மருத்துவ உதவிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்திடுவதற்காக விவாதிக்கப்பட்டு வரும் ‘ஷிஃபா’ செயல்திட்டத்தில் இணையவும், அதன் நிர்வாகச் செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூபாய் 15 ஆயிரம் தொகையை பங்களிப்புச் செய்திடவும், மலபார் காயல் நல மன்ற (மக்வா) பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் 10ஆவது பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணியளவில், கேரள மாநிலம் - கோழிக்கோடு நெய்னா காக்கா இல்ல மொட்டை மாடியில், மன்றத் தலைவர் மஸ்ஊத் தலைமையில் நடைபெற்றது.
தேனீர் - சிற்றுண்டி:
துவக்கமாக அனைவருக்கும், தேனீர் - சிற்றுண்டி வழங்கியுபசரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, செயற்குழு உறுப்பினர் முஹம்மத் ரஃபீக் மகள் ஜஹ்ரா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். துணைச் செயலாளர் என்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
பின்னர், கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை, செயலாளர் உதுமான் லிம்ரா வாசித்து, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
தலைமையுரை:
பின்னர், மன்றத் தலைவரும் - கூட்டத் தலைவருமான மஸ்ஊத் தலைமையுரையாற்றினார்.
நோய்கள் வந்த பின் சிகிச்சைக்கு அலைவதை விட, வருமுன் காக்கும் விஷயத்தில் நம் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இருத்தல் வேண்டும் என்று கூறிய அவர், மன்றம் தொய்வின்றி சிறப்புற செயல்பட, உறுப்பினர்கள் தன்னார்வத்துடன் மாதச் சந்தா தொகையை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
நகர்நலனை அடிப்படை நோக்கமாகக் கொண்டே மக்வா செயல்பட்டு வருவதாகவும், இனியும் சிறப்புற செயலாற்றவுள்ளதாகவும் கூறிய அவர், ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டம் ‘ஷிஃபா’ குறித்து விளக்கிப் பேசியதுடன், இச்செயல்திட்டத்தில் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறினார்.
‘ஷிஃபா’வில் இணைவது குறித்து பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுப்பதென கடந்த செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையிலேயே தற்போது விவாதிக்கப்படுவதாகவும், இப்பொதுக்குழுவில் யாரேனும் இவ்விஷயத்தில் மாற்றுக்கருத்து கொண்டிருந்தால், அதை அவர்கள் தெரிவிக்கும் பட்சத்தில் மறுபரிசீலனை செய்யலாம் என்றும் அவர் கூறி, தனதுரையை நிறைவு செய்தார்.
தொழுகை இடைவேளை:
பின்னர், மஃரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது. மஃரிப் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
செயலர் உரை:
பின்னர், மன்றச் செயலாளர் உதுமான் லிம்ரா உரையாற்றினார்.
ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டம் ‘ஷிஃபா’ குறித்து, தான் உள்ளிட்ட பலரால் ஸ்கைப் மூலம் விவாதிக்கப்பட்டமை குறித்தும், அந்த உரையாடலில், இச்செயல்திட்டம் குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் விளக்கியது குறித்தும் விவரித்துப் பேசினார்.
நமது மக்வா அமைப்பு ஏற்கனவே மருத்துவ உதவித் திட்டங்களை செய்து வருகிறது என்றாலும், ‘ஷிஃபா’ மூலம் ஒருங்கிணைந்து செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அவர் விளக்கிப் பேசினார்.
ஒருங்கிணைந்த முறையில் மருத்துவ உதவிகளைச் செய்வதற்காக மட்டுமே ‘ஷிஃபா’ துவக்கப்படுவதால், அதில் மக்வாவும் இணையலாம் என்றும், ஒருங்கிணைந்து மருத்துவ உதவிகளைச் செய்வதால், பயனாளிகள் நிறைவான பலனைப் பெற்றிடுவர் என்றும் அவர் கூறினார்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
பின்னர், உறுப்பினர் கருத்துப் பரிமாற்றத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்து அவர்கள் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொண்டனர். கருத்துப் பரிமாற்றத்தின்போது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மன்ற நிர்வாகத்தின் சார்பில் தலைவரும், செயலாளரும் விளக்கமாக பதிலளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - ’ஷிஃபா’வில் இணைய இசைவு:
உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டம் ‘ஷிஃபா’வில் உறுப்பினராவதற்கு இக்கூட்டம் இசைவு தெரிவிக்கிறது.
தீர்மானம் 2 - ’ஷிஃபா’ நிர்வாகச் செலவினத்திற்கு பங்களிப்பு:
‘ஷிஃபா’வின் நிர்வாகச் செலவினங்களுக்காக, ஓராண்டுக்கு ரூபாய் 15 ஆயிரம் தொகை மக்வா சார்பில் அளித்திடுவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 – உறுப்பினர் மாதச் சந்தா:
மன்ற உறுப்பினர் மாதச் சந்தா தொகையை அதிகரிக்கலாம் என பரவலாக மன்றத்தால் ஆலோசனை பெறப்பட்டது. எனினும், மன்ற உறுப்பினர்களுள் - பொருளாதாரத்தில் கடைநிலையிலுள்ளவர் கூட எளிதாக சந்தா தொகையை வழங்கிடும் வகையில், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ரூபாய் 100 தொகையில் தற்போதைக்கு எவ்வித மாற்றமும் செய்வதில்லை என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட மாதச் சந்தாவை விட அதிகளவில் செலுத்த விரும்பும் உறுப்பினர்கள் மாதந்தோறும் தமது கூடுதல் தொகையை நன்கொடையாக மன்றத்திற்கு செலுத்தி உதவலாம் என இக்கூட்டம் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறது.
தீர்மானம் 4 – கணக்குத் தணிக்கையாளர் நியமனம்:
மன்றத்தின் புதிய கணக்குத் தணிக்கையாளராக, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.இ.எம்.மொகுதூம் அப்துல் காதிர் அவர்களை இக்கூட்டம் நியமிக்கிறது.
தீர்மானம் 5 – மருத்துவ உதவி:
மன்றத்தின் 54ஆவது செயற்குழுக் கூட்டத்தின்போது, மருத்துவ உதவி கோரி காயல்பட்டினத்திலிருந்து பெறப்பட்ட 2 மனுக்கள் விசாரிக்கப்பட்டு, அவற்றுக்காக ரூபாய் 20 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் யு.எல்.செய்யித் அஹ்மத் நன்றி கூற, அனைவரின் துஆவுடன் - இரவு 08.45 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்து லில்லாஹ்!
இவ்வாறு மலபார் காயல் நல மன்ற (மக்வா) செய்தி தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |