தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் 24.04.2013 புதன் இரவு 08.00 மணியளவில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு எம்.எஸ்.ஜஃபருல்லாஹ் இல்லத்தில் நடைபெற்றது.
மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை காயல் நல மன்றத்தின் (காவாலங்கா) தலைவரும், சிறந்த எழுத்தாளருமான ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் என்ற தைப்பான் ஷாஜஹான் ஹாஜி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், இந்திய மனித வள மேம்பாட்டுத்துறை மதரசா நவீன கல்வி தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் ஹாஜி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசியதாவது:-
என் பாசத்திற்குரிய இம்மன்றத்தின் தலைவர் வாவு ஷம்சுத்தீன் காக்கா தொடங்கி, இம்மன்றத்தின் செயலாளர் என் அன்பிற்குரிய செய்யது முஹம்மது காக்கா மற்றும் மரியாதைக்குரிய காவாலங்கா தலைவர் தைப்பான் ஷாஜஹான் காக்கா உள்ளிட்ட அனைவரும் என்னைப் புகழ்வதிலும் பாராட்டுவதிலும் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார்கள். அதற்கு பதிலாக நம் சமுதாயப் பிரச்சனைகள், தேவைகளைப் பற்றி பேசியிருக்கலாமே என்று கருதுகிறேன்.
ஆர்வமற்ற சமுதாயம்:
என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய பெரியோர்களே! இளைய தலைமுறைச் சகோதரர்களே!
இன்று நாம் - நம் முஸ்லிம் சமுதாயம் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறோம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல், நீதித்துறை என அனைத்துத் துறைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறோம். நமக்கு எந்தத் துறையைப் பற்றியும் போதிய ஞானமோ, விழிப்புணர்வோ இல்லை. சிறுபான்மையினரான நமக்கு அரசு தரும் உதவித் திட்டங்கள் பற்றியாவது நாம் தெரிந்திருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. அதனைப் பற்றி அறிய ஆவலுமில்லை, அக்கறையுமில்லை.
அமைப்புகளால் பிரிந்திருக்கிறோம்...
2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி. இதில் இஸ்லாமியர்கள் சதவீதம் 5.7 விழுக்காடுதான். ஆனால் நம்மிடம் இருக்கும் அமைப்புகள் 24க்கும் மேல். அமைப்புகளில்தான் பெரும்பான்மையாக இருக்கிறோமே தவிர மக்கள் தொகையில் அல்ல. இவ்வளவு குழுக்களாக இருந்தும் ஒற்றுமையாக இருக்கிறோமா என்றால் இல்லை. எப்படி ஒற்றுமையாக இருக்க முடியும்?
சின்னச் சின்ன விஷயங்களில் எல்லாம் பிணங்கிப் பிரிந்து நிற்கின்றோம். ஒவ்வொரு அமைப்பும் தத்தம் அமைப்புதான் முன்னிலைப் படுத்தப் படவேண்டும் என்று போட்டிப் போடுகின்றன.
மறைக்கப்படும் முஸ்லிம்களின் தியாக வரலாறுகள்:
ஆனால் நம்மை குறைப்படுத்தவும், குற்றப் பரம்பரையாக சித்தரிக்கவும் பெரிய சூழ்ச்சி மறைமுகமாக நடந்து வருகின்றது. நாம் இந்த நாட்டிற்கு விடுதலைக் காலங்களில் செய்த தியாகங்கள் எல்லாம் மறக்கப்பட்டுள்ளன. அதை நினைவுகூர யாரும் இல்லை. விடுதலைக்காக தங்களின் இன்னுயிர் ஈத்த தியாகிகள் பெயர்கள் எல்லாம் மறைக்கப்பட்டு வருகின்றன.
விடுதலைப் போராட்டங்களில் இஸ்லாமிய சமுதாயத்தை தங்களின் வீர முழக்கங்களால் வீறுகொண்டு போரிட தூண்டிய முஹம்மது அலி, ஷௌகத் அலி சகோதரர்களை யார் நினைத்துப் பார்கிறார்கள்?
ஆங்கிலேயனை விரட்டுவதற்கு கடுமையாகப் போராடிய திப்பு சுல்தானைப் பற்றி யார் புகழ்கிறார்கள்?
ஆங்கிலேயர்கள் மேல் இருந்த வெறுப்பின் காரணமாய் ஆங்கிலக் கல்வி கற்பது ஹராம் என்று பத்வா வழங்கி தங்களின் விடுதலை வேட்கையை இந்த சமுதாயத்திற்கு உணர்த்திய உலமாக்களையும் மதரசாக்களையும் உளமார வாழ்த்துபவர்கள் யார்?
தவறான சித்தரிப்பு:
இன்று இஸ்லாமியர்கள் அன்னியர்கள் போலவும், தேசப்பற்று இல்லாதவர்களாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். இந்திய விடுதலை நேரத்தில் அந்நியனின் பிரித்தாளும் சூழ்ச்சியில் விழாமல் நம் தேசம்தான் நமக்கு சிறந்தது என்று பாகிஸ்தானுக்கு போகாமல் தேச விசுவாசத்தைக் காட்டியவர்கள் தமிழ் முஸ்லிம்கள். நாம் அறிந்த வரை தமிழகத்திலிருந்து யாரும் நாடு மாறிப் போகவில்லை. ஆனால் இன்று நாம் தேசப் பற்று அற்றவர்களாகவும், தேச விரோதிகளாகவும் ஊடகங்களில் திரும்பத் திரும்ப காட்டப் படுகிறோம்.
மாலேகாவ்ன், அஜ்மீர் ,ஹைதராபாத் குண்டுவெடிப்புகளுக்கு மற்றவர்கள்தான் காரணம் என்ற உண்மை தெரிய வந்த பின்பும், எங்கு குண்டு வெடித்தாலும் உடனேயே முஸ்லிம் தீவிரவாதிதான் காரணம் என்று முந்திக்கொண்டு செய்தி வெளியிடுகிறார்கள்.
நம்மிலும் தவறு செய்வோர் உள்ளனர்...
நம்மில் சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதை நாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அதைக் கண்டிக்கிறோம். அதைச் செய்யும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.
ஒரு சிலர் செய்யும் தீவிரவாதச் செயல்களால் ஒட்டுமொத்த சமுதாயமே களங்கப்படுத்தப் படுகிறது. உடல், உயிர், உடைமைகள் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறோம்.
பல்லாண்டு கால சிறைவாசம்:
நம்மவர்கள் கைது செய்யப்பட்டால் விசாரணைக் கைதிகளாகவே பல்லாண்டுகள் சிறையில் வாடுகின்றனர். ஒரு குடும்பத்தில் தந்தை, மகன் இன்னும் அவருடைய மகளை மணமுடித்த மருமகன் என மூவர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்பட்டுள்ளனர் என்றால், அவர்களுடைய குடும்பத்தினருக்கு வாழ்வாதாரத்தைக் கொடுப்பது யார்? இன்னும் நிறைய பேர் எவ்வித குற்றப் பத்திரிக்கையும் அளிக்கப்படாமல் அவர்கள் அக்குற்றத்தையே செய்திருந்தாலும் அதற்காக வழங்கப்படும் தண்டனை ஆண்டுகளையும் தாண்டி சிறையில் சிரமப்படுகின்றனர்.
இளைஞர்களின் ஆர்வக் கோளாறு:
ஒரு சில ஊர்களில் நாம் பெரும்பான்மையாக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழகத்திலேயே நாம் பெருவாரியாக இருப்பதாக நினைத்துக்கொண்டு ஒரு சில இளைஞர்கள் ஆர்வக் கோளாறினாலும், உணர்ச்சி வசப்பட்டும், இன்னும் சொல்லப்போனால் சிலரின் தவறான வழிகாட்டுதலினாலும், தவறான செயல்களில் ஈடுபடுவதால் நம் சமுதாயம் பாதிப்பிற்கு ஆளாகிறது.
மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாடு அவசியம்:
இவர்களை நேர்வழி நடத்தவும், இவர்களுக்கு சீரான ஆலோசனை வழங்கவும் நாம் வாழும் இடங்களில் எல்லாம் மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். நமக்குள் ஏற்படும் சிற்சில பிரச்சனைகளை காவல்துறை, நீதிமன்றம் அளவிற்கு செல்லாமல் மஹல்லா அளவிலேயே தீர்த்து விடவேண்டும்.
முற்காலத்தில் இப்படி ஒரு அமைப்பு முஸ்லிம் சமுதாயத்தில் இருந்திருக்கிறது. முஸ்லிமல்லாத சகோதரர்கள் கூட இஸ்லாமிய சமுதாய பெரியவர்கள் நீதமான தீர்ப்பு வழங்குவார்கள் என்று தேடி வருவார்களாம். எனவே, மீண்டும் அப்படியொரு மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பை உருவாக்க அந்தந்த முஹல்லாவில் வசிக்கும் பெரியவர்கள், செல்வாக்கு பெற்றவர்கள் தங்கள் நேரத்தை ஒதுக்கி நற்பணி ஆற்றவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
பல்கிப் பரவியிருக்கும் காயலர்கள்:
வரலாற்றுச் சிறப்பு மிக்க நம் காயல் நகர் மக்கள் உழைப்பிலும், நேர்மையிலும் ஒழுக்கத்திலும், மார்க்க நெறிகளைக் கடைப் பிடிப்பதிலும், பிறருக்கு முன்னுதாரமாக இருப்பதிலும் பெயர் பெற்றவர்கள். நம் காயல் நகர் மக்கள் பொருள் ஈட்டுவதற்காக உலகின் பல திசைகளிலும் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றோம். கல்வியில் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக இன்று நம் இளைஞர்கள் உயர் கல்வி பெற்று உயர்ந்த வேலை வாய்ப்பில் பணியாற்றி வருவதைப் பார்க்கின்றோம்.
அழைத்த மன்றங்களுக்கு நன்றி:
அண்மையில் சிங்கப்பூர், ஹாங்காங் தற்போது பாங்காக் நகரங்களில் நடைபெறும் காயல் நல மன்றங்களின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்து கௌரவப் படுத்தியமைக்கு இம்மன்றங்களுக்கு என் உளமார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
நகர்நல மன்றங்கள்:
இன்று உலக அளவில் அனைத்து திசைகளிலும் விரிந்து பரந்து பொருள் ஈட்டி வருகின்றீர்கள். எல்லா இடங்களிலும் நம் ஊர் நகர் நல மன்றங்கள் அமைத்து அதன் மூலம் நம் ஊருக்காக, நம் ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்காக கல்வி, மருத்துவம், தொழில் இன்னும் மேம்பாட்டிற்கான அனைத்து வழிகளிலும் உதவி செய்து வருகின்றீர்கள். நன்கு ஒற்றுமையாக இருக்கின்றீர்கள்.
நகரில் நிலவும் ஒற்றுமைக் குறைவு:
ஆனால் நம் ஊரில் ஒற்றுமை ஒரு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. சகோதர சமயத்தவர்கள் நம்மை ஏளனமாகப் பார்கிறார்கள். நகர்மன்றத்தில் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையில் ஆரம்பம் முதலே பிரச்னை.
நகர் மன்றத்தில் எந்தத் திட்டங்களும் நிறைவேற்ற முடியாமல் தேக்க நிலை நீடித்து வருகிறது.
ஜமாஅத்துகளுக்கிடையே புரிந்துணர்வு இல்லை.
வெளியூரிளிர்ந்து யாரும் எப்போதும் எவ்வித கட்டுப்பாடோ, கண்காணிப்போ இல்லாமல் ஊரில் சகட்டு மேனிக்கு வந்து குடியேருகிறார்கள். அவர்கள் யார், அவர்களது பின்னணி என்ன என்ற எந்த வித விசாரனையுமில்லை. அவர்களைப் பற்றி அறிய யாரும் ஆவல்படுவதுமில்லை.
ஐக்கியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய பேரவையிலேயே ஐக்கியமில்லாத அவல நிலை.
கொள்கை, கோட்பாடு, அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒற்றுமையைக் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம். நம் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் இதற்கு ஒரு தீர்வு காணாவிட்டால் நம் ஊர் நிலைமை மிக மோசமாகிவிடும் என்று அண்மையில் என்னைச் சந்தித்த ஓர் உளவுத் துறை அதிகாரி எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லிச் சென்றார்.
பிரியாதிருப்போம்…
எனவே, என் அன்பான சகோதரர்களே! இளைஞர்களே!!
ஊரின் ஒற்றுமை மிக மிக முக்கியம். நம் உயிருக்கும், நம் மக்களின் உயிருக்கும், நம் பொருளுக்கும் பாதுகாப்பு மிக மிக அவசியம். கொள்கை, அரசியல் வேற்றுமைகள் நம் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக ஆக வேண்டாம்.
ஊரில் ஒற்றுமையாக வாழ்வோம். சகோதர சமயத்தாருடன் வாஞ்சையுடன் பழகுவோம். நம் தாய் நாட்டிற்கு விசுவாசமாக இருப்போம்.
இஸ்லாம் எங்கள் வழி!
இன்பத் தமிழ் எங்கள் மொழி!!
என எப்போதும் பறைசாற்றுவோம் என்ற வார்த்தைகளோடு, என்னை இங்கு பேச வைத்து இவ்வளவு நேரம் நீங்கள் அமைதியாய் இருந்து கேட்டமைக்கு, என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தவனாக விடைபெறுகிறேன். வ ஆகிரு தாவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், இந்திய மனித வள மேம்பாட்டுத்துறை மதரசா நவீன கல்வி தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.
தகவல்:
M.S.செய்யித் முஹம்மத்
செயலாளர்
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா)
படம் & பதிவேற்றத்தில் உதவி:
கம்பல்பக்ஷ் எஸ்.ஏ.அஹ்மத் இர்ஃபான் |