குறை சொல்லலாம். காரணம் அவர்கள் என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனேயே செயல்படுகிறார்கள். இல்லை என்றால் அவர்கள் வெப்சைட்டுக்கு தகவல் கொடுத்திருக்க மாட்டார்கள்.
ஜமாஅத்திற்கு எழுதிய கடிதத்தை வெப்சைட்டில் வெளியிட தங்களிடம் அனுமதிப் பெற்றார்களா? அனுமதியில்லாமல் அவர்கள் விருப்பப்படி போட்டால் அது ஜமாஅத்திற்கு அவமரியாதை இல்லையா?
என்னை ஜமாஅத் வேட்பாளர் என்று அழைப்பது முற்றிலும் சரியானது என்று சொல்ல முடியாது காரணம். ஜமாஅத்திற்கு விருப்பமனு தந்தவர்கள் இருவர் எனக்கு எதிராக போட்டியிட்டார்கள்.
ஜமாஅத்தை சேர்ந்த சிலரே அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் வேலை பார்த்தார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து வாங்கிய மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 299 ஆகும்.
அந்த நேரத்தில் இப்போது எனக்கு எதிராக புகார்தந்த ஜமாஅத் விசுவாசிகள் எங்கே போனார்கள் ? ஜமாஅத் முடிவை மதிக்காது, என்னை எதிர்த்து வேட்பாளர்களாக போட்டியிட்ட நபர்கள் மீது அப்போது ஏன் புகார் கொடுக்கவில்லை ?
இருப்பினும் என்னைப் பொருத்தவரை, என்னை வேட்பாளராக அங்கீகரித்த ஜமாஅத் அமைப்புக்கும் என்னை தேர்ந்தெடுத்த வார்டு மக்களுக்கும் நன்றியுடையவனாகவே இருந்து வருகிறேன்.
என்னால் இயன்றவரை நன்மையான காரியங்களை என்னை தேர்ந்தெடுத்த வார்டு மக்களுக்கு செய்தும் வருகிறேன். அதில் குறை இருந்தால் சுட்டிக்காட்டச் சொல்லுங்கள். என்னை திருத்திக்கொள்கிறேன்.
நகர்மன்ற தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கும் எனக்கெதிராக தந்துள்ள புகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவையில்லாமல் இந்த விசயத்தை ஜமாஅத் விசயமாக இவர்கள் மாற்ற முயற்சி செய்கிறார்கள். அது நியாயம் இல்லை.
இந்த நகர்மன்ற தலைவர், தேர்தலில் நிற்கும் போது ஜமாஅத்திற்கு கட்டுப்படவில்லை. தலைவர் தேர்தலின்போது, புதுப்பள்ளி ஜமாஅத்தின் உயிர் மூச்சான சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமாக செயல்படுபவர்கள், மற்றும் நம் ஜமாஅத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நபர்களுடன் இணைந்து செயல்பட்டு தலைவரை ஆதரித்து வந்த நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
நானும் மற்ற உறுப்பினர்களும் தலைவரோடு ஆரம்ப காலத்தில் ஓற்றுமையாக இருந்துதான் பணியாற்றினோம். நீங்களும் தலைவரோடு ஒற்றுமையாக செல்லவேண்டும் என்று அறிவுரை சொன்னீர்கள். அதற்கு கட்டுப்பட்டே நடந்தேன். பலநேரங்களில் உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் ஒத்துப்போகவே முடியாத சுழ்நிலை வந்தபோதும் நான் உங்கள் அறிவுரைப்படி அனுசரித்தே போனேன்.
ஆனால் எவ்வுளவு பொறுமையாக போனாலும், விட்டுக்கொடுத்து போனாலும் இந்த தலைவர் எங்களோடு ஒற்றுமையாக இருக்க விரும்பவே இல்லை. இதற்கு எத்தனையோ சம்பவங்களை சொல்லலாம்.
இருப்பினும் நானும் சகோதரர் ஜஹாங்கிரும் கூடிய மட்டிலும் பிரச்சனையை சமாளித்து மற்ற உறுப்பினர்களை முடிந்த மட்டிலும் அனுசரித்துபோக செய்தோம். ஆனால் எதுவுமே எடுபடவில்லை.
மேலும் இந்த தலைவர் எங்களோடும் ஒத்துப்போகவில்லை, எங்கள் பேச்சையும் கேட்கவில்லை. தலைவருக்கு எதிராக தற்போது நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்கும் முன்னரே பெரும்பாலான உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்க முன்வந்தனர்.
அப்போதும் ஜமாஅத் தலைவராகிய தங்களின் அறிவுரைப்படி நாங்கள் இருவரும்தான் மற்ற உறுப்பினர்களை கெஞ்சிகேட்டு அந்த முயற்சியை தடுத்து நிறுத்தினோம்.
இந்நிலையில் தலைவர் / உறுப்பினர்களுக்கிடையில் நிரந்தர சுமூக நிலையை ஏற்படுத்த நமதூர் முக்கிய பிரமுகர்களால் KMT மருத்துவமனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட சமாதானக் குழுவினர்களின் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, ஒட்டுமொத்த 18 நகர்மன்ற உறுப்பினர்களையும் நீக்கிவிட்டு தனக்கு மட்டுமே முழுஅதிகாரத்தை தரும்படி அரசுக்கு விண்ணப்பித்த தலைவரின் நடவடிக்கையால் மனம்நொந்த, தலைவிக்கு ஆதரவாக இருந்த 4,5 உறுப்பினர்களும் கூட நம்பிக்கை இழந்த நிலை உங்களுக்கு தெரியும். தனக்கு ஆதரவான அந்த உறுப்பினர்களைக் கூட தலைவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
இதற்குமேல் வேறுவழியில்லாத சூழ்நிலையில் ஊர் நன்மையை கருதி மற்ற உறுப்பினர்களும், நாங்களும் இணைந்து இந்த முடிவை மேற்கொண்டோம்.
இந்த நகர்மன்ற தலைவர் எங்களோடு சுமூகமாக என்றுமே இருந்தது இல்லை. எல்லா உறுப்பினர்களையும் லஞ்சம் வங்குபவர் என்று கேவலப்படுத்தினார். உறுப்பினரின் கருத்துக்கு மாற்றமாக மினிட் புக்கில் பதிவு செய்தார். நியாயம் கேட்டால் வீடியோ எடுத்தே தீரவேண்டும் என்று முரண்டு பிடித்தார். எங்களை கேவலப்படுத்தி அவரை உயர்த்தி எழுதும் ஒரு வெப்சைட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
இதற்கெல்லாம் நியாயம் கேட்டால் ஒன்றும் கிடைக்கவில்லை. தவறான நபர்களின் ஆலோசனையை தெரிந்தோ தெரியாமலோ கேட்டு, எங்களை உதாசீனப்படுத்தினார். சமாதானக்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
மேலும் சமாதானக்குழுவில் ஜமாஅத் தலைவராகிய தாங்கள் இருந்ததாலும், தாங்கள் கேட்டுக்கொண்டதாலும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் முயற்சிக்கு அந்த நேரத்திலும் நாங்கள் இருவரும் தடையாக இருந்தோம். ஆனால் சமாதானக்குழு அறிக்கை தந்தபிறகும் எங்களுக்கு எதிராக அனைத்து காரியங்களையும் செய்தார்.
கடந்த காலத்தில் நமது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமானர்கள் அடியாட்களைக் கொண்டு நமதூர் கூலக்கடை பஜாரில், தலைவரின் தந்தையை தாக்கியபோது அவருடைய உயிரை காப்பாற்ற துணிந்து உதவியவன் நான் என்பதை நீங்களும் அறிவீர்கள். இதன் காரணமாகவே எனக்கு மிரட்டல் காட்டி வந்த கடிதத்தையும் இன்று வரை நான் வைத்திருக்கிறேன்.
ஆனால் டிப்போ ஏலம் விடப்பட்ட விசயத்தில் என்னை தவறாக புரிந்துகொண்ட ஒருவர் என்னை தாக்கவந்தபோது அதைபற்றி போலிஸில் புகார் கொடுக்க சென்ற போது எனக்கு எதிராக தலைவர் செயல்பட்டார் என்பது அவரது மனசாட்சிக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.
இருந்தாலும் அதை எல்லாம் நான் பெரிதாக நினைக்கவில்லை. முன்னாள் கமிஷ்னரும் தவறு செய்தார், இப்போதுள்ள கமிஷ்னரும் தவறு செய்கிறார், அதிகாரிகளும், ஊழியர்களும் ஒத்துழைக்கவில்லை, மின்சார வாரியமும் ஒத்துழைக்கவில்லை, முன்னாள் தலைவரும் என்னை மதிக்கவில்லை, ஐக்கிய பேரவையும் சரியில்லை, உறுபபினர்களும் சரியில்லை, நான் மட்டும்தான் சரி என்று ஒருவர் சொன்னால் தவறு யார் மீது இருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள்.
இது தனிப்பட்ட முறையில் தலைவராகிய அவருக்கு எதிரான முடிவு அல்ல. எங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு, தடையின்றி நிம்மதியாக சேவையாற்ற இவர் தடையாக உள்ளார் என்பதற்காகவே இந்த முடிவுக்கு நான் உட்பட 17 உறுப்பினர்களும் வந்தோம்.
சட்டம் எங்களுக்கு வழங்கியுள்ள அந்த உரிமையை ஊர் நன்னைக்காக பயன்படுத்தி இருக்கிறோமே தவிர, தனிப்பட்ட விரோதம் அவர் மீதோ. அவருக்கு வேண்டப்பட்டவர் யார் மீதோ இல்லை.
எங்கள் மீது ஒரு குற்றச்சாட்டை அவரும், அவருடைய ஆதரவாளர்களும் வைக்கிறார்கள். அது என்னவென்றால் ஒருதனிநபர் எங்களை தூண்டிவிடுகிறார் என்பதே அக்குற்றச்சாட்டாகும்.
எங்களுக்கு அறிவில்லையா? ஒருவர் தூண்டிவிட்டால் அத்தனை பேரும் அதற்கு கட்டுப்பட நாங்கள் என்ன விபரம் தெரியாதவர்களா?
நகர்மன்ற தலைவருக்கு தனிப்பட்ட நபர்கள் தவறான வழிகாட்டலாம். அது அவர்களை பொருத்தளவில் சரி. ஆனால் ஊர் நன்மைக்காக சில ஆலோசனைகளை சிலபேரிடத்தில் நாங்கள் பெற்றால், அதுமட்டும் தூண்டிவிடுவதாம். இதை எங்கேபோய் சொல்ல? இதை எல்லாம் கேட்டு கேட்டு புளித்துபோய்விட்டது.
மேலும் பல கேவலமான குற்றச்சாட்டுகளை இந்த தலைவரும், அவருக்கு வக்காலத்து வாங்குபவர்களும் சொல்லி வருகிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும். அப்போது பல உண்மைகள் வெளிவரும். அந்த நேரத்தில் புகார் மனு ஏற்பாடு செய்தவர்கள் உண்மையை விளங்கிக்கொள்வார்கள்.
இப்போது கையெழுத்து போட்ட அனைவரும்கூட எனக்கு எதிரானவர்கள் இல்லை. பலர் படிக்காமலேயே கையெழுத்து போட்டுள்ளார்கள். பலர் கையெழுத்து போட்விட்டு என்னிடத்தில் வேறு விசயத்திற்கு என்று பொய் சொல்லி கையெழுத்து வாங்கியதாக சொல்கிறார்கள். இன்னும் சிலர் சும்மா கையெழுத்து போட்டோம், எங்களை தப்பாக நினைக்காதீர்கள் என்றும் என்னிடமே வந்து சொல்கிறார்கள்.
மேலும் புகார் மனுவில் கையெழுத்திட்ட சிலர் நமது ஜமாஅத்தைச் சேர்தவர்களாக இருக்கலாம் ஆனால் என்னுடைய வார்டை சேர்ந்தவர்கள் இல்லை.
502 வாக்குகளை நான் தேர்தலில் வாங்கினேன். ஆனால் இத்தனை குழப்பங்களோடு அவர்கள் வாங்கிய கையெழுத்தின் எண்ணிக்கை சுமார் 90 மட்டுமே. இதில் இருந்து நான் வார்டு மக்களின் நம்பிக்கையை இழக்கவில்லை என்பது தெளிவாகிறது. இன்ஷாஅல்லாஹ் இழக்கவும் மாட்டேன்.
இந்த விளக்கம் போதும் என கருதுகிறேன். இன்னும் விளக்கம் தேவைப்பட்டால் உரிய நேரத்தில் தருகிறேன். வஸ்ஸலாம்.
தங்கள் அன்புள்ள.
S.A.SAMU SHIHABUDEEN
இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், புதுப்பள்ளி ஜமாஅத் நிர்வாகத்திற்களித்துள்ள தன்னிலை விளக்கக் கடித வாசகம் அமைந்துள்ளது. |