காயல்பட்டினம் நகராட்சியில் சாலை பணிகள் முறைப்படி நடைபெறவில்லை என நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மாவட்ட ஆட்சியரிடம் சில மாதங்களுக்கு முன்னர் புகார் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து காயல்பட்டினம் ஆஸாத் தெரு, நெய்னார் தெரு, அப்பா பள்ளித் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் முறைப்படி நடைபெறாததை சுட்டிக்காட்டி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், 04.02.2013 திங்கட்கிழமையன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.
மேற்படி பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 26.02.2013 அன்று, நகராட்சி நிர்வாக மண்டல மேலாளர் மோகன் தலைமையில் குழுவினர் காயல்பட்டினம் வருகை தந்து, சாலைப் பணிகளைப் பார்வையிட்டுச் சென்றனர்.
அதன் தொடர்ச்சியாக, 07.03.2013 வியாழக்கிழமையன்று நண்பகல் 12.00 மணியளவில், ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் ராமலிங்கம் ஆகியோர் காயல்பட்டினம் வருகை தந்து, முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள காயல்பட்டினம் நெய்னார் தெரு, ஆஸாத் தெரு, அப்பா பள்ளித் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, 08.3.2013 அன்று மாலை 04.00 மணியளவில் மீண்டும் காயல்பட்டினம் வருகை தந்த அவர்கள், ஓரளவுக்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ள நெய்னார் தெருவில், சாலையின் சில பகுதிகளில் பள்ளம் தோண்டி ஆய்வு செய்தனர்.
ஆய்வுகள் மேற்கொண்ட அந்த குழு தனது அறிக்கையினை தற்போது மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளது. ஆய்வறிக்கையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் - ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில் பெறப்பட்ட புகாரினை மேற்கோள்காட்டி நிபுணர்குழு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டு, அதன் முடிவுகளை, மேல் நடவடிக்கைக்காக, சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் இதுவரை வெளியிடப்படாவிட்டாலும், இந்த அறிக்கை - நெய்னார் தெரு சாலை பணியில் சுமார் 2 லட்ச ரூபாய் முறைக்கேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என காயல்பட்டணம்.காம் அறிகிறது. நெய்னார் தெரு சாலைப்பணிகளை தளவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரர் பெற்றுள்ளார்.
சுமார் 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான இந்த சாலைப்பணியில், கிணறு முரம்பு, GSB, WBM தரம் 2, WBM தரம் 3 ஆகிய பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டப்போது முடிவுற்றிருந்ததால் அவைகளின் தரம் குறித்து மட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
M புத்தகம் என்ற நகராட்சி புத்தகத்தில் இந்த 4 பணிகளுக்கு மட்டும் சுமார் 8.5 லட்ச ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதிவாகியிருந்ததாக தெரிகிறது. ஆய்வு மேற்கொண்ட நிபுணர் குழு - மேற்கொள்ளப்பட்ட பணிகளின் தரம் சுமார் 6 லட்சம் தான் என தனது முடிவை தெரிவித்துள்ளது. இதன் மூலம் நகராட்சிக்கு - இந்த ஒரு சாலை மூலம் மட்டும், குறைந்தது சுமார் 2 லட்ச ருபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
புகாரில் குறிப்பிடப்பட்ட அப்பாப்பள்ளி தெரு சாலை, ஆசாத் தெரு சாலை ஆகியவை ஆய்வு நேரத்தில் முழுமையாக முடியாத காரணத்தால், ஆய்வு முடிவுகளில் இத்தெருக்கள் இடம்பெறவில்லை.
நெய்னார் தெரு சாலை - அரசின் IUDM திட்டத்தின் கீழான பணியாகும். மொத்தம் 97 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 IUDM திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இப்பணிகள் அனைத்தையும் காயல்பட்டினத்தை சார்ந்த தளவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவைகளை தவிர - பொது நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் மேற்கொள்ளப்படும் பல பணிகளையும் இந்த ஒப்பந்ததாரர் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நெய்னார் தெரு சாலைப்பணிகளின் தரம், முறைக்கேடு குறித்த முடிவுகள் - இந்த ஒப்பந்ததாரர் மூலம் மேற்கொள்ளப்படும் பிற ஒப்பந்தப்பணிகள் குறித்த சந்தேகங்களையும் எழுப்புகிறது. |