மருத்துவ உதவி வழங்கும் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணைய இசைவும், வேலை தேடி பெங்களூரு வருவோர் தங்குவதற்காக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் விடுதி இயங்கத் துவங்குமெனவும் பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் 8ஆவது பொதுக்குழுக் கூட்டம், 28.04.2013 ஞாயிற்றுக்கிழமையன்று, பெங்களூரு எம்.ஜி. சாலையிலுள்ள மர்ஹூம் ஆடிட்டர் பி.எஸ்.எம்.புகாரீ ஹாஜி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஹாஜி கே.ஏ.ஆர்.அஜ்மல் புகாரீ கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் கே.எம்.எஸ்.எல்.முஹம்மத் உமர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை - மன்றச் செயலர் விடுமுறையிலிருப்பதால், அவர் சார்பாக துணைத்தலைவர் கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் வாசித்து, அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து விவரித்ததோடு, ஒருங்கிணைந்த மருத்துவ உதவி செயல்திட்டம் ‘ஷிஃபா’ குறித்தும் சிற்றுரையாற்றினார்.
பின்னர், மன்றத் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் தலைமையுரையாற்றினார்.
மன்றத்தால் நடத்தப்படும் கூட்டங்கள் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும், உறுப்பினர் மாதச் சந்தா தொகைகளை நிலுவையின்றி உடனுக்குடன் செலுத்துவதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்திப் பேசினார்.
பின்னர், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பழைப்பாளர்களும், காயல்பட்டினத்திலிருந்து பெங்களூருக்கு புதிதாக வந்துள்ள மன்றத்தின் புதிய உறுப்பினர்களும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
பின்னர், மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் குளம் எஸ்.ஓ.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
பின்னர், உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டது. மன்றம் மற்றும் நகர்நலன் குறித்த பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்ட பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
மன்றப் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்ட - மன்றத்தின் 2012-2013ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கறிக்கை மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிக்கான கணக்கறிக்கை ஆகியவற்றுக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதலளிக்கிறது.
தீர்மானம் 2 - சந்தா சேகரிப்பிற்கு பொறுப்பாளர்கள் நியமனம்:
மன்ற உறுப்பினர்களிடமிருந்து மாதாந்திர சந்தா தொகையை சேகரிக்கவும், மன்றத்தில் புதிதாக உறுப்பினர்களை இணைப்பதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்திடவும், மன்ற உறுப்பினர்களான
எம்.எம்.வாவு முஹம்மத்
குளம் எஸ்.ஓ.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
எஸ்.எம்.ஷேக் அப்துல் காதிர்
எம்.என்.முஹம்மத் சுலைமான்
கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மன்றத்தில் இதுவரை உறுப்பினராகாதவர்கள் மற்றும் சந்தா நிலுவை உள்ளவர்கள் அனைவரும் இப்பொறுப்பாளர்களை இவ்வகைக்காக அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தீர்மானம் 3 - விடுதி செயல்திட்டங்களுக்காக தனிக்குழு:
பெங்களூருக்கு வேலைவாய்ப்பு தேடி வரும் காயலர்களுக்காக, வரும் ஆகஸ்ட் மாதம் புதிதாக இயங்கவுள்ள தங்கும் விடுதிக்கான செயல்திட்டங்களை வடிவமைத்திட,
ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர்
மூஸா ஸாஹிப்
ஷேக்னாலெப்பை
எம்.என்.முஹம்மத் சுலைமான்
முஹம்மத் இப்றாஹீம் நவ்ஷாத்
கே.ஏ.ஆர்.அஜ்மல் புகாரீ & அபூபக்கர் ஆலிம்
ஆகியோரடங்கிய குழுவை இக்கூட்டம் நியமிக்கிறது. இக்குழு முறையான அறிக்கையை ஆயத்தம் செய்து, வரும் ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4 - ‘ஷிஃபா’வில் இணைய இசைவு:
உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த மருத்துவ உதவி வினியோகத்திற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணைந்திட மன்றம் ஒருமனதாக இசைவு தெரிவிப்பதுடன், அதன் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக, மன்றத்தின் சார்பில் ரூபாய் 10 ஆயிரம் வழங்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
அத்துடன், ‘ஷிஃபா’வுக்கான மன்றத்தின் பிரதிநிதியாக, துணைச் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுமைான் அவர்களை இப்பொதுக்குழு நியமிக்கிறது.
தீர்மானம் 5 - இஃப்தார் நிகழ்ச்சியுடன் அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் 10ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை, வரும் ஜூலை மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்திட இக்கூட்டம் தீர்மானிப்பதோடு, மன்ற நிர்வாகக் குழுவின் உறுதுணையுடன் - நடப்பு பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாட்டுக் குழுவினரையே அடுத்த கூட்டத்திற்கும் ஏற்பாட்டாளர்களாக இக்கூட்டம் நியமிக்கிறது.
தீர்மானம் 6 - KCGC, சிங்கை கா.ந.மன்ற புதிய செயற்குழுவிற்கு வாழ்த்து:
காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) மற்றும் சிங்கப்பூர் காயல் நல மன்றம் ஆகியவற்றுக்கு அண்மையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயற்குழுக்கள், இறையருளால் இனிதே செயல்பட்டு நகர்நலன் காத்திட இக்கூட்டம் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து, துஆ செய்து மகிழ்கிறது.
தீர்மானம் 7 - உலக கா.ந.மன்றங்களின் விபரக் குறிப்புகள்:
உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள அனைத்து காயல் நல மன்றங்களும், தங்கள் மன்றத்தின் விபரங்களை, பெங்களூரு கா.ந.மன்றத்தால் தயாரிக்கப்பட்டுள்ள - அதற்கான மென்பொருளில் பதிவேற்றம் செய்திட கேட்டுக்கொள்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, இக்கூட்டம் சிறப்புற நடந்தேற அருள் செய்த அல்லாஹ்வுக்கும், மன்றத்தின் அனைத்துறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள், சிறப்பழைப்பாளர்கள், இடவசதி செய்து தந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றி தெரிவிக்கப்பட்டது.
பின்னர், துஆ - ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்.
இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் ரோஸ் மில்க் குளிர்பானம், சமோஸா சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு, பெங்களூரு காயல் நல மன்ற தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்
துணைத் தலைவர்
காயல் நல மன்றம்
பெங்களூரு |