சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.2,65,000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, ஒருநாள் சம்பள நன்கொடைத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால், எமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 36ஆவது செயற்குழுக் கூட்டம், 26.04.2013 வெள்ளிகிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் இல்லத்தில், மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.பி.ஸாலிஹ் ஹாஜியார் தலைமையில் நடந்தது.
எஸ்.எல்.ஸதக்கத்துல்லாஹ் அவர்கள் இறைமறை ஓதி துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் இப்ராஹிம் மற்றும் ஃபைஜல் இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மன்றத் தலைவர் எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் அனைவரையும் வரவேற்றார். நிதிநிலை அறிக்கையை மன்றத்தின் மன்ற பொருளாளர் ஏ.டி.சூஃபி இபுறாஹீம் தாக்கல் செய்தார்.
நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு:
பின்னர், நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த கடிதங்கள் வாசிக்கப்பட்டு மூன்று நபர்களின் மருத்துவ சிகிச்சைக்கும், இரண்டு நபர்களின் சிறுதொழில் வகைக்கும் மொத்தம் ரூ 97,000 /= ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், மின்னஞ்சல் மூலம் (Feb-Mar)-ல் 7 மருத்துவ சிகிச்சை வகைக்கான கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு ரூ 1,68,000 /= ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செயற்குழு உறுப்பினர் முஹ்சின் தாக்கல் செய்தார். அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும் புகழ்ச்சியும்.
இக்ராஃவின் செயல்பாடு:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் சீரிய செயல்பாடுகள் மற்றும் தற்போதைய தேவைகள் குறித்து துணைத்தலைவர் ஏ.எச்.முஹம்மது நூஹ் உறுப்பினர்கள் மத்தியில் விளக்கினார். அதைத் தொடர்ந்து, இக்ராஃவில் ஆயுட்கால உறுப்பினர்களாக மருத்துவர் இப்ரஹிம், அபுல்ஹசன், பி.எம்.எஸ்.லெப்பை ஆகியோர்கள் இணைந்தனர்.
பின்னர், இக்ராஃவின் நிர்வாகச் செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.20,000 தொகையை பங்களிப்புச் செய்திடவும், இக்ராஃவுக்கான RKWAவின் பிரதிநிதியாக செயற்குழு உறுப்பினர் வி.எம்.ஏ.மொஹ்தூம் அமீன் அவர்களையும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
அடுத்த பொதுக்குழு மற்றும் ஒரு நாள் சம்பள நன்கொடை திட்டம்:
எமது மன்றத்தின் 46ஆவது பொதுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 19.07.2013 வெள்ளிகிழமை மாலை 05.00 மணியளவில், இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடைபெற இருக்கிறது.
இப்பொதுக் குழுவின்போது, மன்ற நலம் விரும்பிகள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுளது. மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் காயல் அன்பர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ரமழான் உணவுத் திட்டம்:
ரமழான் உணவு திட்டம் பற்றி உதவி பொருளாளர் ஒய்.ஏ.எஸ்.ஹபீப் முஹம்மது முஹ்ஸின் கூறுகையில், இவ்வருடம் பயனீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உறுப்பினர்கள் முன் வர வேண்டும் என்றும் இதற்கான ஏற்பாடுகள் மற்றும் திட்டம் பற்றியும் செயற்குழு உறுப்பினர்களுக்கு விவரித்தார்.
இந்திய தூதரகத்தில் RKWA பதிவு:
சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதரகத்தில் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் முக்கிய சேவைகள் குறித்தும், மன்றத்தை முறைப்படி பதிவு செய்யவும் செயற்குழு உறுப்பினர் நோனா என்.எம்.இஸ்மாயில் அவர்களை முயற்சி எடுக்கும்படி அறிவுறுத்தப்படுள்ளது.
’ஷிஃபா’:
‘ஷிஃபா’வின் துவக்கச் செலவுக்காக ரூ.10,000 ஆயிரமும், நிர்வாகச் செலவினங்களுக்காக, ஓராண்டுக்கு ரூ.15,000 ஆயிரம் வழங்க இக்கூட்ட்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும், எமது மன்றத் துணைத்தலைவர் ஏ.எச்.முஹம்மது நூஹ் அவர்களை RKWAவின் சார்பாக, ஷிஃபா’வின் செயற்குழு உறுப்பினராக செயல்படவும், மருத்துவர் இப்ராஹிம் அவர்களை நடப்பாண்டுக்கான ஷிஃபா’வின் தலைவராகவும் பரிந்துரை செய்கிறது.
தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்):
தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்) கூடுதலாகப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசு வழங்குவது குறித்து பரிசீலித்து கீழ் கன்டவாறு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எம்.இ.எல்.நுஸ்கி நன்றி கூற, ஹாஃபிழ் பி.எஸ்.ஜெ.ஜைனுல் ஆபிதீன் துஆவுக்குப் பின், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓத, கூட்டம் நிறைவுபெற்றது. இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
நோனா M.செய்யது இஸ்மாயில்
S.A.C. அஹ்மது ஸாலிஹ்
ஊடகக் குழு
ரியாத் காயல் நல மன்றம்
ரியாத் - சஊதி அரபிய்யா |