நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கப் பரிசு வகைக்காக ரூபாய் 2 லட்சத்து 7 ஆயிரம் தொகையை நிதியொதுக்கீடு செய்தும், ‘ஷிஃபா’ செயல்திட்டத்திற்கு ரூபாய் 15 ஆயிரம் தொகை வருடாந்திர நிதியொதுக்கீடு செய்தும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நடப்பு பருவத்திற்கான முதல் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் - 2013-2015 பருவத்திற்கான புதிய செயற்குழுவின் முதல் செயற்குழுக் கூட்டம், 26.04.2013 வெள்ளிக்கிழமை இரவு 20.00 மணியளவில், மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலோசகர் உரை:
செயற்குழு உறுப்பினர் சோனா முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையுரையாற்றினார்.
வெளிப்படை நிர்வாகம்:
மன்றத்தின் செயல்திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விவரித்துப் பேசிய அவர், மன்ற நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்களால் கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும், தயக்கமின்றி தெளிவான விளக்கங்களை உடனுக்குடன் அளித்திடும் வகையில், வெளிப்படையான நிர்வாகமாக இருத்தல் வேண்டும் என்று கூறினார்.
நகர்நலனுக்காக ஊக்கத்துடன் செயல்படத்தக்க புதிய சந்ததியை உருவாக்கும் நோக்கத்துடன் மன்றத்தின் புதிய தலைமை வீரியத்துடன் செயல்பட்டு வழிகாட்ட வேண்டும் என்றும், மன்றத்தின் நிதியாதாரத்தை அதிகரித்திடுவதற்கு, மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமென்றும் கூறினார்.
செயற்குழுவினர் அறிமுகம்:
பின்னர், புதிய செயற்குழு வின் அனைத்து அங்கத்தினரையும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த அவர், மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்திப் பிரார்த்தித்தார்.
மன்ற அங்கத்தினர், சமூகத்திற்காக தம்மாலான உழைப்பை வழங்கிடவும், அவரவருக்கு வழங்கப்பட்ட மன்றப் பொறுப்புகளை பிசகின்றி - உற்சாகத்துடன் செய்திட, இந்த முதற்கூட்டத்திலேயே நிய்யத் (எண்ணம்) வைத்துக்கொள்ளுமாறும், அனைத்து கூட்டங்களிலும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
புதிய தலைவர் உரை:
பின்னர், மன்றத்தின் புதிய தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆத் வரவேற்புரையாற்றினார்.
மன்றப் பணிகள் முழு வெற்றி பெற்றிட, உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, ஒத்துழைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று கூறிய அவர், அந்த எதிர்பார்ப்பை தற்காலங்களில் மன்ற அங்கத்தினர் - ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களுடன் மிகவும் சிறப்பாக நிறைவேற்றி வருவதாகவும் புகழ்ந்துரைத்தார்.
மன்றக் கூட்டங்களை நடத்திட அதற்கென நியமிக்கப்படும் ஒருங்கிணைப்பாளர்கள் திறம்பட செயல்பட்டு வருவதாகப் பாராட்டிப் பேசிய அவர், மன்றப் பணிகளை மெருகேற்றி, நகர்நலன் காத்திட, மன்றத்தின் இளைய உறுப்பினர்கள் தமக்கெழும் சந்தேகங்களை உடனுக்குடன் கேள்விகளாகவும், ஆலோசனைகளாகவும் வழங்கினால், அவற்றிலுள்ள புதிய அம்சங்களையும் இச்செயற்குழு கவனத்திற்கொண்டு வருங்காலங்களில் இன்னும் வீரியத்துடன் செயல்படும் என்றும் கூறினார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
பின்னர், நடப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.அபுல் காஸிம் சிற்றுரையாற்றினார்.
இக்கூட்டத்தை நடத்திட சில நாட்களே அவகாசமிருந்த நிலையில், கூட்ட ஒருங்கிணைப்பாளராக தான் நியமிக்கப்பட்டதாகக் கூறிய அவர், கூட்ட ஏற்பாடுகளைச் செய்கையில் தனக்குக் கிடைத்த புதிய அனுபவங்களை அனைவருடனும் ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்டார்.
இந்நாட்டின் பரபரப்பான சூழலில், போதிய அவகாசம் இல்லாத நிலையிலும் கூட, மன்றப் பணிகள் என்று வரும்போது உறுப்பினர்கள் ஆர்வத்துடன் அவற்றை குறித்த காலத்தில் செய்து முடிப்பது மிகவும் பாராட்டிற்குரியது என்றும், நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் உறுப்பினர்கள், தமது நிறுவனப் பொறுப்புகளையும், மன்றப் பொறுப்புகளையும் ஒரே கால சூழலில் சிறப்புற செய்து முடிப்பதை மிகுந்த வியப்பிற்குரியது என்றும் கூறினார்.
திட்டங்களை அறிமுகப்படுத்துவதைக் காட்டிலும், ஏற்கனவே சிரமேற்ற திட்டங்களை சிறப்புற செய்வதை முதற்பணியாகக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், கூட்டங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுவோர், வெறுமனே கூட்ட ஏற்பாடுகளைச் செய்வதோடு தம் பொறுப்பு முடிந்துவிட்டது என்று கருதி இருந்து விடாமல், மன்றப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும் என்றும் கூறினார்.
புதிய உறுப்பினர், சிறப்பழைப்பாளர்கள் அறிமுகம்:
இக்கூட்டத்தில், சிங்கைக்கு புதிதாக வந்துள்ள மூஸா ஸாஹிப், புதிய உறுப்பினராக அறிமுகம் செய்யப்பட்டார். தகவல் தொழில்நுட்பத் துறையில் நல்ல அனுபவம் கொண்ட அவருக்கு தகுந்த வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுத்திட மன்ற அங்கத்தினர் அனைவரும் தங்களாலியன்ற அளவுக்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமாய் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட - மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ் அவர்களின் சகோதரர் ஹுமாயூன், மகன் துஃபைல் ஆகியோர் கூட்டத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
உறுப்பினர் பின்னூட்டம்:
பின்னர், அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட - மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் குறித்த பின்னூட்டம் (Feedback) குறித்து, பவர் பாய்ண்ட் ஸ்லைட் ஷோ முறையில் அனைவருக்கும் விளக்கப்பட்டது.
பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், வருங்காலங்களில் சாத்தியமான அனைத்து வழிகளிலும் மன்ற செயல்பாடுகளை மெருகேற்றிச் செய்திட தீர்மானிக்கப்பட்டது.
வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கிடைக்கப் பெற்ற அனுபவங்களை, அக்கூட்டத்தின் தலைமை ஏற்பாட்டாளரும், மன்றத்தின் நடப்பு செயல்திட்ட ஒருங்கிணைப்பாளருமான எம்.என்.ஜவஹர் இஸ்மாஈல் கூட்டத்தில் விளக்கிப் பேசினார்.
பின்னர் பேசிய மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத், மன்றக் கூட்டங்களையும், குடும்ப சங்கம நிகழ்ச்சிகளையும், இயன்ற அளவுக்கு - வேறுபட்ட பல இடங்களில் நடத்திட வேண்டும் என்றும், அதற்காக சிங்கப்பூரிலுள்ள - வாய்ப்புள்ள பல நிகழ்விடங்களை, செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் அடையாளங்கண்டு மன்ற நிர்வாகத்திற்குத் தெரிவிப்பது நன்மை பயக்கும் என்று கூறினார்.
‘ஷிஃபா’வுக்கு வருடாந்திர பங்களிப்பு:
உலக காயல் நல மன்றங்களால் ஒருங்கிணைந்த முறையில் மருத்துவ உதவி வழங்குவதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கு, மன்றத்தின் சார்பில் ரூபாய் 15 ஆயிரம் தொகையை ஆண்டுதோறும் வழங்க தீர்மானிக்கப்பட்டதோடு, ‘ஷிஃபா’வுக்கான மன்றப் பிரதிநிதியாக மன்றத்தின் துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் நியமிக்கப்பட்டார்.
செயலர் உரை:
பின்னர், மன்றத்தின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து, மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் பேசினார்.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
மன்றத்தின் அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த ஏப்ரல் மாதத்தில், காயல்பட்டினத்திலுள்ள 60 ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் அவர்.
இக்ராஃ ஆயுட்கால உறுப்பினர்கள்:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள், உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பிர்களாக இணைந்துள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் இக்ராஃ நிர்வாகத்திற்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.
2ஆம் காலாண்டிற்கான நிதிநிலை முன்னறிக்கை:
பின்னர், நடப்பு 2013ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான நிதிநிலை முன்னறிக்கையை அவர் கூட்டத்தில் வாசித்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றத்தின் அப்போதைய பொருளாளரும், நடப்பு துணைச் செயலாளருமான கே.எம்.டி.ஷேக்னா லெப்பை கூட்டத்தில் சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
இனி வருங்காலங்களில், மன்றத்தின் புதிய பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய், வரும் மே மாதம் 04ஆம் தேதி முதல், மன்றத்தின் பொருளாளர் பொறுப்பை முறைப்படி ஏற்று, மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கைகளை அந்தந்த கூட்டங்களில் சமர்ப்பிப்பார் என அவர் தெரிவித்தார்.
நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு:
கல்வி, மருத்துவம் மற்றும் மனிதாபிமான உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஏற்கப்பட்டவற்றுக்கும், மன்றத்தின் ஹாஃபிழ் மாணவ/மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்காகவும், ரூபாய் 2 லட்சத்து 7 ஆயிரம் தொகை நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி மூலம் இத்தொகைகள் முறைப்படி அந்தந்த இடங்களில் சேர்ப்பிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒருநாள் ஊதிய நன்கொடையாளர்களுக்கு நன்றி:
மன்றத்தின் ஒருநாள் ஊதிய நன்கொடை வழங்கும் திட்டத்தின் கீழ், வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது, தமது ஊதியங்களின் ஒரு பகுதியை ஆர்வத்துடன் நன்கொடையாக வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃவுடன் நெருங்கிய தொடர்பு:
இக்ராஃ கல்விச் சங்கத்துடனான மன்ற நடவடிக்கைகளை உடனுக்குடன் செய்திட வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அந்நிர்வாகத்துடன் இடைவெளியில்லாத - நெருங்கிய தொடர்பை வைத்துக்கொள்ளுமாறு மன்றத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.என்.ஜவஹர் இஸ்மாஈல் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
உடனுக்குடன் தகவல் பரிமாற்றம்:
மன்றத்தின் பலதரப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் குறித்த தகவல்களை, புதிய செயற்குழுவிற்கும், துணைக்குழு உறுப்பினர்களுக்கும் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள, மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் தலைமையில் குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. வழங்கப்பட்ட பொறுப்புகள் அனைத்தும் குறித்த காலத்தில் நிறைவேற்றி முடிக்கப்பட, மன்றத்தின் துணைக்குழு உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டது.
உறுப்பினர் விபரத் திரட்டு:
மன்ற உறுப்பினர்களின் பணியிட மற்றும் சுய விபரங்கள் குறித்த தரவுகளை (database)ப் பதிவு செய்திடுவதற்காக, மன்ற உறுப்பினர் சோனா முஹம்மத் அபூபக்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இதுவரை செய்து முடிக்கப்பட்டுள்ள இது தொடர்பான நடவடிக்கைகளை கூட்டத்தில் பகிர்ந்துகொண்டது.
சிங்கப்பூருக்கு புதிதாக வரும் காயலர்கள் தகுந்த வேலைவாய்ப்புகளை விரைவாகப் பெற்றிட இந்த தகவல் திரட்டு மிகுந்த பலனளிக்கும் என்று கருதியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மகளிரை ஊக்கப்படுத்த செயல்திட்டம்:
நடைபெற்று முடிந்த - மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்ட நிகழ்வின்போது, விவாதிக்கப்பட்ட அடிப்படையில், மகளிரை ஊக்கப்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மகளிர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்து, அதில் அவர்கள் விவாதித்து அளிக்கும் ஆலோசனைப் படி செய்துகொள்ளலாம் என, மன்றத்தின் துணைத்தலைவர் முனைவர் எம்.என்.முஹம்மத் லெப்பை கூறிய ஆலோசனை ஏற்கப்பட்டது.
அதனடிப்படையில், மகளிருக்கான முதல் ஒன்றுகூடல் நிகழ்ச்சியை, 2013 மே மாதம் 03ஆம் தேதியன்று, ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
திருக்குர்ஆன் மனன திறந்த நிலைப் போட்டி:
சிங்கப்பூரிலுள்ள பள்ளிவாசல்களின் இமாம்களை கண்ணியப்படுத்திடும் பொருட்டு, ஹாஃபிழ்கள் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில், திருக்குர்ஆன் மனனப் போட்டியொன்றை, சிங்கையிலுள்ள சில பள்ளிவாசல்கள் அல்லது அமைப்புகளுடன் இணைந்து நடத்திடலாம் என கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. இதுகுறித்து, மன்ற செயற்குழு ஆய்ந்தறிந்து முடிவுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம்:
வரும் மே மாத செயற்குழுக் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராக, உறுப்பினர் ஜெ.எஸ்.தவ்ஹீத் நியமிக்கப்பட்டார்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் துஆவுடன், 21.45 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்து லில்லாஹ்.
இரவுணவு விருந்துபசரிப்பு:
இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பழைப்பாளர்கள், துணைக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இடியாப்பம், கோழிக் கறி, ஜவ்வரிசி உள்ளிட்ட பதார்த்தங்களை உள்ளடக்கி, இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |