பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31-ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் வசுந்தராதேவி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு மே 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கும், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கும் வெளியிடப்படும்.
தமிழகம்-புதுவையில் பிளஸ் 2 தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. மொத்தம் 8.5 லட்சம் பேர் தேர்வை எழுதினர். விடைத் தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2 வது வாரத்தில் நிறைவடைந்தது.
இந் நிலையில், எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகியவற்றை இந்த ஆண்டுமுதல் முன்கூட்டியே முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து பி.இ. சேர்க்கை விண்ணப்பம் மே 4-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். எம்.பி.பி.எஸ். சேர்க்கை விண்ணப்பம் மே 9-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழகம்-புதுவையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. 10.68 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.
விடைத் தாள் திருத்தும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது. மே 31-ஆம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.
பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசின் இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்பட உள்ளன. இதற்கான இணையதளங்களின் பட்டியலை விரைவில் வெளியிட தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
தனியார் இணையதளங்களுக்கு பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அளிக்கப்பட மாட்டாது என்று தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.
தகவல்:
தினமணி |