காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மீது 11 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் (ஆர்.டி.எம்.ஏ.) காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர இதர 17 உறுப்பினர்களும், கடந்த மார்ச் மாதம் 08ஆம் தேதியன்று கடிதம் அளித்திருந்தனர்.
அதனடிப்படையில், நடப்பு ஏப்ரல் மாதம் 05ஆம் தேதியன்று சிறப்புக் கூட்டம் நடத்தி, அம்மனு குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் டி.மோகன் அறிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு மீதான விசாரணை இம்மாதம் 01ஆம் தேதி நடைபெற்று, பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும், இம்மாதம் 03ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது.
இறுதியில், நகர்மன்றத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்று கூறி, இம்மாதம் 5ஆம் தேதியன்று நடைபெறவிருந்த - நகர்மன்றத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த சிறப்புக் கூட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், நகர்மன்றத் தலைவருக்கெதிராக கடந்த மார்ச் மாதம் 08ஆம் தேதியன்று தாங்கள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மான அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்வதாக, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மேற்படி 17 உறுப்பினர்களும் தெரிவித்துள்ளதாகவும்,
அதனடிப்படையில், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரால் இம்மாதம் 05ஆம் தேதி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த சிறப்புக் கூட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் டி.மோகன் கைச்சான்றிட்ட கடிதம், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பின்வருமாறு அளிக்கப்பட்டுள்ளது:-
இவ்வாறு அக்கடிதம் அமைந்துள்ளது.
தகவல்:
M.S.M.ஷம்சுத்தீன்
13ஆவது வார்டு உறுப்பினர்
காயல்பட்டினம் நகராட்சி |